தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
ஐரோப்பாவில் முத்தமிழோசை -இராஜராஜேஸ்வரி பரிஸொ கோமதி

20250207141608488.jpg

பொதுவாக ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களை, சாதனையாளர்களாக நாம் கொண்டாடுகின்றோம்.

தமிழ் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்கும்பொழுது, இன்று குவிந்திருக்கும் ஊடகங்களின் மூலமும், இணையதளம் மூலமும் அவர்களைப் பற்றிய செய்திகளை மக்களிடம் சென்றடைவதற்கான சாத்தியம் அதிகம்.

இருப்பினும், புதைந்து கிடக்கும் புதையல் போன்று, மிகவும் பிரபலமடையாத, மிகவும் பேசப்படாத சாதனையாளர்கள் எங்கும் நிறைந்துள்ளனர் என்பதும் உண்மையே!

புதுச்சேரியை சேர்ந்த திருமதி. இராஜராஜேஸ்வரி பரிஸொ அத்தகையதொரு சாதனைப் பெண்மணி,. பொருளாதார நிபுணர், மேடைப் பேச்சாளர், பரத நாட்டியத்தில் தேர்ந்தவர், நடன இயக்குனர், நாடக நடிகர் என பன்முக திறமையுள்ள இராஜராஜேஸ்வரி தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மும்மொழியிலும் புலமை பெற்றவர்.

1982இல் பிரான்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்த இவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்னும் கூற்றுக்கிணங்க, நாடு, மொழி, கலாச்சாரம் சார்ந்த தடைகளை மீறி சாதனை படைத்தது வரும் ஒரு பெண்மணி - இராஜராஜேஸ்வரி பரிஸொ.

இராஜராஜேஸ்வரியின் தந்தை சிவப்பிரகாசம் சிறந்த கல்வியாளர், மக்களவை உறுப்பினரும் கூட.

தாயார் திருமதி. சரோஜினி தேவி அவர்களும் பல அரசாங்க அலுவல்களில் ஈடுபட்ட பன்முக திறமையாளர். முனைவர் இராஜி, பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பொருளாதாரம் மற்றும் வணிகமேலாண்மை பற்றி பாடம் கற்பித்ததோடு, அதனை சார்ந்து பல படைப்புகளும் வெளியிட்டுள்ளார். பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இவரது ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

கலைத்துறையில் இராஜி, கர்நாடக இசை, வீணை மற்றும் பரதம் பயின்றவர். பந்தநல்லூர் பாணியில் ஷண்முகசுந்தரம் பிள்ளை அவர்களிடத்தில் பரதம் பயிலத் துவங்கி, ரங்கநாயகி ஜெயராமன் அவர்களிடம் கற்று தேர்ந்து, பின்பு கலாக்ஷேத்ராவை சேர்ந்த ஜெயஸ்ரீ நாராயணன் அவர்களிடமும் பரதக் கலையை கற்றறிந்தார். மன்னார்குடி கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கர்நாடக சங்கீதம் பயின்ற இவர், இன்று பிரான்ஸ் நாட்டில் "வித்யாலயா" என்னும் அமைப்பைத் துவங்கி, நமது கலாச்சாரத்தை, இசை மற்றும் நாட்டியம் மூலம் பரப்பி வருகின்றார்.

பல நடன நாடகங்கள் அரங்கேற்றியதோடு, ஸ்டாஸ்பேர்கில் அமைந்துள்ள
Centre Chorégraphique de Strasbourg La வின் நடன இயக்குனராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். புகழ்பெற்ற . TV. கோபாலகிருஷ்ணன், Dr. சௌம்யா, உன்னி கிருஷ்ணன், பரதநாட்டிய துறையை சேர்ந்த சித்ரா விஸ்வேஸ்வரன், பிரியதர்ஷினி கோவிந்த், ஷோபனா, ரமா வைத்தியநாதன் ஆகியவர்களை அழைத்து பல நிகழ்ச்சிகளை பிரான்ஸ் நாட்டில் நிகழ்த்தி, மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஐரோப்பியர்கள் பெருமளவில் பங்குபெறுவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடம் அல்லது இந்திய தலைமுறையினரிடம் இந்திய கலாச்சாரத்தையும், நமது கலையையும் கடத்தி விடுதல் எளிது. ஆனால், மொழி, கலாச்சாரத்தில் முற்றிலும் மாறுபட்டு விளங்கும் ஐரோப்பியர்களிடம் கர்நாடக இசை மற்றும் பரதக் கலையை கற்பித்து, அதில் ஒரு ஈடுபாட்டை கொண்டு வருதல் சாதாரண காரியமல்ல.

அதனை முப்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து செயல்படுத்தி வரும் இராஜி பாராட்டுக்குரியவர்.

2023 முதல் நாடகத்துறையில் நடிகையாகவும், மொழி பெயர்ப்பாளராகவும் பரிமளித்து வருகின்றார். LACRIMA என்ற இந்த பிரெஞ்சு நாடகத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று, இந்த நாடகத்தின் பல காட்சிகளுக்கு பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பிரெஞ்சு கலாச்சாரத்தின் முதுகெலும்பாக, தியேட்டர் நாடகங்கள் கருதப்படுகின்றன. மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாகவே பெரும்பாலான பிரெஞ்சு நாடகங்கள் அமைந்துள்ளன.

LACRIMA என்னும் இந்த நாடகம் இலண்டன், பிரான்ஸ் மற்றும் மும்பையில் நடைபெறும் விதத்தில் அமைக்கப்பெற்றுள்ளது.

பிரிட்டிஷ் இளவரசியின் திருமண ஆடை வடிவமைப்புக்காக மும்பை மற்றும் பிரான்சை நோக்கி நகரும் இந்த கதை, அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்டும்விதத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்ப நாடுகளில் மொத்தம் எழுபத்தைந்து காட்சிகள் நடத்தி, அனைத்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக மக்களின் ஆதரவுடன் நடத்தப்பட்டது கூடுதல் சிறப்பு.

இதில் இராஜி , முக்கிய பங்கு வகித்து நடிப்பு, கதை, இயக்கம் என அனைத்திலும் பங்களித்து இந்நாடகத் துறையில் தன் முத்திரையை பதித்துள்ளார்.

இயல், இசை, நடனம், நாடகம் என அனைத்து துறைகளிலும் மிளிரும் இராஜி, இன்று பிரெஞ்சு - இந்திய மக்கள் இடையே ஒரு கலாச்சார பாலமாக அமைந்துள்ளார் என்றே கூற வேண்டும்.

தனது குறிக்கோள், கனவை பற்றி இவர் குறிப்பிடும் பொழுது, மூன்று மொழிகளிலும் ஒரு புத்தகம் எழுதி வெளியிட வேண்டும் என்றும், அதற்கான ஆயத்தங்களை துவங்கி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

20250208075037747.jpg