நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள், திதிகள் எல்லாம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் சில மாதங்களில் வரும் திதிகளுக்குத் தனிச் சிறப்பு உண்டு. அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திருதியை நாளை 'அட்சய திருதியை’ திருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். “அட்சயா” என்றால் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது என்று பொருள். அட்சய திருதியை நாளில் தொடங்கும் எந்தவொரு புது முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம். மேலும் இந்த நாளில் வாங்கும் மங்கலப் பொருட்கள், செய்யப்படும் தானங்கள் பல மடங்காகப் பெருகும் என்பதும் நம்பிக்கை. எனவே இந்நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்க மக்கள் விரும்புகின்றனர்.
இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள் வீட்டிற்குத் தேவையான மஞ்சள், கல் உப்பு வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். நம்முடைய வீட்டில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும்.
பஞ்சாங்கத்தின்படி, இந்த ஆண்டில் (2025) அட்சய திரிதியை ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 05:29 மணி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி பிற்பகல் 02:12 மணி வரை இருக்கும். உதய தேதியின்படி, இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30, 2025 புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்படிப்பட்ட ரோகிணி நட்சத்திரம் மற்றும் புதன்கிழமை சேர்ந்து வரும் நாளில் இந்த ஆண்டு அட்சய திருதியை அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது ஆகும். ஏப்ரல் 30 காலை 5:41 மணி முதல் மதியம் 2:12 மணி வரை தங்கம் வாங்க மிகவும் நல்ல நேரம். இந்த நேரத்தில் லட்சுமி மற்றும் குபேரருக்குப் பூஜை செய்யலாம்.
புராணத்தில் அட்சய திருதியை:
பிரம்மா படைக்கும் தொழிலை ஆரம்பித்ததும், திருமாலின் அவதாரமான பரசுராமர் அவதரித்ததும், ஸ்ரீ அன்னபூரணியிடம் சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு பிட்சைப் பெற்றதும் அட்சய திருதியையில்தான். கிருஷ்ணனுக்கு, அவல் கொடுத்து குசேலன் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்றது, பஞ்ச பாண்டவர்கள் சூரிய தேவனிடமிருந்து அள்ள அள்ளக் குறையாக அட்சய பாத்திரத்தைப் பெற்றது, திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் ஆடையை வளரச் செய்ததும் இந்த அட்சய திருதியை நாளன்றுதான். திரேதாயுகம் தொடங்கிய நாள், குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம், பகீரதன் தவம் செய்து கங்கையைப் பூமிக்கு வரவழைத்ததும் இந்நாளில்தான். வேத வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்ததும், ஆதி சங்கரர் செல்வத்தைக் கொட்டிக் கொடுக்கும் ஸ்லோகமாகிய கனகதாரா ஸ்தோத்திரத்தை இயற்றியதும் இந்த திருநாளில்தான்.
வடமாநிலங்களில் அட்சய திருதியை:
வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதைப் புனிதமாகக் கருதுகிறார்கள். நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள். அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட் இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்குச் செல்வார்கள். ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்டச் சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது. பீகார், உத்தரப்பிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தான் தொடங்குவார்கள். ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும். சமணர்கள் இந்த நாளை “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.
அட்சய திருதியை தினத்தை சத்தீஸ்கரில்‘அக்தி’ என்றும் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ‘அக்த தீஜ்’ எனவும் கொண்டாடுகிறார்கள். வங்காளத்தில், அட்சய திருதியை “அல்கதா” எனும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அது விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகம் எழுதத் தொடங்கும் நாளாகும். இந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்கலகரமான நாளாகும்.
பதினாறு கருட சேவை தரிசனம்:
கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பதினாறு பெருமாள் கோவில்களில் இருந்து பதினாறு பெருமாள்கள் அட்சய திருதியை தினத்தன்று கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் அனைத்து பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்கள். இந்த அற்புத காட்சியைத் தரிசித்து வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை நாளில் செய்ய வேண்டியவை:
அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. அட்சய திருதியை நாளில் படிப்பைத் தொடங்குவது, மற்றவர்களுக்கு உதவி செய்வது நல்ல பலனளிக்கும் என வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்ச்சாதம் தருவது, 11 தலைமுறைக்குக் குறையில்லா அன்பைக் கிடைக்கச் செய்யும். அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். அட்சய திருதியை அன்று மஹாலட்சுமி வாசம் செய்யும் பொருட்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அது தங்கம், வெள்ளி மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், கல் உப்பு, மஞ்சள் ஆகியவற்றையும் நாம் வாங்கலாம்.. இதைத்தவிர புதிய வாகனம், புதிய ஆடைகள் வாங்கச் சிறந்த நாள்.
வழிபாடுகள்:
அட்சய திருதியை அன்று லட்சுமி பூஜை மற்றும் குபேர பூஜையைச் செய்ய ஐஸ்வர்யம் பெருகும் என்றும் அதைச் செய்ய இயலாதவர்கள், “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:” என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர். அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, சுவாமி படத்தின் முன்பாக சிறிய தொகையை வைத்து வழிபாடு செய்யலாம்.
அட்சய திருதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறையத் தண்ணீரைப் பூஜையறையில் வைத்து நம் எல்லோருக்கும் குறைவில்லாத தண்ணீர் கிடைக்கவும் நல்ல மழை பொழிந்து ஆறு குளம் குட்டை ஏரி எல்லாம் நீர் நிரம்பி விவசாயம் செழிக்கப் பிரார்த்தனை செய்யலாம்.
தொட்டதெல்லாம் துலங்கும் இந்த நன்னாளில், வெறும் பொருள் சேர்க்கையை மட்டும் மனதில் கொள்ளாமல் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் வசதியற்றவர்களுக்கு நம்மால் முடிந்த தான தர்மங்களைச் செய்வது தான் உண்மையான அட்சய திருதியை ஆகும்.
Leave a comment
Upload