தொடர்கள்
தொடர்கள்
பறவைகள் பலவிதம் - இந்த வார பறவை ஊசிவால் வாத்து 20 - ப.ஒப்பிலி

20250323170901697.jpeg

நாணல் நிறைந்த ஏரிகள், உவர் நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் காணப்படும் ஒரு வகை வாத்துகள்தான் இந்த ஊசிவால் வாத்துகள். பாம்பே இயற்கை வரலாற்று சங்கத்தின் துணை தலைவர் முனைவர் எஸ் பாலச்சந்திரன் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வந்த இந்த வாத்துகளின் வலசை பாதைகளை அறிவதற்கு அவற்றின் காலில் வளையம் கட்டி கண்காணித்தார்.

இந்த வாத்துகள் ஆர்க்டிக் பகுதியிலிருந்து பத்தாயிரம் கிலோமீட்டருக்கு மேல் பறந்து சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கரிக்கிளி பறவைகள் சரணாலயம் (வேடந்தாங்கல்), கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் (நெல்லை), கோடியக்கரை பறவைகள் சரணாலயம் (நாகை) ஆகியவற்றிற்கு குளிர் காலத்தில் வந்து பிறகு தங்களது உறைவிடங்களுக்கு மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் திரும்ப செல்கின்றன என்கிறார் அவர்.

கடந்த 2008 டிசம்பரில் கன்னியாகுமரியிலிருந்தும், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திலிருந்தும் இரு ஊசிவால் வாத்துகளுக்கு சாட்டலைட் ட்ரான்ஸ்மிட்டர்கள் பொருத்தப்பட்டு அவற்றின் வலசை பாதைகள், மற்றும் இளைப்பாறும் இடங்கள் குறித்த ஆராய்ச்சியினை மேற்கொண்டார் பாலச்சந்திரன்.

முதலில் இந்த வாத்து கன்யாகுமாரியிலிருந்து 190 கிலோமீட்டர் வடக்கே உள்ள ஒரு சதுப்பு நிலத்தில் இரு மாதங்கள் தங்கி இருந்துவிட்டு, பிறகு மூன்றாவது மாதத்தில் தனது வடக்கு நோக்கிய பயணத்தை தொடர்ந்தது. ஆந்திராவின் நலகொண்டா, பிறகு மத்திய பிரதேசத்திலுள்ள பர்ணா அணைக்கட்டிலும், அதன் பிறகு பாகிஸ்தானின் சக்ராலி பகுதிகளை தனது தற்காலிக உறைவிடங்களாக பயன்படுத்தியது தெரியவந்தது. அதன் பிறகு இந்த வாத்துகள் பயணிக்கும் பாதைகளை கண்டறிய முடியவில்லை என்கிறார் பாலச்சந்திரன்.

மார்ச் மாதத்தில் தனது பயணத்தை தொடங்கிய டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்ட இரு வாத்துகள் முதல் பயணத்தில் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை 54 மணி நேரத்தில் பறந்து தனது வலசையில் முதல் ஓய்வை எடுத்துக்கொண்டது. இந்த வாத்துகள் 565 கிலோமீட்டர் பறந்த பின்பே தங்களது இரண்டாவது ஓய்வை எடுத்தாக கூறுகிறார் அவர்.