அப்பாவிற்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. இறுதிவரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்து காட்டியவர். ரொம்ப டிசிப்ளின். “ராமகிருஷ்ணன் எதை விட்டாலும் டைரி எழுதுவதை விடமாட்டார்” என்று அவர் காது படச் சொன்னால் குதூகலிப்பார்.
1965-70 களில் அவர் பணி நிமித்தம் அடிக்கடி பிராயணம் செய்துள்ளார். இங்கிலீஷில் சற்றே சாய்த்து எழுத்துவார். அச்சு போல் ஒரே அளவில் எழுத்து இருக்கும்.
மனிதர்களுக்கே மதிப்பில்லை. பழைய அடைசல் எல்லாம் வீட்டை அடைத்துக் கொள்ளணுமா? இதைச் சேர்த்து வைக்க என்ன சென்டிமென்ட்டோ? என்று என் மனைவியும் நானும் அலுத்துக்கொள்வதுண்டு.
ஆனாலும், அப்பாவின் நினைவாக ஒரே ஒரு டைரி மட்டும் வைத்துக்கொண்டு மற்றதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் போகி.
ஒரு நாள் மதியம் ஏதோ தேடப்போக அப்பாவின் 57 வருடம் முந்தைய அந்த டைரி கண்ணில் பட்டது. திருநெல்வேலிக்கு ஆபீஸ் டூர் போனது பற்றி இருந்தது. அருகிலிருக்கும் திருச்செந்தூர் போனதுதான் ஹை-லைட் பக்கம்.
ஓவர் டு அப்பா.
1968 இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு காரணமாக சென்னையே விழாக்கோலத்தில் இருக்கிறது. கடற்கரை முழுவதும் வரிசையாக சிலைகள்.
இது அவசரப் பயணம். ஆஃபீசில் இருந்து சீதாவிற்கு போன் செய்து சொன்னேன்.
“சீதா, வீட்டிற்கு வந்து பின் எக்மோர் ஸ்டேஷன் போக நேரமில்லை. அவசர வேலையாக திருநெல்வேலி செல்கிறேன். டிரைவர் பழனியிடம் என் டூர் டாய்லெட் கிட் மற்றும் மூன்று நாட்களுக்கு வேண்டிய துணிமணிகளைக் கொடுத்தனுப்பு.”
ரயிலில் எத்தனை வித மனிதர்கள். ஒவ்வொரு முகத்திலும் வேறுவேறு பாவங்கள்.
பேரனுடன் வந்த ஒரு வயதான தம்பதியும் (பேரன் பெரிய விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்துள்ளான்), கல்லூரி முடித்து வேலை தேடும் ஒரு இளைஞனும் இருந்தனர். அந்த இளைஞன் ஓடாத மின் விசிறியைத் தன் பின் பாக்கெட் சீப்பை எடுத்து ஓட விட்டான்.
நான் இன்டெர்னல் ஆடிட்டர் என்றதும் கொஞ்சம் பெருமிதமாகப் பார்த்தார்கள்.
பெரியவர் சொன்னார். “இவன் நல்லபடியாக மீண்டு வந்ததால் திருச்செந்தூர் முருகனுக்கு முடி காணிக்கை செலுத்தப்போகிறோம். இவன் பாட்டியின் வேண்டுதல். தள்ளிப்போடாமல் நிறைவேற்றணும். அதான் கிளம்பி வந்தோம்.”
நான் சொன்னேன்.
“உங்கள் பேரன் பிழைத்து வந்தது மகிழ்ச்சி. ஆனால் கடவுளிடம் நீ இதைச் செய்தால் நான் இதைச் செய்கிறேன் என்பதை வியாபாரமாகத்தான் நான் பார்க்கிறேன். என்னை மன்னிக்கவும்.”
பாட்டியின் முகம் வாடிவிட்டது. என்னைப் பார்த்து சாந்தமான குரலில் சொன்னார். “நம் முன்னோர்கள் அனுபவப்படி சொன்னதை அவரவர் நம்பிக்கைப்படி செய்கிறோம். இதில் சரி தப்பு தாண்டி நிம்மதி கிடைக்கும். அதை அனுபவிச்சுப் பார்த்தாதான் பா தெரியும். நாளை முருகனுக்கு ஒரு வேண்டுதலும் இல்லாம முடி காணிக்கை கொடு. உன் குடும்பத்தை அப்பவும் காப்பாத்துவான். என்னை மாதிரி சாமானியப் பொம்பளைக்கு இருக்கற மாதிரி அவனுக்கு நம்மகிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்ல.”
“ஓ…அட்வான்சா பிரார்த்தனை நிறைவேற்றணும் என்று சொல்கிறீர்கள். கண்டிப்பாகச் செய்கிறேன் அம்மா. நாளை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சந்திப்போம்.”
***
மறுநாள் காலை. கோயில் தரிசனம் முடித்து மீண்டும் நெல்லை ஹோட்டல் அறைக்குத் திரும்பினேன். பத்து மணிக்குத் தானே ஆஃபீஸ். ஹோட்டல் ரிசப்ஷன் ஆள் எதிர்பட்டார். முடி காணிக்கை செலுத்திய என் முகம் முதலில் அவருக்கு அடையாளம் தெரியவில்லை. பிறகு சாவியைக் கையில் கொடுத்தவர்,
“சார் உங்களுக்கு சென்னையிலிருந்து போன். மூன்று முறை வந்தது.”
மனைவி சீதா பதற்றமாகப் பேசினாள். “என்னங்க, அந்த ஷாம்பு பாட்டிலில் இருப்பது ஷாம்பு இல்லை. பாத்ரூம் கழுவும் ஆசிட். அதைத் தொடாதீர்கள். புதிய வேலைக்காரி பெரிய பாட்டிலிலிருந்து, காலி ஷாம்பு பாட்டிலில் ஊற்றி வைத்துள்ளாள். என்னிடம் சொல்ல மறந்துவிட்டாளாம். கோபித்துக்கொண்டேன். அது தெரியாமல் உங்களுக்கு வைத்துவிட்டேன். உங்கள் ஆபீஸ் மூலம் ஹோட்டல் நம்பர் பெற லேட்டாகி விட்டது. உங்களிடம் பேசிய பிறகுதான் மூச்சே வருகிறது.”
“பதறாதே சீதா. எனக்கு ஒன்றும் ஆபத்து இல்லை.”
விபரம் சொன்னேன். எதுவும் வேண்டாமல் செய்யும் பிரார்த்தனைக்கும் பலன் உண்டு என்று திருச்செந்தூர் முருகன் காண்பித்து விட்டான்.
…
அப்பாவின் டைரியை மூடி வைத்துவிட்டு, நெஞ்சோடு சேர்த்துக்கொண்டேன். “அப்பா! முருகா!” என்று என்னையும் அறியாமல் வாய் உச்சரித்தது.
Leave a comment
Upload