காலம் மாறி வருகிறது. தேர்தல் நடைமுறைகளும் மாறி வருகின்றன. மஞ்சள்பெட்டி, பச்சைபெட்டி, நீலப்பெட்டி என்றபடி வாக்குப்பெட்டிகள் வைத்து, அதில் வாக்குளை செலுத்திய காலம் இருந்தது. சிறிய, சதுர, உண்டியல் போல் இரும்பு வாக்குப்பெட்டிகள் பிறகு வந்தன.
ஆசிரியர் பணியில் இருந்தபோது வாக்குச்சாவடியில் பணியாற்றிய அவன், அந்த வாக்குப்பெட்டிகளை எல்லாம் சரியாக மூடி, சீல் வைத்து, எத்தனை பெட்டிகள் என்பதை கணக்கிட்டு, வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்ல வந்தவரின் பதிவேட்டில் கையெழுத்து போட்டு ஒப்படைத்திருக்கிறான்.
அப்போது வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி நீளமான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் வேட்பாளரின் பெயரும், கட்சிச் சின்னமும் இருக்கும். வாக்குப்பெட்டி அருகே ‘ஸ்வஸ்திக்’ வடிவில் வட்டமான ரப்பர் ஸ்டாம்ப் இருக்கும். அருகிலுள்ள Ink Pad இல் முத்திரை ஒத்தி எடுத்து, வாக்குத்தாளில் குத்த வேண்டும். சரியான கட்டத்தில் குத்தப்பட்டால், வாக்கு அந்த வேட்பாளர்களுடையதாகும். ரப்பர் ஸ்டாம்ப், இங்கு பாதி, அங்கு பாதி என்று இரண்டு கட்டங்களில் விழுந்து இருந்தால், எண்ணும் இடத்தில் தகராறு தான். முத்திரை குத்திய பிறகு வாக்குச்சீட்டை மடித்து, உண்டியலின் வாய் போல் இருந்த வாக்குப் பெட்டியின் துவாரத்தில் தள்ள வேண்டும். சரியாக நுழையாவிட்டால், பக்கத்தில் இருந்த ஒரு அரை அடி ஸ்கேல் மூலம் வாக்கு சீட்டை நன்றாக உள்ளே தள்ளலாம். இந்த வாக்குசீட்டும், வட்ட முத்திரையும், EMV என்று சொல்லப்படும் மின்னணு வாக்குப்பெட்டி வந்தவுடன் விடை பெற்றுவிட்டன.
அவன் நிருபராக பணியாற்றிய காலத்திலும், வாக்குச்சீட்டு முறை தான் இருந்தது. மின்னணு வாக்குபெட்டிகள் அறிமுகமாகவில்லை. தேர்தல் முடிந்த மறுவாரம் வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டன.
மாவட்ட வருவாய் அதிகாரிகளுடன் தான் நிருபர் வாக்கு எண்ணப்படும் இடத்தில் செல்லும் வழக்கம் இருந்தது. தனியாகச் செல்வதற்கு அனுமதி இல்லை. ஆனால் அவனோ தனியாக ஒரு வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்திற்குச் சென்று தகவல் திரட்ட விரும்பினான். ஒரு காலத்தில் வாக்குப்பதிவை நடத்திய அவன், வாக்கு எண்ணிக்கை நடைமுறையில் கலந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்பட்டான். அந்த மனக்குறையை நிருபர் காலத்தில் தீர்த்துக் கொண்டான்.
அதற்கு அவன் தேர்ந்தெடுத்த இடம் சிதம்பரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி. தரைத் தளத்தில் தலைமை ஆசிரியர் அறையில் கடலூர், DRO வாக இருந்த T.R.ராமசாமி (பிற்காலத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் ஆனவர்) நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அது தகவல் தருவதற்காக அல்ல, நிருபர்கள் வாக்கு எண்ணிக்கை இடத்திற்குச் செல்வதை தடுப்பதற்காக. இதைப் புரிந்து கொண்ட அவன், அந்தக் கட்டிடத்தின் பின்புற மாடிப்படி வழியாக ஏறி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தின் நீண்ட வராண்டாவில் நுழைந்தான். அங்கும் அவனுக்கு ஒருவித நடிப்புதான் உதவியது.
இரண்டு போலீஸ்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் அவனை எதுவும் கேட்பதற்குள் அவன் முந்திக் கொண்டான். ‘வராண்டாவில் இருந்த மேஜை, நாற்காலிகள், தண்ணீர் பானை, மர தடுப்புகள் ஏன் அங்கே இருக்கின்றன?’ என்று மிடுக்குடன் கேட்டான். அவனது அதிகார தோரணைக் குரலைக் கேட்ட போலீஸ்காரர் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை, ‘ஐயா, உள்ளே வாக்கு எண்ணிக்கை நடத்த அதிக இடம் தேவைப்படுவதால், தலைமை ஆசிரியரே இவற்றையெல்லாம் வகுப்பறைகளிலிருந்து அகற்றிவிட்டார் என்றார்.
இன்னொரு மூலையில் இருந்த போலீஸ்காரரும் அங்கே வந்தார். அவன் அவரை சட்டை செய்யாமல், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த ஒரு பெரிய கூடத்தில் நுழைந்தான். ஆங்காங்கே மேஜைகளைச் சுற்றி சில நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வாக்குச்சீட்டுகளை எண்ணிக்கொண்டிருந்த இரண்டு நபர்களும், சில கட்சிப்பிரதிநிதிகளும் இருந்தார்கள். அவன் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வை பார்ப்பதுபோல் சில நிமிடங்கள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து சென்றான். அப்போது செல்லாத வாக்குகள் பற்றி ஒரு கட்சிப்பிரதிநிதி தகராறு செய்து கொண்டிருந்தார்.
இன்னொரு இடத்தில் வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள் இரண்டு மூன்று வாக்கு சீட்டுகளில் என்ன எழுதியிருக்கிறது என்பதை உரக்கப் படித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவாக்குச்சீட்டில் எழுதப்பட்ட வாசகம், ‘ஏண்டா நாயே, உனக்கு என் ஓட்டா?’, ‘ஜெயித்து என்ன பண்ணப்போறே?’ இப்படி நான்கைந்து வாக்குச் சீட்டுகளில் வாக்காளர்கள் ஏதோதோ எழுதியிருந்தார்கள். சிரிப்பை வரவழைத்தாலும், அவை வாக்காளர்களுக்கு வேட்பாளர்களைப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்தின. அதுதான் ‘நோட்டா’ (None of The Above) வுக்கு முன்னோடியோ? எலெக்ஷன் கமிஷனுக்கு இந்த மாதிரியான வாக்குச்சீட்டு வாசகங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கலாம்.
வாக்கு எண்ணிக்கை கூடத்திலிருந்து தரைத் தளத்திற்கு வந்த அவன், அப்போது தான் DRO வை பார்ப்பது போல் பாசாங்கு செய்துவிட்டு, தபால் அலுவலகத்திற்குச் சென்றான், தான் திரட்டிய செய்தியைக் கொடுக்க. உடனே மாவட்ட தலைநகரரான கடலூருக்குச் சென்றான். அப்போது இரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. சக நிருபர்கள் ஓரிரு வாக்குச்சாவடிகளில் கட்சிப்பிரதிநிதிகள் கலாட்டா செய்ததை அதிகாரிகள் மூலம் அறிந்ததாகச் சொன்னார்கள்.
முன்னிரவில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. தொகுதி முடிவுகள் பின்னிரவில் அறிவிக்கப்பட்டன. அவற்றை தந்தியிலோ தொலைபேசியிலோ கொடுப்பதற்காக நிருபர்கள் கடலூர் தலைமை தபால் அலுவலத்தில் குவிந்தார்கள். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டாலும், வரிசைப்படிதான் சென்னைக்கு இணைப்புகள் கிடைத்தன. அவன் தேர்தல் முடிவுச் செய்திகளை வாக்கு எண்ணிக்கை விபரங்களுடன் தொகுதிவாரியாக தொலைபேசியில் டிக்டேட் செய்தான்.
தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது போஸ்ட்மாஸ்டர் சொல்லிக் கொண்டிருந்தார், ‘என் பெயர் சேஷாத்திரி, ஆனால் வாக்காளர் பட்டியலில் சௌத்ரி என்றே இருக்கிறது. நானும் அந்த பெயரிலேயே வாக்களித்தேன்’ என்றார். அதை காதில் வாங்கிக் கொண்ட அவன், அதையும் செய்தியோடு செய்தியாகச் சேர்த்துவிட்டான். காதில் விழுந்த சுவையான செய்திகளையெல்லாம் சேர்த்து, தேர்தல் முடிவுகள் பற்றிய தன் தகவல்களைத் திரட்டி செய்தி கட்டுரையை சென்னை தலைமையகத்திற்கு டிக்டேட் செய்தான்.
ஒரு தமிழ் பத்திரிகை நிருபருக்கு தொலைபேசி இணைப்பு, இரவு பத்தே முக்காலுக்கு தான் கிடைத்தது. அவர் மளமளவென்று செய்திகளை சொல்லிக் கொண்டிருந்தார். பேசி முடிக்கும் சமயம், ‘எல்லாவற்றையும் சரியாக குறித்துக் கொண்டீர்களா?’ என்று கேட்டார். மறுமுனையில் இருந்தவர் சொன்னார், ‘இது ‘அலை ஓசை’ அலுவலகம் அல்ல, நான் டாக்டர் ராமகிருஷ்ணன், இருந்தாலும் என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பி, சூடான செய்தியை கொடுத்ததற்கு நன்றி’ என்றார் எரிச்சலும் கேலியுமாக. சம்பத் என்ற அந்த நிருபருக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட வேடிக்கைகளும் தேர்தல் நேரத்தில் நடப்பதுண்டு. நம் தேர்தல்களே திருவிழாக்கள் தானே? வேடிக்கைகள் இல்லாமலா? வேடிக்கைகளுக்கிடையே விபரீதமும் உண்டு.
இரும்பு வாக்குப் பெட்டிகள் போய் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. தேர்தல் நடைமுறைகள் மாறிவிட்டாலும் ஜெயிப்பவர்கள் அரசியல்வாதிகள். தோற்பவர்கள் மக்கள். வாக்குச்சீட்டும், முத்திரையும் இருந்த காலத்தில் என் நண்பர் சுப்ரபாலன் இப்படி ஒரு புதுக்கவிதை எழுதினார்:
வாக்குச் சீட்டில் வட்டமாய்
நானிட்ட முத்திரை எப்படி
என் நெற்றியில் நாமமாய்?
இன்று வாக்குச்சீட்டு இல்லை. வட்டமுத்திரையும் இல்லை.
ஜனநாயக நாமம் வாழ்க!
Leave a comment
Upload