தொடர்கள்
கதை
சாட்டை அடி- முனைவர் என் பத்ரி

20250208073804619.jpeg

அந்த பொறியியல் கல்லூரி சேலத்துக்கு பக்கத்தில் ஒரு சிறிய நகரத்தில் இருக்கிறது. கல்லூரியின் கடைசி வருட மாணவர்களுக்கு நான் நடத்தும் அறக்கட்டளை செய்யும் உதவிகளைப் பற்றி மாணவர்களிடையே பேச அழைத்திருந்தார்கள். நேற்றே சேலத்துக்கு வந்து விட்ட நான், இன்று காலை காலேஜுக்கு வந்தேன்.

பொறியியல் படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு உள்ள வெவ்வேறு வேலை வாய்ப்புகள், பொறியியல் படிக்க ஆர்வம் உள்ள ஏழை மாணவர்களுக்கு எங்கள் அறக்கட்டளை செய்துவரும் சேவைகள்,அதை பெறுவதற்கான வழிமுறைகள் போன்றவற்றை யெல்லாம் தமிழிலும்,ஆங்கிலத்திலுமாக விவரமாக எடுத்துக் கூறினேன். மாணவர்களும் அமைதியாக கேட்டுக் கொண்டார்கள்.பலர் குறிப்பும் எடுத்துக் கொண்டார்கள்.நிகழ்ச்சியின் முடிவில் சில மாணவர்கள் வழக்கம் போல் சில கேள்விகளையும் கேட்டார்கள். நிகழ்ச்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

நான் மெதுவாக மேடையிலிருந்து கீழே இறங்கினேன். மேடையின் ஓரமாக அந்த முதியவர் நின்றுக் கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் அவருடைய பையனும், இரண்டு பெண்களும் நின்று கொண்டு இருந்தார்கள்.

’என்னிடமிருந்து ஏதாவது உதவி வேண்டுமா?’ என்று நான் அவரிடம் கேட்டேன்.

’ஒன்னும் இல்ல சார். உங்களுடைய பேச்சைக் கேட்டேன். நீங்கள் பல ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக பல இன்ஜினியரிங் காலேஜ்ல சீட்டு வாங்கிக் கொடுத்து,படிக்க வைப்பதாகச் சொன்னீர்கள். இது என்னுடைய பையன். இந்த பொண்ணுங்க ரெண்டு பேரும் என்னோட அக்கா பசங்க. அவங்க அப்பா, அம்மா இரண்டு பேரும் ஒரு விபத்துல இறந்து போயிட்டாங்க. சின்ன வயசுல இருந்து நான்தான் அவங்கள வளர்க்கிறேன்.பொறியியல் படிப்புலதான் அவங்களயும் படிக்க வைக்கறேன். உங்கள மாதிரி பெரிய அளவில மத்தவங்களுக்கு என்னால உதவ முடியாது.இருந்தாலும் என்னால முடிந்த அளவுக்கு செய்யணும்னு நெனைக்கிறேன். உங்க பேங்க் அக்கவுண்ட் டீடைய்ல்ஸ கொடுத்தீங்கன்னா அதுக்கு மாசம் என்னால முடிஞ்ச 2000 ரூபாய அனுப்பி வைக்கிறேன். ஏதோ ஏழை குழந்தைகளுக்கு நான் செய்யற உதவியாக இருக்கும்’ என்று பவ்யமாக சொல்லி முடித்தார்.எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

அதிர்ச்சியில் இருந்த நான் ’நீங்க என்ன பண்றீங்க?’ ன்னு அவரக் கேட்டேன். நான் தெருவோரத்தில டிஃபன் கடை வச்சிருக்கேன்.காலையிலயும்,மாலையிலயும் மட்டும்தான் திறந்து வெச்சுருப்பேன். காலேஜ் நேரம் போக மீதி நேரத்துல இந்த பசங்களும் என்னோட சம்சாரமும் வந்து எனக்கு உதவியா இருக்காங்க. என்னுடைய கஸ்டமர்ஸ் ஏழையா இருந்தாலும் நேர்மையானவங்க. உழைச்சு சாப்பிடறவங்க. எனக்கு வாடகை, கரண்ட் சார்ஜெல்லாம் கெடையாது.அவங்க சாப்பிடறதுக்கு நான் குறைந்த அமௌன்டதான் வாங்கிக்கிறேன்.

இந்த நம்பருக்கு உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர நேரம் கிடைக்கும்போது தயவு பண்ணி வாட்ஸ் அப்ல அனுப்பி வைக்கறீங்களா?’ என்று சொல்லி என்னுடைய கையில் அவருடைய மொமைல் நம்பர் எழுதியிருந்த பேப்பரை திணித்தார் அவர். என்னுடைய பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அவர் அங்கிருந்து போய்விட்டார்.

இவ்வளவு நேரம் நான் செய்யும் உதவிகளை ஊருக்கெல்லாம் என்னுடைய உரையில் பறைசாற்றிக் கொண்டு இருந்த எனக்கு, சாட்டையால் அடித்தது போல் இருந்தது.

’என்னுடைய தலை கனத்துக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.ஒரு ஏழையின் மனதில்தான் எவ்வளவு கருணை? எனக்கு வர பணமெல்லாம் டேக்ஸ் எக்சம்ஷனுக்காக வரபணம்.அவர கம்ப்பேர் பண்ணும்போது நான் செய்யறது ஒன்னும் பெரிய வேலையே இல்ல. அடுத்த கூட்டத்திலிருந்தாவது அடக்கி வாசிக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே கல்லூரியிலிருந்து சென்னையை நோக்கி காரில் புறப்பட்டேன். போகும்போது எனது அறக்கட்டளையின் அக்கவுண்ட் நம்பரை அனுப்பிவிட்டேன்.

அதுதான் நான் அவருக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்கும்.