நிருபர் கால சம்பவங்களை சென்னையில் ஒரு பிரபல வழக்கறிஞரிடம் பகிர்ந்து கொண்டபோது, அவர் சொன்னார், ‘‘உன்னை ஆள்மாறாட்டம், திருட்டு ஆகிய செக்ஷன்களில் உள்ளே தள்ளணும்.’’
புதைந்திருக்கும் உண்மைகளை கண்டறிந்து செய்திகளை எழுதுவது எளிதல்ல. அதற்கு அவன் மேற்கொண்ட உத்தி, ஆள்மாறாட்டம் மற்றும் புத்தகக் கடத்தல்.
கும்பகோணம் பண்ருட்டி சாலையில் அவன் வாய் பிளந்து நிற்கும் ராட்சதக் குழாய்களைப் பார்த்தபோதெல்லாம், ‘மக்களின் வரிப்பணம் இப்படி பாழாகிறதே?’ என்று வருந்தினான். அந்தக் குழாய்களை சிலர் தட்டியால் மூடி, குடித்தனம் இருந்தார்கள். சில குழாய்களில் குழந்தைகளும், நாய்குட்டிகளும் விளையாடிக் கொண்டிருந்தன. இதற்காகவா இந்த ராட்சத குழாய்கள் தயாரிக்கப்பட்டன? அல்ல. அவை வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல, கருணாநிதி போட்ட திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட குழாய்கள். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் குழாய் தயாரிப்பு கூடம் மூடப்பட்டது. அதனால் அரசாங்க ஒப்பந்தத்தின்படி குழாய்கள் தயாரித்த நிறுவனம் நொடித்துப் போனது.
அந்தக் குழாய்கள் பற்றி அவன் ஒரு செய்திக்கட்டுரை எழுத விரும்பினான். நெய்வேலி அருகே காடாம்புலியூரில் குழாய் தயாரிப்பு கூடம் இருந்தது. அங்கே நேரடியாகச் சென்று தகவல் பெறுவது சாத்தியமல்ல. எப்படியாவது அந்தக் குழாய்களின் தன்மை பற்றி அறிந்துகொண்டு, விரிவானதொரு செய்திக்கட்டுரை எழுத வேண்டுமென்று விரும்பினான். அதற்காக அவன் ஒரு உத்தியை மேற்கொண்டான்.
ஒரு நாள் என்எல்.சி நிறுவனத்தின் மக்கள் தொடர்புத்துறை ஜீப்பை இரவல் வாங்கிக் கொண்டு, மக்கள் தொடர்புத்துறை ஊழியர் ஜம்புநாதன் என்பவரையும், புகைப்படக்காரரையும், அழைத்துக் கொண்டு அந்தத் தொழிற்கூடத்திற்குச் சென்றான். அங்கே ஒரே ஒரு சிவில் இன்ஜினியர். புயலில் அடிபட்டவர் போல கலைந்த தலையுடனும், கசங்கிய சட்டையுடனும் இருந்தார். அவரிடம் தன்னை ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இன்ஜினியர் என்றும், நிறுவனத்தின் சேர்மன் தமிழ்நாடு அரசாங்கத்துடன் அந்தக் குழாய்களை நெய்வேலியில் பயன்படுத்திக் கொள்ள பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், குழாய்கள் பற்றிய ‘டெக்னிகல்’ தகவல்கள் தனக்கு தேவை’ என்றான்.
அங்கிருந்த இன்ஜினியர் அவனைக் கொஞ்சமும் சந்தேகப்படாமல் பீரோவில் பூட்டி வைத்திருந்த ஒரு பெரிய கோப்புகளை கையில் எடுத்து, மேஜைமேல் பரப்பி, அதிலிருந்த தகவல்களைச் சொன்னார். மொத்தம் எத்தனை குழாய்கள் அங்கே செய்யப்பட்டன, ஒவ்வொரு குழாயின் விட்டம் எவ்வளவு? பருமன் எவ்வளவு? நீளம் எவ்வளவு? ஒரு குழாயை தயாரிக்கும் செலவு என்ன? என்ற விபரங்களையெல்லாம் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். பொதுவாக அவன் எங்கும் குறிப்பு நோட்டுப் புத்தகத்தையோ பேனாவையோ எடுத்துக் கொண்டு செல்வதில்லை. விதிவிலக்காக அன்று மட்டும் பேனாவுடனும், நோட்டுடனும் சென்றான்.
நெய்வேலி நிறுவன ஊழியர் ஜம்புநாதனை குழாயில் நிற்க வைத்து, குழாயின் விட்டம் ஐந்தரை அடி என்பதைக்காட்ட புகைப்படம் எடுத்தான். ‘தொழிற்கூடத்திற்குள் குழாய்களை போட்டோ எடுக்க வேண்டாமே’ என்று அந்த இன்ஜினியர் கேட்டுக் கொண்டார்-. ‘இந்த ஒரு போட்டோ மட்டும் இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டான். தொழிற்கூடத்தின் வெளியே இருந்த குழாய்களை புகைப்படம் எடுத்துக் கொண்டான். போதிய தகவல்கள் கிடைத்தன.
வீடு திரும்பியதும், கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு நீண்ட கட்டுரை டைப் செய்தான். அன்று மாலை புகைப்படக்காரர், புகைப்படங்களைக் கொடுத்தார். (அதுடிஜிட்டல் கேமரா இல்லாத காலம்). அன்றே தன் கட்டுரையை, புகைப்படங்களுடன் ஹிண்டு அலுவலகத்திற்குத் தபாலில் அனுப்பினான். இரண்டு நாட்கள் கழித்து நான்கு புகைப்படங்களுடன் ஏறத்தாழ அரை பக்க அளவுக்கு அந்தக் கட்டுரை வெளிவந்தது அவனது நண்பர்களான நெய்வேலி இன்ஜினியர்களும், டாக்டர்களும், ‘போச்சு, போச்சு, உன்னை அரசாங்கம் தொலைச்சிடும். அந்தக் குழாயிலேயே உன்னை சமாதி கட்டிடுவாங்க. பொல்லாத விஷயத்தை தூண்டி துருவி எழுதியிருக்கே. உன் கதை அவ்வளவு தான்’ என்று பாதி நிஜமும், பாதி கேலியுமாக பயமுறுத்தினார்கள். ஆனால் கட்டுரை வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அவன் ஆள்மாறாட்டம் செய்திராவிட்டால், செய்திக்கான ஆதாரங்களை திரட்டி இருக்க முடியாது. எப்படியாவது செய்தி என்ற இலக்கு ஒரு நிருபருக்கு இருந்தாக வேண்டும்.
மூன்றாம் நாள் காலை 10 மணியளவில் நெய்வேலியில் அவன் வீட்டிற்கு நன்றாக உடை அணிந்திருந்த நடுத்தர வயது மனிதர் வந்தார். தடாலென்று காலில் விழுந்தார். அவரை அடையாளம் தெரியவில்லை. ‘‘ஐயா, உங்களுக்கு புண்ணியமாப்போகும். நல்லாயிருப்பீங்க, நான் தான் உங்களுக்கு தகவல் கொடுத்தேன்னு தெரிஞ்கிட்டு அரசாங்கம், என்னை திருச்சிக்கு அப்பால் தெற்கே ஒரு பாசன திட்டத்தைப் மேற்பார்வை செய்ய அனுப்பிவிட்டது. இதைவிட பாலைவனமும், புதர்வெளியும் நல்ல இடம் தான். மூன்று வருடகாலமாக காடாம்புலியூரில் பிணத்தின் அருகே காவல் காத்திருக்கும் போலீஸ்காரன் போல் அந்தப் பிரேதக் குழாய்களின் மத்தியில் இருந்தேன். உங்களால் சாப விமோசனம் வந்தது’’ என்று நன்றி சொல்லிவிட்டுச் சென்றார். நண்பர்கள் இதைக் கேட்டு ஆச்சர்யட்டார்கள்.
வீரப்பன் என்கிற தலைமை என்ஜினியர் சொன்னார், ‘அது அந்த இன்ஜியருக்கு நல்ல காலம். உனக்கு நல்ல காலம் இல்லை, இனிமேல் இருக்கிறது பார்’ என்று பயமுறுத்தினார். அவன் பயப்படவில்லை, அப்படி எதுவும் நடக்கவும் இல்லை. ஏனென்றால் அவன் தன் செய்திக்கட்டுரையில் கொடுத்த தகவல்கள் எல்லாம் உண்மை. எப்படி தகவல்கள் சேகரித்தான் என்பது அரசாங்கத்திற்கு தெரியவராத விஷயம்.
என்ன செய்வது? பத்திரிகை துறையின் ‘த்ரில்’களில் அதுவும் ஒன்று. ரிஸ்க் எடுக்காமல் சில செய்திகளை சேகரிக்க முடியுமா-? ஆள் மாறாட்டம் மட்டுமல்ல, அவன் ஒரு புத்தகத்தை திருடியும் இருக்கிறான். அவன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராக இருந்தபோது ஒரு அகராதி அளவுக்கு பருமனான பல்கலைக்கழக சட்டதிட்டங்கள் பற்றிய புத்தகத்தை பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்திருந்தது. அது தேவையில்லை என்று எங்கோ போட்டுவிட்டான். அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டத்தின் போது அந்த சட்ட திட்டங்களை மேற்கோள்காட்டி செய்திகட்டுரை எழுத விரும்பினான். தன்னிடம் இல்லாத அந்தப் புத்தகம், பதிவாளரின் மேஜை மீது இருந்ததை சில சமயம் பார்த்திருக்கிறான். ஒருநாள் தன் கைப்பையில் கொண்டு சென்ற நியூஸ்பேப்பர் போன்றவற்றை பதிவாளரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அந்த பெரிய புத்தகத்தின் மீது வைத்தான். பேசிவிட்டு திரும்பியபோது அந்தப் புத்தகத்தையும் தன் பொருட்களோடு சேர்த்து எடுத்து வந்துவிட்டான். கையில் அந்தப் புத்தகத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் நடமாடுவது சரியல்ல என்று தோன்றியதால் அங்கு வந்திருந்த உளவுத்துறை அதிகாரியின் மோட்டார் சைக்கிள் பெட்டிக்குள் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று போட்டுவிட்டான். அவனுக்கு அது அப்போது தேவைப்பட்டது. அதை புத்தகத் திருட்டு என்று சொல்லமுடியாது, கார்யார்த்தமான கடத்தல். அதன் ரிஸ்க் நிருபருக்கு.லாபம் வாசர்களுக்கு.
ஒரு நிருபர் செய்தியின் நம்பகத்தன்மைக்காக இப்படி ஆள்மாறட்டமும், திருட்டும் செய்வது தவிர்க்க முடியாதது ஆகிறது. தனக்கு சொந்த லாபம் இல்லையென்கிற வரையில் நிருபர் குறுக்கு வழிகளை நாடலாம். அவன் தன் தொழிலை சரியாக செய்வதற்கு தேவைப்படும் உத்திகள். அவை ஆபத்துக்கு பாவமில்லை என்பது அதுதானோ?
Leave a comment
Upload