இணைய உலகம் விரிய விரிய மனித மனம் சுருங்கி வரும் காலம் இது !
நீங்கள் விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் உங்கள் கண்களுக்கும், சிந்தனைக்கும் தகவல்களை கொட்டிக் கொடுக்கும் 'தகவல் யுகம்' இது.
புத்தகங்களைத் தேடித்தேடி படித்த தலைமுறை மறைந்து விவரங்களை விரல் நுனியில் தேடும் தலைமுறை பிறந்து விட்டது.
கதை படிக்கவும் , கவிதை சொல்லவும் இங்கு நேரம் இல்லை.
வாழ்வின் மதிப்பீடுகளை , விழுமியங்களை உணர்த்தவும் , வாழ்வியல் அறத்தைக் கற்றுத்தரவும் இங்கு சமூக வலைத்தளங்களில் சிலர் முன்னெடுப்பு செய்துள்ளனர்.
அவர்களில் முக்கியமான பெண் ஆளுமை பூங்கொடி பாலமுருகன்.
'கதை சொல்லி' பூங்கொடியாக அறியப்படும் இவர் பன்முகத் திறமை வாய்ந்தவர் .
நல்ல கதை சொல்லி . சிறுகுழந்தைகளுக்கு கதை சொல்ல துவங்கி இன்று பிரபல எழுத்தாளர்களின் கதைகளை யூட்யூப் வழியாக பெரியவர்களுக்கும் அழகாக விவரிக்கிறார்.
சிறந்த பேச்சாளர். பள்ளி, கல்லூரிகளுக்கு நேரில் சென்று நல் வழிப்படுத்தவும் , சமூகப் பொறுப்புணர்வை தூண்டவும், தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்தி தன்னம்பிக்கையை விதைக்கவும் தூண்டுகோலாக இருக்கிறார்.
நல்ல எழுத்தாளர். குழந்தைகளுக்காக சில புத்தகங்களை எழுதியுள்ளார் .அவற்றுள் 'என்னைத்தொடாதே ' என்னும் நூல் மாணவரிடையே பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த எழுதப்பட்டுள்ளது. பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்நூல் , இக்கால கட்டத்துக்கு தேவையான நூல்.
நல்ல அன்னை ; தன் குழந்தைகளைப் போலவே எல்லா பிள்ளைகளையும் பாவித்து நன்னெறியில் நடத்த இரவும் பகலும் சிந்திப்பவர் , செயலாற்றுபவர்.
மொத்தத்தில் நாம் சமுதாயத்தில் ஏற்படுத்த விரும்பும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்ட முனைப்புடன் செயல் படும் சமூக போராளி .இந்த மகளிர் தினத்தில் கொண்டாடப் பட வேண்டிய சிறந்த பெண்மணி
அடிப்படையில் பொறியியல் முடித்து கல்லூரி விரிவுரையாளராக பணி செய்தவர், 'கதை சொல்லி'யாக பயணிக்கும் கதையை விகடகவி சார்பாக நாம் கேட்க அவர் பதில் சொல்கிறார்.
இனி ஓவர் டு பூங்கொடி பாலமுருகன் !
ஒரு பொறியாளரான நீங்கள் கதை சொல்லியாக மாறியதன் பின்னணியைச் சொல்லுங்க .
அனைவருக்கும் வணக்கம். திருமணத்திற்கு முன்பு ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். திருமணத்திற்குப் பிறகு கணவருடைய அலுவலக வேலைகளை கவனித்துக் கொண்டு வந்தேன்.. இரு குழந்தைகள் பிறந்து, மகன் ஸ்ரீராம் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். ஒரு நாள் "என்னிடம் பாப்பாவும் பள்ளிக்குச் சென்று விட்ட பிறகு முழு நேரமும் நீங்கள் என்ன செய்வீர்கள்? " என்று மகன் கேள்வி கேட்டான். திருமணத்திற்குப் பிறகு எனக்கான சுய அடையாளத்தைத் தேட வேண்டும் என்ற ஒரு உத்வேகத்தை அந்தக் கேள்வி எனக்குள் விதைத்தது.
முழு நேரமாக கல்லூரிகளிலோ அல்லது அலுவலகத்திலோ பணியாற்ற இயலாத சூழல். சிறுவயதிலிருந்து எனக்குள் இருந்த மேடைப் பேச்சு திறனும், சிறு வயது முதற்கொண்டு தொடர்ந்து வரும் வாசிப்பும் எனக்கானத் தனித்துவமிக்க பாதையாக இந்தக் கதை சொல்லி பயணத்தைத் தேர்ந்தெடுக்க வைத்தது.
முழுமையாக இந்தக் கொரோனா பெரும் தொற்றுக் காலத்தில், நிறைய இணைய நிகழ்வுகளில் கதை சொல்லலும், புத்தக விமர்சனங்களும் செய்யத் தொடங்கியது கதை சொல்லல் பயணத்தை உறுதியாக கட்டமைத்தது. குழந்தைகளுக்கான கதை சொல்லியாக பயணித்த பயணம் இன்று பெரியவர்களுக்கான கதை சொல்லியாகவும் உருமாற்றி இருக்கிறது.
ஒரு குழந்தை பிறந்த பின்பு , தாய் புதிதாய் பிறக்கிறாள் என்பார்கள். அதுபோல ஒரு குழந்தையின் ஒரு கேள்விதான் ஒரு பொறியாளரை இன்று கதை சொல்லியாக மாற்றி இருக்கிறது என்பேன்.
குழந்தைகளுக்குக் கதை சொல்ல நீங்கள் தேர்ந்தெடுக்கும் எழுத்தாளர்கள் யார் ?
அழ வள்ளியப்பா, தூரன் கதைகளில் ஆரம்பித்து இன்று சிறார் இலக்கியத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பெரும்பாலான எழுத்தாளர்களின் கதைகளை சொல்லி இருக்கிறேன்.
எழுத்தாளர்கள் உதயசங்கர், விழியன், யூமா வாசுகி, சரிதா ஜோ, கோ.மா. கொ. இளங்கோ, விஷ்ணுபுரம் சரவணன், கன்னிக்கோவில் ராஜா, வே.சங்கர், நாறும்பூநாதன் , நீதிமணி , மு.முருகேஷ், ஆதி வள்ளிப்பன், வே.பிரசாந்த், ச.மாடசாமி, சிந்தன், துரை ஆனந்த்குமார் போன்ற எழுத்தாளர்களின் கதைகளும், குழந்தைகள் எழுதியுள்ள சிறார் நூல்களில் இருந்தும் ( ரமணி, செல்வ ஸ்ரீ ராம், மதிவதனி, பிரவந்திகா, மேகா பிரியதர்சினி, சுப வர்ஷ்ணி போன்ற குழந்தைகள் ) கதைகள் சொல்லி இருக்கிறேன்.
அதே போல கிண்டிலில் இருந்து சில படைப்பாளிகளின் கதைகளும் சொல்லி இருக்கிறேன். பொதுவாக குழந்தைகளுக்கு ஏதாவது கருத்தை வலியுறுத்தும், மகிழ்ச்சியான மனோநிலையை உருவாக்கும் கதைகளை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறேன்.
உங்கள் யூ டியூப் சேனலில் பெரியவர்களுக்கான கதைகள் எவ்வித வரவேற்பைப் பெறுகிறது ?
ஆரம்பத்தில் சிறார்களுக்கான கதைகளும் ,புத்தக விமர்சனங்களும் குழந்தைப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் மட்டும் பதிவேற்றி இருந்தேன்.
தோழமைகளோடு இணைந்து "கதை கதையாம்" என்ற பெயரில் சிறார்களுக்கு கதைகள் சொல்ல ஆரம்பித்தோம். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தினமும் கதைகள் கேட்டு வருகிறார்கள்.
பெற்றோர்களும், தோழமைகளும் எங்களுக்காக சிறுகதைகளையும் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க 'கதை கதையாம்' பெரியவர்களுக்கான குழுவை ஆரம்பித்தோம். அதன் வாயிலாக எழுத்தாளர்களின் சிறப்பான சிறுகதைகளைச் சொல்லி வருகிறோம்.
கிட்டத்தட்ட 40 எழுத்தாளர்களின் சிறுகதைகளை சொல்லியிருக்கிறோம். சிறுகதைகளைக் கேட்டுவிட்டு நிறைய பேரிடமிருந்து உருக்கமான பின்னூட்டங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. புலன குழுவில் உள்ள அந்தக் கதைகளையும் யூட்யூப் தளத்தில் ஆவணமாக பதிவேற்ற வேண்டும் என்ற முயற்சியில் அனைத்து கதைகளையும் என்னுடைய யூட்யூப் சேனலில் ( பூங்கொடி கதைசொல்லி) பதிவிட்டு வருகிறேன்.
தோழர் ஒருவர் ஒரு சிறுகதை ஒன்றை கேட்டு , என்னுடன் பேசும் போது குரல் தழுதழுத்து உடைந்தது இந்த சிறுகதை சொல்லலின் உச்சமாக கருதுகிறேன். இந்த கதை சொல்லி பயணமானது முகமறியாத பல தோழமைகளின் அன்பையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் பெற்றுத் தருகிறது.
அதேபோல சிறுகதைகளை கேட்டுவிட்டு தங்களுடைய பள்ளி அல்லது கல்லூரிக்கு தன்னம்பிக்கை உரையாற்ற அணுகி இருக்கிறார்கள். எங்களுடைய யூ டியூப் சேனல் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளின் ஆவணத் தொகுப்பாக எப்போதும் இருக்கும்.
பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து செயலாற்றும் பூங்கொடியின் சமூகப்பணி , எழுத்துப்பணி பற்றி அறிந்துக் கொள்ளும் ஆர்வம் இருப்பதால், அடுத்த வாரமும் தொடர்ந்து அவருடன் பேசுவோம் .
- மீண்டும் சந்திப்போம்
Leave a comment
Upload