எடுத்துக்காட்டு உவமை அணியை நாம் பார்த்து விட்டோம். இப்போது உவமையணி மற்றும் எடுத்துக்காட்டு உவமையணியை போலவே உள்ள உருவக அணியை பார்ப்போம் என்று ஆரம்பித்தார் பரணிதரன்.
உவமானமும் உவமேயமும் ஒன்றே என்று வந்தால் அது உருவக அணி என்பது பெரியோர் வாக்கு.
எடுத்துக்காட்டு
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று - முதல் திருவந்தாதி
உவமானம் - வையம்
உவமேயம் - விளக்கு
உவமானம் - கடல்
உவமேயம் - நெய்
உவமானம் - கதிரவன்
உவமேயம் - சுடர்
உவமானம் - சொல்
உவமேயம் - மாலை
வையம் ஆகிய விளக்கு, கடல் ஆகிய நெய், கதிரவன் ஆகிய சுடர், சொல் ஆகிய மாலை
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் - இரண்டாம் திருவந்தாதி
உவமானம் - அன்பு
உவமேயம் - விளக்கு
உவமானம் - ஆர்வம்
உவமேயம் - நெய்
உவமானம் - சிந்தை
உவமேயம் - திரி
உவமானம் - ஞானம்
உவமேயம் - சுடர்
அன்பு ஆகிய விளக்கு, ஆர்வம் ஆகிய நெய், சிந்தை ஆகிய திரி, ஞானம் ஆகிய சுடர்
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே - பராபரக் கண்ணி
உவமானம் - நெஞ்சு
உவமேயம் - கோயில்
உவமானம் - நினைவு
உவமேயம் - சுகந்தம்
உவமானம் - அன்பு
உவமேயம் - அபிஷேகம் செய்யும் நீர்
நெஞ்சம் ஆகிய கோவில், நினைவு ஆகிய சுதந்தம், அன்பு ஆகிய நீர்
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்த தனிப்பூவோ நீ தான்
சொக்க வெள்ளிப் பால்குடமோ, அமுத ஊற்றோ
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல் மாறிக் குளிர் அடைந்த ஒளிப்பிழம்போ - புரட்சி கவி
உவமானம் - நீலவானம்
உவமேயம் - ஆடை
உவமானம் - பூ, வெள்ளிப் பால்குடம், அமுத ஊற்று, குளிர்ந்த சூரியன்
உவமேயம் - நிலவு
மேலே உள்ளது பாரதிதாசனின் புரட்சி கவி என்ற காப்பியம். இது பில்ஹணீயம் என்ற வட மொழி காப்பியத்தின் தழுவல். இந்த கதையில் வரும் பில்ஹணன் என்ற பெயருடைய கதாநாயகனை உதாரன் என்று மாற்றியுள்ளார் புரட்சிக்கவிஞர். மேலே உள்ள பாடலை உதாரன் பாடியதாக கவிஞர் காட்டியுள்ளார். இந்த இந்த செய்யுளின் அழகை நாம் புரிந்து கொள்வதற்கு புரட்சிக்கவி கதையை சற்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நாட்டில் உள்ள அரசர் தன்னுடைய மகளான இளவரசி அமுதவல்லிக்கு கவிதை புணையும் திறமையை வளர்ப்பதற்காக யாப்பிலக்கணத்தை கற்றுத் தர வேண்டும் என்று எண்ணினார். அதற்கு தகுதியானவன் உதாரன் தான் என்று அமைச்சர் கூற, மன்னரோ இளமையான தன் மகளை இளைஞனான உதாரனிடம் எப்படி கல்வி கற்க அனுப்ப முடியும் என்று யோசிக்க, அதற்கு அமைச்சரும் ஒரு உத்தியை செய்கிறார்.
அதன்படி, அந்நாட்களில் குருடனைக் காண்பதும் கூட அபசகுனம் என்பதால், உதாரன் ஒரு பிறவிக்குருடன் என்று அரசன் அமுதவல்லியிடம் கூறுகின்றான். இதுபோலவே உதாரனிடம் அமுதவல்லி ஒரு தொழுநோயாளி என்றும் கூற, இருவரிடையே திரையிட்டுப் பாடம் கற்பிக்கப்படுகிறது.
ஆனால், ஓர் இரவு அழகிய நிலவினைக் கண்டு உதாரன் தன்னை மறந்து பாடல் புனைய, பிறவிக்குருடன் எவ்வாறு நிறுவினை காண இயலும் என்று சந்தேகம் கொண்ட அமுதவல்லி திரையினை விலக்கி அங்கே அழகிய ஆண்மகன் இருப்பதைக்கண்டு காதல்வயப்படுகிறாள். உதாரனும், இவளைக்கண்டு வானின் தேவதைகளில் ஒருத்தி என வியக்க, இருவரும் காதல் கொள்கிறார்கள்.
அவன் நிலவினை பார்த்து பாடிய பாடலை தான் மேலே உள்ள எடுத்துக்காட்டில் கொடுத்துள்ளோம்.
இதே போல பல நாட்களுக்கு முன்பாக நாம் பேசிய ஒரு காட்சியையும் உருவகமாக மீண்டும் இங்கே பார்ப்போம்.
அது இருட்டும் நேரம். சூரியன் மெதுமெதுவாக அஸ்தமித்துக் கொண்டிருந்தது. அதனால் அந்த கிராமத்தில் இருள் சூழத் தொடங்கியது. அந்த நேரத்தில் ஒரு பெண் தன் வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்றாள். அங்கு நெடுநெடுவென உயர்ந்து வளர்ந்திருந்த நவாப்பழ (நாவற் பழ, நாகப் பழ) மரத்திற்கு கீழே வந்து நின்றாள். அந்த மரத்திற்கு கீழே நிறைய நவாப் பழங்கள் விழுந்து சிதறி கிடந்தன. இவளும் ஆசையுடன் சென்று ஒரு நவாப் பழத்தை கையில் எடுத்தாள். அந்த நவாப்பழம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. இவள் இந்த பழத்தை எடுத்து தன்னுடைய வாயின் பக்கத்தில் கொண்டு வந்த பொழுது அந்த நவாப்பழம் திடீரென்று படபடவென பறந்து சென்றது. இதை அந்தப் பெண் மிகவும் அதிசயத்துடன் பார்த்தாள்.
அங்கு நடந்தது என்னவென்றால் இந்தப் பெண் எடுத்தது நவாப் பழத்தை அல்ல. அது ஒரு கருவண்டு. இந்தப் பெண் அந்த வண்டினை கையில் எடுத்த பொழுது, அவளுடைய குளிர்ச்சியான மென்மையான வாசனை பொருந்திய கைகளை அந்த வண்டு தாமரை என்று நினைத்து மயங்கி தேன் குடிக்க நினைத்தது. அப்போது அந்தப் பெண் அந்த வண்டினை தன்னுடைய முகத்திற்கு அருகில் கொண்டு வந்ததால் அந்த வண்டிற்கு இந்த பெண்ணின் முகம் நிலவினை போன்று தெரிந்தது. நிலவு உதித்தால் தாமரைப்பூ மூடிவிடும். அதனால் அந்த வண்டு தாமரை மூடுவதற்கு முன்னால் தப்பிக்க வேண்டும் என்று பறந்து சென்றது.
இப்படி முகத்தினை நிலவாகவும் கையினை தாமரையாகவும் அந்த வண்டு நினைத்ததல்லவா… அதுதான் உருவகம்.
இத்தோடு உருவக அணி முடிந்து விட்டது. அடுத்த வாரம் வேறொரு அணியை பார்ப்போம் என்று கூறி விடை பெற்றார் பரணிதரன்.
Leave a comment
Upload