தொடர்கள்
தொடர்கள்
பத்திரிகை ஆசிரியர் சுப்புசாமி...! 7 -புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஶ்ரீகாந்தன்.

20250321183808154.jpeg

'ஓபரா வின்ஃபிரேசனின் மோடிவேஷனல் ஸ்டைல் பேச்சு... ஷுட் பி அடட்...! அலாங்வித்... ஷால் ஐ மிக்ஸ் வித் டோனி ராபின்ஸனின் சுய முன்னேற்றம்? இவற்றோடு பிரையன் ட்ரேசியின் தலைமைப் பண்பு சொற்பொழிவு இணைத்து இன்று பா.மு.க.வை அலற அடித்து விடலாம்...!' என்று கோமு, தன் ஏற்புரைக்குத் திட்டமிட்டாள்.

'அமித்ஷா அறிவித்த திடீர் அ.தி.மு.க. கூட்டணியால் சற்றுக் கலங்கிய பிற கட்சிகளைப்போல என் எதிரிகள் கலங்குவார்கள்...!' என்றும் சிந்தித்தாள் கோமு.

கார் ஓட்டும்போது அக்கம்பக்கம் பார்க்கும் பழக்கம் அறவே இல்லாதவள் பாட்டி. ஒரு தடவை அப்படிப் பார்த்து, ஒரு போதைச் சலவைகாரரின் பேதைக் கழுதையை உரசிவிட்டாள். அதன் முதலாளி, தன் கழுதைக்கு கற்பே பறிபோய் விட்டதைப்போல பேட்டையைக் கூட்டியதும், வாழ்வில் முதல்முறையாகச் சற்று மிரண்டாள் பாட்டி. பின்னர், அவ்வழியே வந்த ஹாஃப் பிளேடு கருணாவால் காப்பாற்றப்பட்டாள்!

கோமுவுக்கு ரவுடி கருணாவின் ஞாபகம் திடீரென்று வந்ததும் புன்னகை அரும்பியது. 'அவன் ஒரு படிக்காத மேதை! கூடிய அந்த பேட்டைக் கூட்டத்தை தனது உரத்தக் குரலால் எவ்வளவு அழகாக அதட்டி அடக்கினான்?'

"ஏண்டா தோஸ்துகளா, பெரியம்மா வோணுமின்னா இடிச்சாங்க? கய்தே நீ ரோட்டாண்டை பொதியை சொமந்தா? அவங்க ஒண்ணியும் எண்ணியும்மாதிரி சும்மாங்காட்டியுமா இருக்காங்க? ஆயிரம் ஜோலி. நீதி தேவதை! ஊரைப்பத்தியும் நாட்டை பத்தியும் எவ்வளவு திட்டம் போட்டுக்கினு இருப்பாங்க தெரியுமா? ஒத்து, ஒத்து. போய் ஜோலியைப் பார்...!" என்று துரத்தி, பாட்டியிடமிருந்து இரு நூறு ரூபாயைப் பெற்று, கழுதையின் ஓனரிடம் கொடுத்தான்.

"ஜமாய் நைனா...!" என்று அவனை தாஜா செய்து, உரிமையாகப் பாட்டியின் காரில் ஏறிக்கொண்டான்.

'காலத்தின் கட்டாயம், கருணா ரவுடியானது. அவனைப் போன்றவர்களுக்கு கழகம் சார்பில் நான் ஏன் ஒரு ரெஹிபிலியேஷன் கேம்ப் தயார் பண்ணக்கூடாது?

'குழந்தை பிறக்கும்போது ரவுடியாகவா பிறக்கிறது? காலமும் வளர்ப்பு முறையும், குறிப்பாக கெட்ட ஸ்நேகிதர்களின் சகவாசமும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.
டேக் அன் எக்சாம்பிள்... ஒரு சாதாரண பிக் பாக்கெட்டை, கணவர் சுப்புசாமி, குண்டு ராஜா போன்றவர்கள் மிஸ் கைடு செய்து, பெரிய விக்டிமில் ஈடுபட வைத்து விடுவது, கருணா போன்றவர்களின் குற்றமா?' - கோமு யோசித்துக் கொண்டே வருகையில், "தொப்" என்ற பெரும் சப்தம்... டேஷ் போர்டில் ஏதோ சேற்றுப் பன்றி மோதியது போல...

"ஆ, ஐயோ பூட்டேனே...!" என்ற அராக் அலறல்!

"டாய்ய்...வெளியிலே வாடா...!" என்று உதார் விட்டபடி முன்னே வந்த போதை ஆசாமி, காரை ஓட்டியவரைப் பார்த்ததும், லுங்கியை இழுத்து விட்டுக்கொண்டு சலாம் வைத்தான்.

"ஓ, பெரீம்மா நீங்களா...?"
*****
"உன்னைப்பற்றி இப்பொழுதுதான் பெருமையாக நினைத்தேன். நீயோ வாலண்டிரியாக காரில் வந்து விழுகிறாய்...!"

பிளேடு எழுபத்தெட்டாவது தடவையாக பாட்டியிடம் மன்னிப்பு கோரினான்.

"வூட்ல பைனான்ஸ் பிராபிளம், சமசாரத்துக்கிட்டே எகிறிட்டேன். மன்சு கேக்கலை. ரெண்டு அவுன்ஸ் எக்ஸ்ட்டிரா பூடுச்சி, அம்மா...!"

"ஓகே...ஓகே...கூல். இந்தா இதைப் பிடி...!"

நான்கு ஐநூறு ரூபாய் தாள்கள்!

கருணா கண்ணீர் விட்டான்.

"நீங்களும் ரெண்டாயிரமா...நான் ஹெல்ப் செய்யாமலேயே...?பெரீவரும் ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தாரு. நான் செஞ்ச ஒதவிகாண்டி...!"

உணர்ச்சி வசப்பட்டு, தழுதழுத்தான்.

"நவ்...பிரீஃப்ளி எக்ஸ்ப்லெயின் டூ மி...இரண்டு நாட்களுக்குமுன் நடந்ததைச் சொல்...!" - என்றாள் பாட்டி கண்டிப்புத் தோரணையுடன்.
*****
"ஆகவே...எனவேதான் நான் கேட்க ஆசைப்படுகிறேன். ஆணில்லாமல் பெண் தனித்து வாழலாம் என்பது உங்கள் எண்ணம். எமது எண்ணமும் அதுவே. பெண்ணில்லாமல் ஆணினம் அமைதிப் பூங்காவாக மாறாதா, என்ன? இப்போது நான் ஒருத்திக்கு வாக்கப்பட்டிருந்தாலும் (கோமுவை சில நொடிகள் அமைதியாய் நான் கூர்ந்து பார்க்க வேண்டும். பின்னர் கை தட்டல் விண்னைப் பிளக்கும்!) தனித்து வாழவில்லையா? எமக்குத் தேவை பொருளாதாரச் சுதந்திரம்! அதை...அதை அடைய..." - மரத்தடியில் மனனம் செய்த சுப்புசாமிக்கு சோடா தாகம் எடுத்தது.

"அபாரம் மாமா! பிளந்து கட்டுகிறீர்கள். உங்கள் நெஞ்சத்தைப் பிளந்தும் காட்டுகிறீர்கள். சபாஷ்...!" - என்று பி.எஸ்.வீரப்பா சிரிப்பு சிரித்தாள், பொன்னம்மா டேவிட்.

கோமுவின் கார் மிடுக்காக நுழைவதைப் பார்த்தார், தாத்தா.

'அட, அவளோடு உள்ளே அமர்ந்திருக்கும் ஆண் மகன் யார்?' - இடுங்கிய கண்களால் ஊடுருவினார்.

ஹாஃப் பிளேடு தன் கிருதாவை நீவியபடி திமிராக வீற்றிருந்ததைப் பார்த்ததும் அதிர்ந்தார்.

(குறும்பு தொடரும்....)