தொடர்கள்
கதை
நியாயங்கள் தோற்பதில்லை - ஆனந்த் ஶ்ரீனிவாசன்.

20250208074530888.jpeg

அந்த பேருந்து மனையின் நிர்வாக இயக்குநர் ஜனாவை கூப்பிட்டு அனுப்பி இருந்தார்.

ப்யுன் தங்கராசு வந்து “ஜனா உன்னை எம்.டி அய்யா வர சொன்னாரு சீக்கிரம் போ. “

ஜனாவுக்கு தன்னை ஏன் எம் டி கூப்பிடவேண்டும் ? இது வரை அவர் தன்னைக் கூப்பிட்டதே கிடையாது.? எதற்காக இருக்கும்?

“டேய் தங்கராசு ஒனக்கு ஏதும் செய்தி தெரியுமா?”

“இல்லை ஜனா காலையிலிருந்தே எம் டி கோபமாக இருக்காரு. ஒன் செக்சன மானேஜர், சூப்பர்வைசர் , எல்லாரும் ரூமில் இருக்காங்க”.

“விஷயம் ஏதோ பரபரப்பா இருக்குன்னு மட்டும் தெரியுது. ஆனா என்னன்னு தெரியல “

ஜனா அந்த பணிமனையில் சேர்ந்து 10 வருஷம் இருக்கும்.

பக்கத்தில் உள்ள ஓசூர்லிருந்து தினமும் வருவான். பேர் தான் 40 கீ. மீ தூரம். ஆனா பஸ்ஸில் வர இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகும். அவ்வளவு போக்கு வரத்து நெரிசல் .அதற்கு பிறகு பஸ்ஸ்டாண்ட்லிருந்து ராஜாஜி நகர் நாலாவது பிளாக்கில் உள்ள அரசு பணிமனை போக அரை மணி ஆகிவிடும்

இது சரிபட்டு வாரது தன் நேரத்தை அதிகம் விழுங்கிறது என்று யோசித்து பல்சர் வண்டி வாங்கிய பிறகு தினமும் சீக்கிரமாகவே பணிமனைகக்கு அவனால் வர முடிந்தது.

ஆரம்பத்தில் ஹெல்பர் ஆக தான் நுழைந்தான். தொழில் நன்கு கற்றபின் பேருந்து ஏதும் ரிப்பேர் என்று சொன்னால் கூப்பிடு ஜனாவை என்ற அளவுக்கு அவன் வேலை இருக்கும். அந்த அளவுக்கு தொழில் நேர்த்தி. கனிவான பேச்சு.

அவன் வேலையை மெச்சி அந்த டிப்போவில் எல்லோருக்கும் நல்லவனாக இருந்தவன் தான் இந்த ஜனா .

அவனுக்கு என்னவோ ஜெனரல் ஷிப்ட் தான். ஆனாலும் காலை 7மணிக்கே வேலைக்கு வந்துடுவான்.

9மணிக்கு கேன்டீன் போய் காலை டிஃபன் சாப்பிட்டு மதியம் பக்கத்து தொழிலாளி மதிய உணவுக்கு கேன்டீன் போக கூப்பிடும் வரை வேலை செய்வான்.

கடந்த இரண்டு மாசமா பணி மனையில் ஆள் பற்றாக்குறை.

இவன் ஜெனரல் ஷிப்ட் அப்புறம் நைட் ஷிப்டையும் இரண்டையும் பார்த்து வந்தான்.

அத்துடன் செக்யூரிட்டி லீவ் போட்டால் அந்த வேலையும் சேர்த்து… பார்த்து வந்தான்.

வயதான அப்பாவின் மருத்துவ செலவுக்கு எக்ஸ்ட்ரா வருமானம் உதவும் என்பதால் மற்றவர்கள் மறுத்த போது இவன் மட்டும் சரி என்றான்.

ஆச்சு கிட்ட தட்ட 60 நாட்கள் ஆச்சு. ஞாயிறு மட்டும் ஊர் போய் பெற்றோர்களையும் மனைவி குழந்தைகளை பார்த்து வருவான்.

வயசு 40 என்றாலும் அவன் ரிப்பேர்க்கு வரும் வண்டியை ஒரு இளைஞன் போல் சுறுசுறுப்பாக செய்வான்

இரண்டு நாட்களாக தூக்கம் இல்லாத அளவுக்கு வண்டிகளின் ரிப்பேர் செய்யும் வேலை அதிகரித்த்து.

பக்கத்து டாக்டரிடம் காண்பித்து மாத்திரை போட்டு கொண்டிருந்தான்.

இது வரை நல்ல பேருடன் உள்ள தன்னை எம். டி அழைத்தும் கொஞ்சம் வெல வெலத்து போனான்.

“வணக்கம் சார்”!

அங்கே தங்கராசு சொன்ன மாதிரி அவனுடைய பிரிவு

மேனேஜர், சூப்பர்வைசர் எல்லோரும் நின்று கொண்டு இருந்தார்கள்.

ஜனாவிடம் அந்த வீடியோவை காண்பித்தார். எம்.டி

முதல் நாள் இரவு தான் சேரில் இருந்தபடியே தூங்கி கொண்டிருந்த ஃபோட்டோவும் வீடியோவும் அதில் காணப்பட்டது.

அது வைரலாகி எல்லா சோஷியல் மீடியாவில் வந்துருந்ததைப் பார்த்த ஜனா அதிர்ச்சி அடைந்தான்.

ஒன் போனை பார். தெரியும். பார்த்தான். தான் தூங்கி கொண்டிருந்தது தெரிந்தது .

“சாரி சார்.”முதல் நாள் இரவு தனக்கு உடம்ப சரியில்லை மாத்திரை போட்டுக் கொண்டதால் கொஞ்சம் அசந்து விட்டேன் சார் “என்றான்.

மானஜரும் சூப்பர்வைசர் கூட ஜனாவுக்காக பரிந்து பேசியும்

எம் டிக்கு அவன் செயலினால் மேலிடத்தில் தனக்கு தலைகுனிவு ஏற்படுத்தி விட்டது. என்றார்.

எனவே உன்னை 6 மாசம் சஸ்பென்ட் செய்கிறேன் என்று உத்திரவு போட்டார்.

இவ்வளவு உழைத்தும் நல்ல பேர் வாங்கியும் நமக்கு இந்த கெட்டப் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. இன்னும் ஆறு மாதம் குடும்பம் நடத்தணுமே?

யார் செய்த வேலையாக இருக்கும்? ஒருவேளை எதிர் யூனியன் தலைவர் பாலு நேற்று பாடி பில்டிங் செக்சனிலுருந்து வெளிய வந்தவன் வேலையாக இருக்குமோ?.

எல்லோருக்கும் ஜனாவை பிடிக்கும் தொழிலாளர்கள் மத்தியில் பாலு மட்டும் இவன் செய்கையை கொள்கையை எதிர்ப்பான் .

அவன் பேச்சை கேட்காமல் தான் இந்த இரண்டு ஷிப்ட் பார்த்து வருவதை முறியடிக்க அவன் செஞ்ச வேலையா இருக்குமோ?

இப்படி எண்ண அலைகள் ஆர்பரிக்க்க வருத்தத்துடன் வெளியே வந்தான். மற்ற தொழிலாளர்கள் அவனை தேற்றினார்கள். இது என்ன அநியாயமா இருக்கு இனிமே தூங்காதே என்று வார்னிங் குடுத்து இருக்கலாம். இந்த பனிஷ்மென்ட ஓவர்.

பாவம் ஜனா. ஒழைச்சும் கெட்ட பேரு.

மற்ற தொழிலாளர்கள் அறிவுரைப்படி இந்த இடைநீக்கத்தை எதிர்த்து ஜனா உயர் நீதிமன்றத்தை அணுக ஏற்பாடு செய்தான்..

அஞ்சாறு வாய்தாவுக்கு பிறகு இரு தரப்பு வாதங்கள் கேட்ட நீதிபதி

“நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட நீண்ட நேரம் ஜனா வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டபோது, அவர் எந்த வித மறுப்பும் சொல்லாமல் அதே சமயம் மற்ற தொழிலாளர்கள் மறுத்த வேலையை தான் முழு மனதோடு செய்துள்ளார் அதுவும் கடந்த 60 நாட்களாக .

ஒரு தூக்கம் போட்டதற்காக ஜனாவை குற்றவாளியாகக் கருத முடியாது .

பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொழிலாளர்கள் 8 மணி நேரத்திற்கு பதிலாக 16 மணி நேர ஷிப்டுகள் வேலை செய்ய வேண்டியிருந்ததாக பணிமனையின் எம். டி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அவர் இதை பெரிது படுத்தாமல் ஒரு எச்சரிக்கை மட்டும் விட்டிருந்தால்.மனுதாரர் ஜனாவுக்கு மன உளைச்சல் வந்து இருக்காது. மேலும் அவர் நல்ல தொழிலாளி என்று சொல்லப்படுகிறது.

'மனுதாரர் ஒரே ஷிப்டில் பணி செய்யும் சமயத்தில் , தூங்கியிருந்தால் அது தவறாக இருந்திருக்கும்'

ஒருவருக்கு அசதியால் தூக்கம் வரும் என்றால், அவர் எங்கு வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் தூங்கிவிடுவார். அது இயற்கை

அவர் கொடுத்த ஆவணங்கள் படி அவர் அன்று இரவு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மாத்திரை உட் கொண்டது அவருக்கு சோர்வையும் தூக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நீதிபதி , மேலும் குறிப்பிடும் போது 'ஒருவர் தனது சக்திக்கு மீறி வேலை செய்யச் சொன்னால், சில சமயங்களில் உடலுக்குத் தூக்கம் தேவைப்படும்.' ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில், தூக்கம் மற்றும் வேலை வாழ்க்கை சமநிலை மிகவும் முக்கியமானது.

இந்த வழக்கில், மனுதாரர் 60 நாட்களுக்கு ஒரு நாளைக்கு உள்ள 24 மணி நேரத்தில் 20 மணிநேரம் இடைவேளை இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது

.தொழிலாளர் நல சட்டப்படி அனைவருக்கும் ஓய்வெடுக்க உரிமை உண்டு என்றும், அதில் வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களுக்கான வரம்புகள் அடங்கும் என்றும் நீதிமன்றம் கூறுகிறது..

எனவே இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின்பு மனுதாரர் கோரிக்கை நியாயமா தோன்றுகிறது. அதே சமயம் எம்.டி யின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. மனிதாபமற்ற நடவடிக்கை.எனவே அவர் போட்ட இடைநீக்க உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்கிறது.

நீதிமன்றம் அவருக்கு நிவாரணம் வழங்கி, மீண்டும் பணிக்குத் திரும்ப உத்தரவிடுகிறது.

மேலும், இடைநீக்க காலத்திற்கு சம்பளம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.. அதே சமயம் மீண்டும் இது மாதிரி பிரச்சனை வராமல் மேலும் தொழிலாளர்களை சீக்கிரமாகவே ரேகருட் செய்ய வேண்டும் என உத்திரவு பிறக்கப் படுகிறது.

நேர்மை நியாயம் இரண்டும் என்றுமே தோற்று போவதில்லை. மகிழ்ச்சியுடன். வெளியே வந்தான் ஜனா

எம்.டி. தனியே அழைத்தார்.

"தெரியும், உனக்கு மன உளைச்சல் என்று தெரியும். உன் குடும்ப சூழ்நிலையும், ஓய்வேஎடுக்காமல் நீ உழைத்ததையும் கூட நான் கவனித்தேன். உனக்கு ஒரு கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் தான் இந்த வழக்கு, சஸ்பென்ஷன் எல்லாம்.

நீதிமன்றத்தில் தோற்பது போலவே நான் ஏற்பாடு செய்த நாடகம் இது.

ஆல் தி பெஸ்ட்"

ஜனாவிற்கு எம்.டி. இப்போது வேறு மாதிரி தெரிந்தார்.