"பதறாத காரியம் சிதறாதே! ""
உங்களுக்கு மிஸ்டர் மன்னார்சாமியின் கதையைச் சொல்லியே ஆக வேண்டும்.
தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் விடுமுறைக்காக மன்னார்சாமி குலுமணாலி நோக்கிப் பயணத்துக்குத் தயாராகிறார். அவருக்கான ரயில் மதியம் 12.30 மணிக்குத் தான்.
காலை 6:00 மணி முதலே திருவாளர் மன்னர்சாமி மிகுந்த படபடப்பாக இருக்கிறார்.
“துணியேல்லாம் கரெக்டா எடுத்து வச்சியா கமலா? என் ஷேவிங் செட், சோப்பு டப்பா, பிரஷ், பேஸ்ட், விபூதி எல்லாம் மறக்காம வச்சியா? என் பிரஷர் மாத்திரையை மறந்துடாதே! ஞாபகமா செல்போன் சார்ஜரையும் எடுத்து வை.’’
“…..”
“அம்மாடி சுனந்தா! நான் பெத்த மகளே! மீதி தூக்கத்தை ட்ரெயினில் தூங்கிக்கோ. இன்னும் அரைமணி நேரத்துல சட்டுபுட்டுன்னு கிளம்பு. அடேய் பரத்து…”
மிஸ்டர் மன்னார்சாமி எப்போதும் இப்படித்தான்! அவருடைய இரயிலைப் பிடிக்க அன்று மதியம் 12 மணிக்கு ஸ்டேஷனில் இருந்தால் போதுமானது அல்லவா? வீட்டில் இருந்து அரை மணி நேரப் பயண தூரத்தில் இருக்கும் இரயில் நிலையத்துக்கு 11.30க்கு வீட்டை விட்டுக் கிளம்பினாலே போதும். டிராபிக் நெரிசலுக்காக அதிகபட்சம் கூட ஒரு மணி நேரம் வைத்துக் கொண்டாலும் பத்து மணிக்கு கிளம்பினால் போதுமானது.
மன்னார்சாமி வீட்டுக்குள் மீண்டும் போவோம். அவர் காலில் வெந்நீர் கொட்டி கொண்டாற்போல ஹாலில் முன்னும் பின்னுமாக வளைய வருகிறார்.
வீட்டிலுள்ளோர் அனைவரையும் டென்ஷன் படுத்தி, வாக்குவாதம் செய்துகொண்டு அந்தப் பயணத்தின் தொடக்கத்தையே ஒரு மோசமான அனுபவமாக அடித்துக் கொண்டிருக்கிறார்.
உள்ளே சமையலறையில் திருமதி மன்னார்சாமி பல்லைக் கடித்தபடி முணகுகிறார். ‘’இந்த ஆளோட வெளியே கிளம்புறதும் சரி... சுவத்துல டம் டம்னு முட்டிக்கிறதும் சரிதான்!’’
நம் மன்னார்சாமி போல ‘கிரைசிஸ் ஆசாமி’களை எங்கும் பார்க்கலாம். இவர்களுக்கு எல்லாமே பதட்டம் பதட்டம் பதட்டம் மட்டுமே!
தன் கீழே பணிபுரியும் அலுவலர்களுக்கு ஒரு வாரம் கழித்து முடிக்கவேண்டிய வேலையைக் கொடுத்துவிட்டு அப்போதே வீடு திரும்பி இருப்பார்கள். அன்று இரவே அந்த அலுவலரை அழைத்து ‘ஆச்சா வேலையைத் துவங்கியாச்சா?’ என நச்சரிப்பார்கள். அடுத்த ஒரு வாரத்திற்குள் பலமுறை அந்தப் பணியை நினைவுறுத்திக்கொண்டோ அல்லது எப்படி செய்யலாமென்றோ டார்ச்சர் தந்து கொண்டே இருப்பார்கள். முடிக்கப்படப் போகின்ற பணியின் தரத்தையும் இவ்வகை நச்சரிப்பு பாதிக்கவே செய்யும்.
எப்போதும் பதட்டமாக இருப்பது மெல்ல மெல்ல ஆரோக்கியத்தைக் குறைத்து விடும். அசிடிட்டி, அல்சர், தலைவலி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அழையாவிருந்தாளிகளாய் அவர்களுடன் உறவு கொள்ளும்.
பதட்டமான மனநிலை உள்ளவர்களுக்கு எப்போதும் டென்ஷன் இருக்கும். மறதியும், தூக்கமின்மையும், சுய நம்பிக்கை இல்லாத நிலையும் ஏற்படும்.
அவ்வப்போது வயிற்றுப்போக்கு, உள்ளங்கை வேர்த்தல், தடைப்பட்ட தூக்கம், இனம்புரியாத கவலை ஆகியவை தொந்தரவு செய்யும்.
தான் செய்பவை தவறாகி விடுமோ என்ற கவலை, சிறு நிகழ்வுகளிலும் மனம் புண்படுதல், இனம் புரியாத மன சஞ்சலம், எந்த காத்திருப்பின்போதும் கூடும் பதற்றம், எதிலும் முழுமையான ஈடுபாடின்மை, தொட்டாற்சுருங்கித் தனம் என்ற குண மாற்றங்கள் ஏற்படும்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வாய்விட்டு சிரிக்க மாட்டார்கள். உணவைக் கூட ரசித்துப் புசிக்காமல் அள்ளியள்ளி அவசரமாக உண்பார்கள் .
இவர்களுக்கு பதட்டம் கொள்வதே வாழ்க்கைமுறையாக மாறிவிடும். எரிச்சலும் பொறுமையின்மையும் ஆட்கொள்ளும். கோபமும் வெறுப்பும் கூடி பிறரோடு சச்சரவுகளை ஏற்படுத்தும்.
சிரிக்க மறந்த உதடுகள் அடிக்கடி வறண்டு போகும். தனிமையில் நாட்டம் மிகும். எதிலும் கவனக்குறைவுஉண்டாகி உண்டாகி நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.
எதுவுமே உடனடியாக நடந்து விட வேண்டும் என்ற பதற்றம் மிக அவலமான மனநிலையாகும். இதை ‘அவசர அவதி’(Hurry Sickness) என்பார்கள்.
இந்தப் போக்கு பிறரையும் அதிகம் பாதிப்பதால், குடும்பத்தினரோடும் பணிபுரியும் இடத்திலும் பிணக்குகளும் மனஸ்தாபங்களும் ஏற்படும்.
பதட்டக்காரர்கள் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கும்கூட பதட்டத்தைப் பரிசாக கொடுத்து விடுகிறார்கள். நாளாவட்டத்தில், எடுத்த காரியங்கள் சிக்கலாகி, தானே ஒரு கூட்டுக்குள் ஒடுங்கிக்கொண்டு விடுவார்கள்.
ஆக்ரோஷ மனநிலை (Aggressive, Type A behaviour) இருப்பவர்களுக்கே பெரும்பாலும் இந்த பதட்டம் உண்டாகிறது. தொடர் எரிச்சலால் அசிடியும் ரத்த அழுத்தமும் அதிகமாகி, அவற்றின் காரணமாக மேலும் எரிச்சல் அடைந்து, உடல் நலத்தோடு உறவுகளையும்கூட கெடுத்துக் கொள்ள நேரிடும்.
இந்த பதட்ட மனநிலைக்கு தீர்வும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்காக, நமக்கு நாமே மருத்துவராக மாறிக்கொள்ள வேண்டியதுதான்.
பணிகளை உரியவர்களோடு பகிர்ந்தளித்து, அவர்களுடைய திறமையில் நம்பிக்கையும் கொள்ள வேண்டும்.
எதையும் பேசுமுன் நன்கு ஆராய்ந்து கவனமாகப் பேச வேண்டும்.
மனதை லேசாக வைத்துக் கொள்ள தொடர்ந்து முயல வேண்டும்.
விளையாட்டு, பொழுதுபோக்கு, புத்தக வாசிப்பு, தியானம் முதலியன நல்ல பயன் தரும்.
விடுமுறை எடுத்துக்கொண்டு மலை வாசஸ்தலங்களுக்குப் போய் வரலாம். இடம் மாற்றம் மனதை புத்துணர்வு கொள்ளச் செய்யும்.
நேர மேலாண்மையைக் கடைப்பிடிப்பதால் பணிகளும் செவ்வனே நடக்கும்.
இவர்கள் உண்ணுகின்ற உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த பண்டங்களையும், நேரம் கடந்து உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
அதிகமாக நீர் பருகுதல், உடற்பயிற்சி, நடைபயிற்சி, இசை போன்றவை கவனத்தை திருப்பும்.
குடும்பத்தினரோடு இயன்ற வரையில் கூடி உண்ணுதல் உறவுகளை மேம்படுத்தும்.
மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்வது மன இறுக்கத்தை தளரச் செய்யும்.
அகங்காரமான போக்கை தவிர்ப்பதால் உறவுகளும் சீராகும்.
எதையும் திட்டமிட்டு செய்தல், கூர்மையான கவனத்துடன் சிந்தித்தல் ஆகியவை மனப்பதட்டத்தை வெகுவாக குறைக்கும்.
பதட்டமான சூழலில், தம் எண்ணங்களை நிறுத்தி கவனத்தை வேறொன்றில் திருப்புதல் (Thought Stopping)பயன் தரக்கூடியது.
இயன்றவரையில் தன் சக்திக்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டாம். முடியாத ஒன்றை பெருமை கருத்தியோ வீம்புக்காகவோ மேற்கொள்ளுதல் பதட்டத்தையே அதிகரிக்கும். மறுக்கவும் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பொறுமையை வளர்த்துக் கொள்வது பதட்டத்தினின்று விடுபட உயர்ந்த வழி!
வீட்டுப் பிரச்னைகளை வீட்டு வாசலிலேயே விட்டுவிட்டு அலுவலகம் செல்வோம்.
அலுவலக அதிர்வுகளை மேஜைக்குக் கீழேயே கட்டி வைத்துவிட்டு நாம் ‘நாமாக’ மாறி நம் இல்லம் திரும்புவோம்.
காலையில் பத்துநிமிடம் பூஜையறையில் கடவுளோடு மானசீகமாக உரையாடித்தான் பார்ப்போமே? ‘பதட்டத்தை எடுத்துக்கொண்டு பரவசத்தை தருக’ எனக் கேட்டால் அவர் தராமலா போய்விடுவார்?!
Leave a comment
Upload