தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
விமானப்படையின் முதல் பெண் விமானி -தனுஷ்கா சிங் -மாலாஸ்ரீ 
20250207192838798.jpg
காற்றிலேறி விண்ணையும் சாடும் வாய்ப்பு பெற்றுள்ளார் இந்திய விமானப்படையின் பெண்கள் .
அவர்களுள் தனுஷ்கா சிங், தற்போது ஜாகுவார் போர் விமானத்தில் முதன்முறையாக நிரந்தர பெண் விமானியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய விமானப் படையின் போர் விமானப் பறக்கும் படையின் ஃப்ளையிங் ஆபீசராக இருந்தவர் உத்தரப் பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் விமானி தனுஷ்கா சிங்கின் தந்தை, ஓய்வுபெற்ற ராணுவ லெப்டினன்ட் கர்னல் அஜய் பிரதாப் சிங்.
அது மட்டுமல்ல, இவரது தாத்தா, இந்திய ராணுவ ஆயுதப்படை பிரிவில் பணியாற்றியவர். சிறுவயதிலிருந்தே படிப்பில் சிறந்து விளங்கிய தனுஷ்கா சிங், உ.பி-யில் பள்ளி படிப்பை முடித்துள்ளார், மங்களூரில் கல்லூரி படிப்பின்போது அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட தனுஷ்கா சிங், கடந்த 2022-ம் ஆண்டு மணிபால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பட்டம் வென்றுள்ளார்.
இந்தியாவுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பிய தனுஷ்கா சிங், முதலில் இந்திய ராணுவ ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்துள்ளார். இதைத் தொடர்ந்து இவர், விமானப்படையில் பெண்களுக்கான வாய்ப்புகள் மூலம் ஊக்குவிக்கப்பட்டார். மேலும், இந்திய விமானப்படை விமானியாகும் லட்சியத்தையும் தனுஷ்கா சிங் வளர்த்துக் கொண்டார்.
செய்முறை தேர்வில் வெற்றி பெற்ற தனுஷ்கா சிங், திண்டுக்கல் விமானப்படை அகாடமியில் தீவிர பயிற்சியைத் தொடங்கினார். இதில் ராணுவ விமானப் போக்குவரத்தை சார்ந்து திறமைகளை வளர்த்துக் கொண்டார். கூடுதலாக, ஓராண்டு சிறப்புப் பயிற்சிக்கு பின், ஹாக் எம்கே-132 போர் விமானத்தை இயக்குவதில் தனுஷ்கா சிங் தேர்ச்சி பெற்றார். தற்போது இந்திய ஜாகுவார் போர் விமானப் படை பிரிவில் முதல் நிரந்தர பெண் விமானியாக தனுஷ்கா சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
முன்னதாக பிற பெண் விமானிகள் அனுபவத்துக்காக ஜாகுவார் போர் விமானத்தை ஓட்டியிருந்தாலும், அந்த விமானத்தை நிரந்தரமாக இயக்குவதற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் விமானி தனுஷ்கா சிங்தான் எனக் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பெண் விமானி தனுஷ்கா சிங் கூறுகையில், “முதல் பயிற்சி விமான பயணத்தில் நான் பயத்துக்குப் பதிலாக, அதிகளவு மகிழ்ச்சி ஏற்பட்டது. இதுதான் நான் விரும்பிய வாழ்க்கை என்பதையும் உணர்ந்தேன்." என்கிறார்
"ஆயுதப் படைகளில் இணைய விரும்புவோருக்கு தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் தலைமைத்துவ திறன்கள் முக்கியம். இவற்றை மனதில் கொண்டவர்கள் தைரியமாக களமிறங்கலாம். நமது கனவுகளை நனவாக்குவதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்!’’ என்றும் தனுஷ்கா சிங் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மேலே மேலே பறந்து செல்லுங்கள் தனுஷ்கா .வானம் வசப்படட்டும்