சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் இடம் பெயரத் தொடங்கினர் அப்போதே பேச்சு மொழி தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. ஆனால், பெரும்பாலான மொழியியல் வல்லுநர்கள், மொழியின் தோற்றம் அதைவிடவும் பழமையானதாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மொழி எப்போது தோன்றியிருந்தாலும் ஆண்களும் பெண்களும் பொதுவாகவே மொழியை பயன்படுத்தி வந்துள்ளனர். ஆண்கள் அறியாத அல்லது ஆண்களுக்கு தெரியாத பெண்கள் மொழி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் ? சீனாவில் அப்படி ஒரு மொழி இருக்கிறது. அதன் பெயர் நுஷூ, சீனத்தில் நுஷூ என்றால் பெண் மொழி என்று பொருள்.
பெண்களுக்கென்றே ஒரு தனி மொழி இருப்பது குறித்து நம் எத்தனை பேருக்கு தெரியும் ?
நாங்கள் பதின்மத்தில் இருக்கும் போது நெருங்கிய உறவினரான அக்கா, சித்தி இவர்களுடன் மட்டும் க மொழியில் பேசுவோம், தமிழ் நாட்டில் பல இடங்களில் இப்படி ஒரு பழக்கம் இருந்திருக்கிறது இன்னும் கூட இருக்கிறது. அதாவது ஒரு வார்த்தையில் உள்ள அனைத்து எழுத்துக்களுக்கு முன்பும் ‘க’ சேர்த்து பேசுவது, எடுத்துக்காட்டாக அம்மா என்ற சொல்லை கஅகம்கமா என்போம்.
இது பலருக்கு தெரியாது என்பதால் சங்கேத மொழியில் பேசிக் கொள்ளவும் ரகசியங்களை பாதுகாக்கவும் பயன்படுத்துவோம். ஆனால் இது பெண்களுக்கு மட்டுமே ஆனது என்று கூறிவிட முடியாது. ஆண்களும் இதை எளிதில் கற்றுக் கொள்ளலாம்,
ஆனால் சீனத்தின் நுஷூ பெண்களால் பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்ட பிரத்யேகமான மொழி.
சீனாவின் தென் கிழக்கு பகுதியில் ஹ்யூனன் மாநிலத்தில் ஜியாங் யோங் மாவட்டத்தில் ஹன், யாவ் மற்றும் மியாவ் இன பெண்களால் இந்த மொழி கண்டுபிடிக்க பட்டிருக்கிறது. இந்த மொழி மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் கூறுகிறார்கள்.
இப்படி இந்த பெண்கள் தனிப்பட்ட ஒரு மொழியில் புழங்குவது குறித்து வெளியுலகம் அறிந்து கொண்டதே எண்பதுகளில் தான், கோங்க் ஜெபிங்க் என்ற ஆசிரியர் ஒரு ஆராய்ச்சிக்காக ஜியாங்யோங் போன போது தான் இந்த மொழியை பற்றி தெரிந்து கொண்டார். அவரின் ஆராய்ச்சிக்கு அரசு தடை விதித்தது.
நுஷூ பெரும்பாலும் கையெழுத்து மொழியாகவே இருந்திருக்கிறது. பெண்கள் தங்களுடன் நெருக்கமான பிற பெண்களுடன் ரகசியமாய் இந்த நூஷூ மொழியில் எழுதி பேசி இருக்கிறார்கள். அந்த மொழி பாட்டியிடம் இருந்து மகளுக்கு, மகளிடமிருந்து பேத்திக்கு என்று வழிவழியாக பயின்று வந்திருக்கிறது. இந்த மொழியை பேச, எழுத, பாட தெரிந்த கடைசி பெண்மணியான யாங்க் ஹுவான்யி 2003ல் இறந்துவிட்டார்,
அதற்கு முன்பே இந்த மொழி குறித்து ஆராய்ச்சி செய்து இதற்கென ஒரு அகராதியை தயார் செய்திருக்கிறார் ஷுவோ ஷோயி என்ற ஆண்மகன்.இந்த ஆராய்ச்சிக்கு தண்டனையாக இவர் சுமார் 21 ஆண்டுகள் தொழிலாளர் முகாமில் பணி செய்ய வைக்கப்பட்டிருக்கிறார். இருபது ஆண்டுகள் கழித்து நுஷூ மொழிக்கென ஒரு அகராதியை உருவாக்கி இருக்கிறார். பல நுஷூ கவிதைகளை சீன மொழிக்கு மொழிபெயர்த்து அளப்பரிய பணியை செய்திருக்கிறார்.
சீனத்தில் சிறிய கால்களுடைய பெண்களை மட்டுமே(lotus hooks) ஆண்கள் விரும்புவர், இதனால் பெண்கள் தங்கள் கால்களை வளர விடாமல் கட்டி வைத்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் மூதாதையர் அவர்களுக்கு போதித்து வந்தனர்.
அதுவே கன்னித்தன்மையை பறைசாற்றும் வழி என்பதால் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் அம்மாவோ, பாட்டியோ தாங்களே இந்த கொடூரத்தை செய்து வைத்தனர். மேலும் சீனம் வெகு காலம் ஆண் ஆதிக்க சமூகமாகவே இருந்திருக்கிறது.
பெண்கள் தங்கள் வலிகளையும், பாடுகளையும் வெளிப்படையாக பேச இயலாது. அவர்களுக்கு கல்வி கற்கவும் சுதந்திரமில்லை.
அப்படி ஒரு தருணத்தில் தான் நுஷூ மொழி பிறந்திருக்கிறது. ஆண்களுக்கு எதிரான கூர்மையான கவிதைகளை நுஷு மொழியில் பெண்கள் படைத்திருக்கிறார்கள்.
.சீனப்பெண்கள் தம் தோழிகளுடன் இறுதிவரை சகோதரிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க சத்தியம் செய்து கொள்வர். இப்படி பிரமாணம் செய்து கொண்டவர்களை sworn sisters என்று கூறுகிறார்கள்.
இவர்கள் தங்களுக்குள் பல கவிதைகளையும் கடிதங்களையும் நுஷு மொழியில் பரிமாறி இருக்கிறார்கள். திருமண பரிசாக ஒரு துணி புத்தகத்தை (அதன் பெயர் சன்சாவ்ஷு) கொடுப்பார்கள்.
அதில் அந்த மணப்பெண்ணின் மேல் தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் நுஷு கவிதைகள் இருக்கும். மீதி பக்கங்கள் காலியாக இருக்கும் அதில் அவள் தன் சுக துக்கங்களை எழுதிக் கொள்ளலாம், தினம் டயரி எழுதுவது போல.
சீனப் பெண்கள் அவர்கள் எரியூட்டப்படும் போதும் இந்த புத்தகத்துடன் எரியூட்ட படவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்கள்.
எந்த ஒரு மொழி மாற்றத்திற்கு இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறந்தமொழி (Dead language) எனப்படும். அந்த வகையில் நுஷுவை இறந்த மொழியாக்காமல் காப்பாற்ற பல முயற்சிகள் நடந்து வருகின்றன. 'ஸ்யோ' ஆறு பாய்ந்தோடும் அழகான பூவாய் பகுதியில் இந்த மொழிக்கான ஒரு அருங்காட்சியகமும் பள்ளியும் உருவாகி இருக்கிறது.
அங்கு வருடா வருடம் நுஷு வகுப்புகளும் நடந்து வருகிறது, அரசு மொழியின் பாராம்பரியத்தை உணர்ந்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. ஆண் ஆதிக்க சமூகமாக சீனா இருந்த போது எந்த சுதந்திரமும் இல்லாத சீனப் பெண்கள் இந்த மொழியை ஆண்களுக்கு எதிரான ஒரு ரகசியமான ஆயுதமாகவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள், அவர்களின் புத்திசாலித்தனத்திற்கு மிக பெரிய சல்யூட் ...
Leave a comment
Upload