காதல் பிரச்சனை – சிறுகதை – பா.அய்யாசாமி
என்னங்க, நம்ம காயத்ரியோட ஜாதகத்தை ஆன்லைன் திருமண மைய்யத்திலே பதிவு செய்திருந்தீங்களே ? வேறு யாராச்சம் பேசினாங்களா என ஆர்வமாக கேட்ட தன் மனைவி துர்காவை,
ஏம்மா,அவசரப்படறே அததற்கு நேரம் வரும்போது தானாக முடியும் என்றார் சங்கர்.
என்னங்க இது ? நாம கவலைப்படாமல் இருக்க முடியுமா ? ஏற்கனவே நல்ல இடம் ஒன்று பேசி கடைசியில் நின்னுப் போனதே எத்தனை மன வருத்தத்தை கொடுத்தது. பொம்பளப் பிள்ளையை வீட்டிலே வச்சுக்கிறது பஞ்சு மூட்டையை அடுப்படியிலே வச்சிருக்கிறமாதிரி இருக்கு. சீக்கிரமா முடிஞ்சிட்டா தேவலை என புலம்பினாள்.
"நான் என்ன பஞ்சு மூட்டையா உனக்கு? பிடிக்கலைனா சொல்லுங்க நான் போய் PG யிலே தங்கிக்கிறேன் என்று காயத்ரி சொன்னதும், விடும்மாஅம்மாதானே சொல்றாங்க என சமாதானப்படுத்தினார்.
ஏதாவது விசாரனை வந்துயிருக்கா பாருடா காயத்ரி! என சங்கர் சொல்லவும் லேப்டாப்பைத் திறந்து பார்த்தவள்,
என்னப்பா இது ?
என்னம்மா?
அந்த சைட்டில்,தெரிந்தவர்கள் இரண்டு நபர் ரெபரன்ஸ் கேட்டிருந்ததில் ஏதேனும் அப்டேட் செய்திங்களா ? என கேட்டாள் காயத்ரி.
ஆமாம்பா என் பிரண்ட் பேரை சேர்த்து விட்டேன் என்றார்.
பிரண்டா ? இது எப்போதிலிருந்து என ஆச்சரியப்பட்டவள், குடும்பத்தோடு வந்து என்னை பெண் பார்த்து விட்டுப்போயிட்டு வேண்டாம்னு சொன்னவங்க உன் பிரண்டா ? அவர்களைப்போய் இதிலே சேர்த்து விட்டியிருக்கே, யாரவது நம்மைப்பற்றி விசாரித்தால் நல்லவிதமாகச் சொல்வாரா? இல்லாததையும், பொல்லாததையும்தான் சொல்லுவாரு, உனக்கு என்ன ஆச்சு லூசாப்பா நீ ? என்று பிதாமகன் பட லைலா ஸ்டைலில் கேட்டாள்.
அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்,நீ ஏதாவது தப்புத்தப்பா நினைச்சுக்காத, அவரு தன் பையனுக்கு உன்னை வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம் வேற எதுவும் இருக்கலாம் இல்லே,மனசால ரொம்ப நல்லவருமா அதனாலதான் அவரு பேரையும் சேர்த்துக் கொடுத்தேன் என்றார் சங்கர்.
என்ன காரணம் ? கேட்ட காயத்ரியை வா என்று தனியாக அழைத்துப்போனார் ,
"உங்க அம்மா காலேஜ் படிக்கிறபோது இவர் இரண்டு வருட சீனியர், அத்துடன் சின்சியரா ஒருதலை லவ் வேற உங்கம்மா மேலே.
உங்கம்மாவிற்கு அவர் மீது லவ் இல்லை என்றாலும், அவர் முடிவாக கேட்டதற்கு, தாத்தாவிற்குப் பயந்து காதலைப்பற்றி வாயைத் திறக்காமல் இருந்ததினால், அவர்கள் பார்த்துவைத்த என்னை கல்யாணம் பண்ணிகிட்டாளாம் உங்கம்மா..
செம ட்விஸ்ட்பா...அப்புறம் ? என்றாள் காயத்ரி.
வேறென்ன, பெண்பார்க்க வந்த இட்த்தில் துர்க்காவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தவரு, போய் வருகிறோம்னு சொல்லிவிட்டு என்னிடம் இதையெல்லாம் போன்ல சொன்னாரு..என்று நிறுத்தினார் .
அதனாலே ? சம்பந்தியாகிய பின்னால் அடிக்கடி இரு வீட்டாரும் வரப்போக இருப்போம், இருவருக்கும் மனத்தளவிலே ஒரு நெருடல் இருந்துக்கொண்டே இருக்கும், அதனாலேதான் வேண்டாம் என்றார் என்று சொன்னதும்,
அம்மாவிற்கும் அடையாளம் தெரியலையா அவரை ?
எங்கம்மா ? ஆண்களுக்குத்தான் ஐம்பதிலேயே தொந்தியும்,சொட்டை விழுந்திடுதே, என்றார்.
அப்பா! உனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையில்லே! என கேட்டு நமுட்டுச்சிரிப்பு சிரித்தாள் காயத்ரி. எனக்கு என்னம்மா பிரச்சினை, அவருக்குத்தான் கொடுத்து வைக்கலை,என்று தன் மனைவியைப் புகழ்ந்தார்.
பிறகு அவரே "காயத்ரியும் எனக்கு மகள் மாதிரிதான்,நல்ல இடமாக நானும் பார்த்துச் சொல்கிறேன் என தனது நம்பரையும் இணைக்கச் சொன்னார் என்றதும்
காதல்கல்யாணம்தான் பல குடும்பங்களில் பிரச்சினையாக இருக்கும், ஆனால் என் கல்யாணத்திற்கு காதலர்களாலே பிரச்சினையாக ஆயிட்டு இல்லேப்பா.. என்று காயத்ரி சொல்ல கை கொட்டிச் சிரித்தனர் அப்பாவும் மகளும்..
Leave a comment
Upload