சென்னையில் மாநிலக்கல்லூரி மற்றும் பச்சையப்பா கல்லூரி மாணவர்களிடையே உள்ள“ரூட் தலை” கலாச்சாரம், கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான போட்டி மற்றும் வன்முறையாக மாறியுள்ளது.
ரூட் தலை என்பது சென்னையை தாண்டி வசிப்பவர்களுக்கு தெரியாது.
“ரூட் தலை” என்பது, குறிப்பிட்ட பேருந்து அல்லது ரயில் பாதையில் பயணிக்கும் மாணவர்களுக்கு தலைமை வகிக்கும் மாணவருக்கான பட்டம்.
அந்த பயண பாதைகளில், தங்கள் கல்லூரி அல்லது பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதை அடையாளப்படுத்திக் கொண்டு, ஒரு குழுவாக இயங்குவார்கள்.
இந்த குழுவிற்கு தலைமை மாணவனை மூத்த மாணவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
ரூட்டு தலை பதவிக்கு வரும் மாணவர் அந்த வழியில் மூன்று ஆண்டுகள் பயணித்திருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை.
ரூட்டு தல கலாச்சாரத்தில் பல மாணவ குழுக்கள், மற்றவர்களை ஆதிக்கம் செலுத்த முயன்றுக் கொண்டிருந்தார்கள்.
அந்த சமயங்களில் திரைப்படப் பாடல்களைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி மாணவர்கள் பாடும் கலாச்சாரம் உருவானது.
இந்த பாடல்களில், அவரவர் கல்லூரியின் பாரம்பரியம், மாணவர்களின் பெருமைகளை புகழ்ந்து பாடுவார்கள்.
எதிரியென கருதும் மற்ற கல்லூரிகளை தாழ்த்தி, கேவலமாக இட்டுக்கட்டி பாடுவார்கள்.
அப்படித்தான் “ரூட்டு 7” அதாவது ப்ராட்வே-கோயம்பேடு பேருந்து வழியில் “ அப்படி போடு..போடு.. போடு .. ரூட்டு 7 ல் பச்சையப்பாவோடு..!” என “கில்லி ” பட பாடலை மாற்றி பாடிய பாடல் பிரபலமான ஒன்று.
சொந்தமாகவே மாணவர்களால் உருவாக்கப்பட்ட “ரூட்டு7 தல வாராண்டா.. பசங்க லைனை விட்டு நில்லுங்கடா !”,
“ஈஸ்ட் கோஸ்ட் எக்பிரஸுல பாஸு யாரு?
எங்க பிரசிடென்சி தல பாரு.! “ போன்ற பாடல்களும் கோஷங்களும் பிரபலமானவை.
ஒரு ரயிலில் இருந்து குதித்து எதிர் ரயிலில் வரும் மாணவர்களை கும்பலாக தாக்குவது போன்ற சம்பவங்கள் நடந்தன.
பாடல்களால் தூண்டப்பட்ட தாக்குதல்கள், பஸ் உடைப்பு, கத்தியால் குத்துதல் போன்ற வன்முறை செயல்கள் நிகழத்தொடங்கின.
கடந்த ஆண்டு அக்டோபர் 4 ம் தேதி, மாநிலக்கல்லூரி மாணவர் சுந்தர், சென்னையின் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் பச்சையப்பா கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டு, அக்டோபர் 9ஆம் தேதி உயிரிழந்தார்.
“ஒரு பாடல்… ஒரு பஸ்… ஒரு தலை… “ என ஹைக்கூ போன்று அழகாக அமைய வேண்டிய கல்லூரி பயணம் கடைசியில் ஒரு மரணத்தில் முடிந்திருக்கிறது.
இந்த வழக்கு விசாரணையில் நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தியதை ஆன்லைனில் பார்த்தோம்.
குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அடுத்து வரும் நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்திரவிட்டார்.
வழக்கில் சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.
வந்திருந்த மாணவர்களின் பெற்றோர்கள் தினமும் வேலைக்கு சென்றால் தான் தங்கள் குடும்பத்திற்கு உணவு என்றும் அதிலும் தங்கள் பிள்ளைகளை வயிற்றை கட்டி வாயை கட்டி படிக்க அனுப்பும் சூழ்நிலையில் தங்கள் பிள்ளைகள் இப்படி குற்றத்தில் ஈடுபடுகிறார்களே என்று அழுதனர். இதனை பார்த்த நீதியரசர் கண்களில் கண்ணீர் திரையிட்டது.
இந்த வழக்கில் கைதான மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார் நீதியரசர் ஜெகதீஸ் சந்திரா.
கடந்த 10 ஆண்டுகளில் 231 கல்லூரி மாணவர்கள் தொடர்புடைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை அளித்தனர்.
மாணவர்கள் மோதல் பிரச்சனைகளில் தக்க ஆலோசனை வழங்க வேண்டும் என மற்ற கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும், நீதியரசர் உத்தரவிட்ட நீதியரசர் ஜெகதீஸ் சந்திரா, நோபல் பரிசு வென்ற சர். சி.வி ராமன், அறிஞர் அண்ணா, கணிதமேதை ராமானுஜர் மற்றும் பிரபல நீதிபதிகள் உட்பட பல உலகப்புகழ்பெற்ற சிறந்த ஆளுமைகள் படித்த இவ்விரு கல்லூரிகளின் தற்போதைய நிலைமை தம்மை மிகவும் வேதனைக்குள்ளாவதாக வருத்தப்பட்டார்.
“குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்” என கூறிய நீதியரசர் ஜெகதீஸ் சந்திரா இதனை தடுக்க கற்றறிந்த அறிஞர்கள், கல்வியலாளர்கள், உளவியல் ஆலோசகர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
தொடர்கள்
பொது
Leave a comment
Upload