சீருடை என்றாலே ஒரு மிடுக்கு தான்.
என்னதான் பெண்கள் விதவிதமாக உடுத்திக் கொண்டாலும், சீருடை தரும் கம்பீரம், பெருமை, அதிகாரம் வேறு உடைகள் தருவதில்லை.
காவல்துறை, தபால் துறை, போக்குவரத்துத்துறை போன்ற அரசுத்துறைகளில் பணி புரியும் பெண்கள் மட்டுமன்றி, ஆட்டோ,கனரக ஓட்டுநர், பைக் டாக்ஸி ஓட்டுபவர்கள். உணவு டெலிவரி செய்பவர்களும் அழகாக சீருடை அணிந்து சேவை செய்கிறார்கள்.
மகளிர் தினத்தை முன்னிட்டு இவர்களை சந்திக்க சென்னையில் ஒரு ரவுண்ட் அப் சென்றோம். நாம் சந்தித்த அனைவருமே தங்களின் அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
முதலாவது காவல் துறை
சென்னை (அண்ணாசாலை, தேனாம்பேட்டை, கதீட்ரல் சாலை, புரசைவாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, மாதவரம் மூலக்கடை சாலை மற்றும் புறநகர் பகுதிகள்)
ரோந்து மற்றும் போக்குவரத்து பெண் காவலர்களிடம் பேசுகையில், “பீக் அவர்ஸ் நேரங்களில் தாறுமாறாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தி, டிராபிக் சிக்னலின்படி வாகனங்களை நெரிசலின்றி வரிசையாக அனுப்புவது கஷ்டமாக இருந்தாலும், இப்பணிகளை மகிழ்ச்சியுடன் செய்வதில் எங்களுக்கு திருப்தியுடன், ஒருசில நிமிடங்களில் உயர் அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். அதுவும் நாங்கள் சீருடையில் விசாரிக்கும்போது, எங்களின் குரலில் தானாகவே கம்பீரம் வந்துவிடுகிறது. எங்களிடம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மரியாதையுடன் உரிய விவரங்களைத் தந்து உபசரிப்பதுடன், பாதுகாப்பாக உடனிருந்து வழியனுப்பி வைக்கின்றனர்.
தவிர பல்வேறு விசாரணைகளுக்காக நீண்ட தூரம் அலைந்து திரிவதில் எங்களுக்கு களைப்பு ஏற்படும். இதில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து, போதிய ஆதாரங்களுடன் விசாரணையை முடிக்கும்போது, களைப்பை மீறி குதூகலமாக மாறிவிடும். இந்த கஷ்டமான பணிகளை நாங்கள் அனைவரும் விரும்பி செய்வதுடன், புதிதாக பணிக்கு வரும் பெண் காவலர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி!” என்று அனைத்து பெண் காவலர்களும் ஒருமித்த குரலில் மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர்.
அடுத்து ரேபிடோ, ஓலா மற்றும் சில தனியார் நிறுவன வாடகை இருசக்கர வாகனங்களை ஓட்டிவரும் பெண் டிரைவர்களிடம் பேச்சு கொடுத்தோம்.
அவர்கள், “முன்பு தனியார் நிறுவன ஆப் மூலம் பதிவு செய்யும் பெண் பயணிகளை, இருசக்கர வாகனங்களில் ஆண் டிரைவர்கள் அழைத்து செல்வதில் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால் பெண்களிடையே பைக் டாக்சிக்கு மவுசு குறைந்தது. இதைத் தொடர்ந்து, தனியே செல்லும் பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி, தனி ஆஃப் உருவாக்கி, அதில் பதிவு செய்யும் பெண்களை ஏற்றிச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளாக நாங்கள் பணியில் சேர்ந்தோம். எங்களுக்கு குறிப்பிட்ட நேர இடைவெளியில் முன்பதிவு பெண் பயணிகளை ஏற்றி செல்லும்போது வேலைப்பளு அதிகரிக்கும். எனினும் ‘கூடுதல் வருவாய் கிடைக்குமே, வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாமே’ என்ற மகிழ்ச்சியுடன் இப்பணி செய்து வருகிறோம்!” என்றனர்.
இதேபோல் ஏராளமான பட்டதாரி பெண்களும் வாடகை ஆட்டோவை ஓட்டி, போதிய வருவாய் ஈட்டி வருகின்றனர் . இவர்கள் சுயசார்புடன் வாழ்க்கையில் முன்னேறி செல்ல , பெண்களுக்கு தனியே பிங்க் நிற ஆட்டோவை தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பிக்கும் இளம்பெண்களுக்கு வங்கி கடனுதவியுடன் மானிய விலையில் ஆட்டோக்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.இதனால் தன் சொந்த ஆட்டோவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பெண் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுடன் , பிங்க் நிற சீருடையில் பெண் டிரைவர்கள் ஓட்டுவது கண்கொள்ளாக் காட்சி..
அடுத்து நாம் தபால் துறை ஊழியரை சந்தித்தோம்
சென்னை தி.நகர், மயிலாப்பூர், வடபழனி, தாம்பரம் தபால் நிலையங்களில் பட்டுவாடா பிரிவில் சீருடையுடன் கம்பீரமாக வேலை பார்க்கும் பெண்களிடம் பேச்சு கொடுத்தோம்.
அவர்கள் சொல்வது “எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட முகவரியில் சம்பந்தப்பட்ட நபரிடம் பார்சல் அல்லது கடிதங்களை கொடுக்கும் பணி கஷ்டமானதுதான். குறிப்பிட்ட முகவரியில் சம்பந்தப்பட்ட நபர் இல்லையெனில், மற்றொரு முறை அலைய வேண்டியிருக்கும். இதையும் நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறோம். ஏனெனில், நாங்கள் சீருடையுடன் கடிதங்கள், பார்சல்கள் எடுத்து செல்லும் பணியில் இருக்கும்போது, மக்கள் மரியாதையுடன் நடத்தி உபசரிக்கின்றனர். இதில் எங்களின் வேலைப்பளு தூசாகப் பறந்துவிடும். மேலும், நாங்கள் சுயமாக சம்பாதிக்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது" என்கிறார்கள் .
மேலும் ,"எங்களுக்கு விருப்பமான பொருட்களை பிறரை எதிர்பார்க்காமல் வாங்க முடிகிறது. குடும்ப வருவாய் அதிகரிப்பிலும் இன்னபிற திடீர் செலவுகளுக்காக கணவருக்கு உறுதுணையாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். சீருடையுடன் பணிபுரியும் எங்களுக்கு மக்கள் அளிக்கும் மதிப்பு மற்றும் மரியாதையே, வேலைப்பளுவை மறக்க வைத்து ஆர்வத்துடன் பணி செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது!” என்று சென்னை நகர தபால் பட்டுவாடா பிரிவு பெண்கள் குதூகலத்துடன் தெரிவித்தனர்.
தென் மாவட்ட பகுதிகளான நெல்லை, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி உள்பட ஒருசில இடங்களில் குறிப்பிட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளை பெண் டிரைவர்கள் ஓட்டி வருகின்றனர். சென்னை நகரில் மகளிர் ஸ்பெஷல் மாநகர பேருந்துகளில் ஒருசில பெண் கண்டக்டர்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர்.
நாம் சந்தித்த சீருடைப் பெண்கள் அனைவரும் தங்கள் வேலையை நேசித்து , அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள் . இதனால் குடும்பத்துக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
சீருடை அணிந்த பெண் சக்தி , மாபெரும் சக்தியாக நம் தமிழகமெங்கும் வியாபித்துள்ளது. அவர்கள் சிங்க பெண்களாக நடை போட்டு வருகிறார்கள்.
அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விகடகவி சார்பில் மகளிர் தின வாழ்த்துக்கள்
Leave a comment
Upload