தொடர்கள்
கதை
நாவடக்கம் – சிறுகதை – பா அய்யாசாமி

20250205134910427.jpg


யோவ் நில்லு! என்று அங்கே வந்த இருசக்ரவாகனத்தை நிறுத்தி ஊது என்ற உதவி ஆய்வாளாரைப் பார்த்து, ஐயா, நான் குடிக்கலை என்றவனிடம்

“எந்த குடிகாரன்டா நான் குடிச்சு இருக்கேன் என்று உண்மையைச் சொல்லுவான்

ஊதுடா என்றார் அதட்டலாக

ஐயா, கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்க என்றபடி ஊதினான்

மீட்டர் அளவு அதிகமாக காண்பிக்கவும், போடா அங்கேபோய் நில்லு என்றார் தோரணையாக..

மற்றொரு வண்டி வரவும் நிறுத்தி, ஊதுடா என்றார்..

என்ன ? எங்களைப் பார்த்தால் உனக்கு குடிக்கிற மாதிரி தெரியுதா ? என்று கேட்டார் வந்தவர்

" நான் என்ன சோசியமாக பார்க்கிறேன் " ஊதுடா என்றார் அதட்டலாக...

" வேண்டாம், வார்த்தையை விட்டுடாதிங்க வயாசாயிட்டு என்று பார்க்கின்றேன் என்று முனகியபடி நின்றவனை அளவு கம்மியாக காண்பிக்கவும் " போயா மூடிகிட்டு " என்று விரட்டினார்.
ஐயா, இந்தமாசம் ஓய்வு பெறப்போறீங்க. கொஞ்சம் அடக்கி வாசியுங்கள், ஏதாவது வில்லங்கம் வந்துடப் போகுது என அறிவுறுத்தினார் சக காவலர்,

இதெற்கெல்லாம் பயப்படமாட்டேன், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறவனுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு ? அவன் உசிரை மட்டுமில்லாமல் அடுத்தவன் உசிரையும் சேர்த்து காவு வாங்கிடுவான் என்பார் சிறப்பு உதவிஆய்வாளர் துரை.

இந்த மாதத்தோடு ஓய்வுபெற இருப்பவர், நிறைய புகார்கள் அவர் மீது மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு போய்க்கொண்டே இருந்தது. விசாரணைக்கு போனாலும் இவர் பக்கம் நியாயம் இருப்பதாக தெரியவர விளக்கம் கொடுத்துவிட்டு வந்துவிடுவார்.


மிக கண்டிப்புடன் நேர்மையானவர். பேச்சுதான் வெகு அதட்டலாக இருக்கும், அனைவரையும நிறுத்தி் சோதனை செய்து அனுப்பிவிட்டு, குடித்துவிட்டு வரும் நபர்களை சோதனைசெய்து அவர்களை தனிமைப்படுத்தி நிற்க வைத்து அபராதம் விதித்து அறிவுரைகளை சொல்லி பாரபட்சமும் இல்லாமல், தன் பணியை செய்து வந்ததால் வாகன விபத்தும் குறைந்து துறை ரீதியாக நற்பெயரும்,அவப்பெயரும் உண்டு.
துணைக்கண்கானிப்பாளர் அலுவலகத்திற்கு துரையை அழைப்பதாக மைக்கில் செய்தி வரவும், இதோ அழைப்பு வந்திடுச்சா ? எவனோ அங்கே போயிட்டான்,


வாங்க போகலாம் எனக் கூறி காவல் நிலையம் திரும்பினர்.

போலீஸ் என்றால் கம்பீரம், ஒரு திமிர் இருக்கனும், அப்போதான் பயப்படுவாங்க, நாம குழைந்தால் இந்த காலத்திலே நம்மீது ஏறிட்டுப்போயிடுவாங்க, அவரைப்பற்றி வரும் புகார் எல்லாம் திட்டுகிறார், மரியாதை இல்லாமல் பேசுகிறார் என்றுதான் வந்து இருக்கு, நாவடக்கம் அவசியம்தான். ஆனால் யாரிடம் என்பது முக்கியம். சமூக விரோதிகளிடமும், சோதனை பணிகளிலும் அப்படிதான் பேசியாக வேண்டும். யார், யார் என அடையாளம் கண்டு அவர்களுக்கு தகுந்த மாதிரியெல்லாம் பேசுவது எல்லாம் வேலைக்கு ஆகாது.
அந்த திமிர், துடுக்கு எல்லாம் வேண்டும் என்றால் நம்மிடையே முதலில் நேர்மை இருக்கனும். நம்ம துரைகிட்டே அந்த நேர்மை இருப்பதால். திமிர் இருக்கு, அந்த மாதிரி ஆளுங்க இருக்கிறதினாலேதான் நம்ம துறைக்கே ஒரு மரியாதை என்று பேசிக் கொண்டிருந்தார் அன்று பணி மாறுதலில் மப்டியில் வந்து பதவி ஏற்ற கண்காணிப்பாளர்.


துரை உள்ளே வந்ததும், வாங்க என வரவேற்றவர், எங்கோ பார்த்தமாதிரி இருக்கா என்ற எஸ்பி. நீங்க சோதனையில் மூடிகிட்டுபோ என்றீர்களே, நான் போகவில்லை அந்த இடத்திலேதான் அரை மணிநேரமாக நின்று கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். உங்கள் கடமை தவறாதப் பணிக்கு என் வாழ்த்துகள் என்று கை குலுக்கிட அனைவரும் கைத்தட்டி மகிழ்ந்தார்கள்.


மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தவர், நடந்ததையெல்லாம் மனைவியிடம் கூறி, நல்ல பசி என்ன சமையல் என கேட்க, சாம்பார்தாங்க, என்ற மனைவியிடம் சிக்கன் எடுக்கலையா? என்றதற்கு, வயசாகிட்டு, நாக்கை அடக்குங்க ! என உத்திரவு வந்தது மனைவியிடமிருந்து.