இந்திய பேரரசர்களில் அக்பரை போல, புகழ்வாய்ந்த ஹோல்கர் வம்சத்தின் பேரரசியான மராட்டிய பேரரசின் இந்தூர் அரசை ஆட்சி செய்த ராணி யார்?
மால்வா பிரதேசத்தின் அதிபரும், பேஷ்வா பாலாஜி ராவின் மராட்டியப் படையின் தளபதியுமான மல்ஹர் ராவ் ஹோல்கர்,.
ஒரு முறை தனது கிராமத்தின் கோயில் சேவைக்கு போன போது அங்கே 8 வயதான அஹில்யாபாயை கண்டு, பிடித்துபோய் 10 வயதுடைய தனது மகன் கண்டேராவ் உடன்திருமணம் செய்வித்தார்.
தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் பிறந்த நிலையில்,
1754 ஆம் ஆண்டு கும்பேர் போரில் அஹில்யாவின் கணவர் கண்டேராவ் பீரங்கித் தாக்குதலால் கொல்லப்பட்டார்.
அக்கால மரபுகள் படி சதி தீயில் அஹில்யாபாயை தள்ள அனைவரும் தயாராக, அதனை எதிர்த்தார் அஹில்யா.
மாமனார் மல்ஹர் ராவும் அதை தடுத்து நிறுத்தினார்.
சிறிது காலம் கழித்து அவர் அஹில்யாவுக்கு அரசியல் மற்றும் போரில் பயிற்சி அளித்தார்.
பிறகு மல்ஹர் ராவ்1766 இல் இறந்து, அஹில்யாபாயின் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் மலேராவ் , ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள் இறந்தும் போனார்.
கணவர், மாமனார், மகன் என அனைவரும் இறந்து, ஆண் வாரிசு இல்லாத நிலையில், ஆட்சிப் பொறுப்பில் இருந்த அஹில்யாபாய்க்கு ஹோல்கர்குலத்திலிருந்து ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து அரியணையில் அமர்த்துமாறு நெருக்கடி கொடுத்தார் அமைச்சர் கங்காதர் ஜேஷ்வந்த்.
முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுக்க அந்த அமைச்சர் போட்ட சதி திட்டம் என அஹில்யா புரிந்துகொண்டு, மற்ற மராட்டியத் தலைவர்களிடம் தனது உரிமையை கோரி உதவி கேட்டார் .
அனைத்து தலைவர்களும் அஹில்யாபாய் பெண் என்பதால் நியாயப்படி ஆட்சி செலுத்த அவருக்கு உரிமையில்லை என உதவ மறுத்துவிட, பேஷ்வாவின் மன்னர் பாலாஜி ராவ் மட்டும் அஹில்யாவை அங்கீகரித்து அவரது ஆட்சியை உறுதிசெய்தார்.
அதிகாரப்பூர்வமாக ஆட்சியை ஏற்ற அஹில்யாபாய், தனது மாமனார் மல்ஹர் ராவின் வளர்ப்பு மகன் துகோஜி ராவ் ஹோல்கரை, போர்ப்படையின் தளபதியாகவும், மற்றும் தனது போர்ப்படையை நான்கு பட்டாலியன்களாக பிரித்து, படையை நவீனமயமாக்க உதவுவதற்காக1792 ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர் செவெலியர் டுட்ரெனெக்கையும் நியமித்தார்.
இதுப்போன்ற ராஜதந்திரங்களும், மேம்பட்ட நிர்வாக திறனில், ஆட்சி உள்கட்டமைப்பில் அவர் சிறந்து விளங்கியதால் அவரது ஆட்சி அமைதி, ஸ்திரத்தன்மை , முன்னேற்றம் அடைந்ததில், ராணி அஹில்யாபாயின் ஆட்சி ஹோல்கர் வம்சத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது.
இந்திய மகாராணிகள் பட்டு பீதாம்பரங்களும், தங்க, வைர நகைகளும் ஜொலிஜொலிக்க, வலம் வந்த காலக்கட்டத்தில், ராணி அஹில்யாபாய் சாதா உடைகளை அணிந்து மேலே வெறும் ஒரு வெள்ளை நிற சால்வையை போர்த்திக்கொண்டு மக்களுடன் மக்களாய் தண்ணீர் தொட்டியில் நீர் எடுப்பது, விவசாய வேலைகளை செய்வது பொதுகிணறு தோண்டுவது என வேலைகள் செய்து கொண்டிருந்தார்.
வீரத்திலும் ஜான்சிராணிப்போல அவரது சேனையின் ஒவ்வொரு வீரருக்கும், தனிப்பட்ட முறையில் ஆயுதப் பயிற்சி வழங்கினார்.
ஒரு போரில் அவரே குதிரை ஏறி போர்முனையில் நின்று போராடிய வீரம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்தது.
பெண்ணுரிமை என்பதே என்னவென்று அறியாத 18 ஆம் நூற்றாண்டின் காலக்கட்டத்தில் அஹில்யாபாய் “சதி” போன்ற வழக்கங்களை ஒழிக்க போராடியது மட்டுமன்றி விதவை மறுமணத்தை ஊக்குவித்தது, ஒரு பெரிய சமூக புரட்சி. பணிப்புரியும் பெண்களுக்குள்ள உரிமையை பாதுகாத்தார்.
அந்தக் காலத்தின் மற்றொரு விதிமுறையான பர்தா (பெண்களைத் தனிமைப்படுத்துதல்) என்ற வழக்கத்தைக் அஹில்யாபாய் கடைப்பிடிக்கவில்லை.
தனது அமைச்சரவையில் பெண் தலைவர்களை நியமித்து “பெண்களை அரசியலில் இணைத்த முதல் இந்திய அரசியலாளர்” ஆனார்.
அவரது ராணுவப்படையில் பெண்களுக்கு போர்ப்பயிற்சியளித்தார்.
ராஜவம்சத்தில் பிறந்தவர்களுக்கு இன்னொரு ராஜவம்சத்தில் பெண் எடுப்பது, கொடுப்பது என அந்தக் கால வழக்கத்திற்கு மாறாக, அஹில்யாபாய் தனது மகளை தனது ராணுவப்படையின் சாதாரண போர்வீரருக்கு திருமணம் செய்து வைத்தார்.
மகேஷ்வரில் ஒரு ஜவுளித் தொழிலை அவர் நிறுவியதாகக் கூறப்படுகிறது, இன்றும் கூட இந்தியாவில் நெய்யப்படும் மகேஷ்வரி புடவைகள் அவரது பெயரை பறைச்சாற்றுகிறது.
இந்தூர், மகேஷ்வர், ஒம் காரேஷ்வர் போன்ற நகரங்களை வர்த்தக மற்றும் கைத்தறி உற்பத்தியில் முன்னணிக்கு கொண்டு வந்தார்.
உற்பத்தி பொருள்களுக்கு சிறந்த சந்தைகள், வணிக நிறுவனங்களை உருவாக்கினார். அத்துடன் வரிவசூல் முறைகளில் விவசாயிகளுக்கு அதிகம் வரி விதிக்காததுடன், அவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கினார்.
இதன்மூலம் மால்வா மாநிலம் செழிப்புற்றது.
ஒவ்வொரு ஊரிலும் பள்ளிகள், மருத்துவமனைகள், குடிநீர் வசதிகள், அணைகள், சாலைகள், பாலங்கள் போன்றவைகளை கட்டினார்.
மக்களின் குறைகளை தினமும் நேரில் கேட்பது, குடிமக்களின் தகராறுகளை தீர்க்க நீதி மற்றும் நடுவர் மன்றங்களை நிறுவியது என அஹில்யாபாய் தனது ஆட்சியை சமூக நீதியுடன் ஆண்டார்.
அவரது நீதித் துறை, குற்றவாளிகளை தண்டிப்பதில் மிகவும் கடுமையாக இருந்தது.
இந்தியாவில் இன்று கோடிக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து வழிப்படும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில், குஜராத்தின் சோம்நாத் கோயில், உஜ்ஜயினி மகாகாளேஷ்வர் கோயில், துவாரகாதீசர் கோயில் என அன்னிய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டினார்.
கயை விஷ்ணுபாத கோயில், நாசிக் திரியம்பகேஸ்வரர் கோவில் , மற்றும் பரளிவைத்தியநாதர் கோயில், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் என ஏராளமான கோயில்களை புதுப்பித்தார். இப்படி இந்தியாவின் பல புனித தலங்களை மீட்டெடுத்த இந்தியாவின் ஆன்மீக பேரரசி இவரே.
அடுத்த முக்கியமான விஷயம் இன்று மத்திய அரசின் அமைச்சகம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ அதைப்போன்றே தனது நிர்வாகத்தை ஒவ்வொருத்துறையாக பிரித்து அதற்கு தனி அமைச்சர்களை நியமித்து தலைமைப்பொறுப்பை பிரதமர் பதவி போல் வடிவமைத்து ஆட்சி செய்தது ஆச்சரியத்திற்குரியது.
நிதி, வரி, நீதி, சட்டம், குடியுரிமை, தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் ஒரு நவீன அரசியல் அமைப்பை கொண்டு வந்தார்.
அவ்வகையில் அஹில்யாவை இந்தியாவின் முதல் பெண் பிரதமராக கருதலாம்.
அவரது நிர்வாக முறைகள் இன்றும் கூட ஒரு ஜனநாயக நாட்டின் சிறந்த கையேடாக பார்க்கப்படுகின்றன. ஆனால் அதை மன்னராட்சியின் வழியில் வந்த ஒரு இந்திய அரசி செய்தார் என்பது தான் எவ்வளவு அழகிய ஒரு முரண்பாடு!?
1827 முதல் 1830 வரை பம்பாய் மாகாணத்தின் பிரிட்டிஷ் ஆளுநராக இருந்த ஜான்மால்கம், தனது " எ மெமயர் ஆஃப் சென்ட்ரல் இந்தியா" என்ற புத்தகத்தில் ராணி அஹில்யாபாய்பற்றி எழுதியுள்ளார்.
ஜவஹர்லால் நேரு தனது டிஸ்கவரி ஆஃப் இந்தியா" யில் அவரை "இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பெண்" என்று விவரிக்கிறார்.
ராணி அஹில்யாபாய் தனது 70தாவது வயதில் (13 ஆகஸ்ட் 1795), மறைந்த போது முழு மால்வா பகுதியே அழுது புரண்டது. ராணி அஹில்யா வாழும்போது பேரரசி என்ற மரியாதையுடனும், அற வழியில் மக்களை வழிநடத்தியதால் இறந்தப்பின் மிகச்சிறந்த ஞானி போலவும் கருதப்பட்டார்.
அவர் ஒரு திறன்வாய்ந்த பெண் அரசியல்வாதி, மிகச்சிறந்த நிர்வாகி, நேர்மையான ஆட்சியாளர் , போர்த் தளபதி, தர்மசேவகி, சமூக சீர்திருத்தவாதி என சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்திய வரலாற்றில் ஒரு சிறப்பான அத்தியாயம் அவரது ஆட்சிக்காலம்.
ஒரு பெண் நினைத்தால் எத்தகைய கட்டுப்பாடுடைய சமூகத்திலும் அதன் இரும்பு சுவர்களை தகர்த்தெறிந்து , தலைமை பொறுப்பில் ஆணுக்கு நிகராக அமர்ந்து, தன் மக்களை காப்பாள் என்பதற்கு பேருதாரணமாக திகழ்கிறார் ராணி அஹில்யாபாய்.
பெண் மகாசக்தி என்பதில் எம்குலத்திற்கு பெருமையே!
Leave a comment
Upload