தொடர்கள்
கதை
பசித்த வயிறு - முனைவர் என்.பத்ரி

20250325075836522.jpg

இரகு வழக்கம்போல் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தை அந்த கோவிலின் முன்னால் நிறுத்திவிட்டு கோவிலுக்கு உள்ளே சென்றான். சுவாமி வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வந்த அவனுக்கு அவனுடைய டூவீலர் துடைத்து புத்தம் புதியதாக காட்சியளித்தது. பக்கத்தில் ஒட்டிய வயிற்றுடனும், தூக்க கலக்கத்துடனும் நின்றுக் கொண்டிருந்தான்.அவனுடைய கையில் ஓர் அழுக்குத் துணி இருந்தது.

அவனைப் பற்றி விசாரித்ததில் அவன் ஓர் ஆதரவற்றவன் என்பதும் எதிரே மேம்பாலத்தின் கீழேதான் ஆறு மாதமாக வசிப்பதாகவும் கூறினான். மேலும் பசிப்பதாகவும் ஏதாவது உண்பதற்கு தருமாறு இரண்டு கரங்களை கூப்பிட்டு வேண்டினான்.

ரகுவின் மனம் கனத்தது. இவனும் இப்படித்தான் ஆதரவற்ற நிலையில் ஒரு அனாதை இல்லத்தால் வளர்க்கப்பட்டான். அங்கேயே படித்தான். இன்று ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறான்.

சென்னை தாம்பரத்தில் அடுக்ககம் ஒன்றின் வாடகை அறையில் வசித்து வருகிறான். அவனுக்கென்று யாரும் நட்புகள் அலுவலகத்தில் கூடக் கிடையாது. கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவன். அவன் மனம் இறங்கியது. தன்னுடைய டூவீலரை துடைத்து விட்டு பசித்த வயிறுக்கு உணவு கேட்கும் அந்த சிறுவனின் குணம் ரகுவை மிகவும் கவர்ந்தது.

அவனுக்கு வாழ்வில் முன்னேற ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினான். தன்னுடைய மதிய சாப்பாட்டு டப்பியை அவனிடம் கொடுத்தான்.’ இதை சாப்பிடு’ என்று சொல்லிவிட்டு தன்னுடைய வேலைக்கு புறப்பட்டான் ரகு.

மறுநாளும் அந்த கோவிலின் முன்னால் அந்த பையன் இருந்தான். அதேபோன்று அங்கு நின்றிருந்த மற்ற வாகனங்களையெல்லாம் கூட சுத்தம் செய்து கோவிலை விட்டு வெளியே வருபவர்களிடம் ஏதேனும் உதவியைக் கேட்டான்.

காலதாமதம் செய்யாமல் அவனுக்கு உதவி செய்ய வேண்டும், அவனுடன் பக்கத்தில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்றான்.’இந்த பையனை என்னுடைய வீட்டு வேலைக்காரனாக என்னுடைய வீட்டில் சேர்த்துக் கொள்கிறேன். இவனை யாராவது காணவில்லை என்று உங்களிடம் புகார் கொடுத்திருந்தால் என்னிடம் வந்து என்னிடமிருந்து இவனை அழைத்துச் செல்லுங்கள்’ என்று அவனுக்கு அந்த பையனைப் பற்றி தனக்கு தெரிந்த விவரங்களை எழுத்து மூலம் அவனுடைய புகைப்படத்துடன் எழுதிக் கொடுத்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு அந்தப் பையனை அழைத்து வந்தான் ரகு.

பசி சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் பல. அதை அனுபவிக்கும் மக்களுக்குத்தான் அதனுடைய வேதனை புரியும் என்பதை ரகு உணர்ந்தவன். பசித்த வயிறு சில பேரை உழைக்கச் சொல்லுகிறது. சிலரை திருடச் சொல்கிறது. நல்ல வேலை பாபுவுக்கு தீயச் செயல்களில் ஈடுபடும் சிந்தை இருக்கவில்லை.

வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், அவனுக்கு வேண்டிய உணவை சமைத்து கொடுக்கவும் நேர்த்தியாக ரகுவுக்கு உதவினான் பாபு. பாபுவும் ரகுவும் உடன்பிறவா சகோதர்களாகி விட்டார்கள்.

இப்பொழுது அவன் ரகுவின் வீட்டிற்கு வந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இதுவரை அவனை வந்து யாரும் மீட்டுப் போக வில்லை. ’ஒருவேளை அவனும் என்னைப் போல ஒரு அனாதையாக இருப்பானோ?’ என்று எண்ணினான் ரகு. நாளடைவில் அவனுக்கு அவன் ஒரு பாசமிகு தம்பியாகவே மாறிவிட்டான்.

’ஆதரவற்ற மக்களுக்கு உதவும் நல்ல குணம் வசதி படைத்த மக்களுக்கும் இருந்தால், இந்த நாட்டில் வறுமையும் இருக்காது. பசியுடன் மக்கள் தவிக்கும் நிலையும் இருக்காது’ என்று பொது மேடையில் தலைவர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.