உலகத்தின் மிக சிறிய நாடு தான் வத்திக்கான், இருப்பினும், மிக பெரிய நாடாக பார்க்கப்படுகிறது வத்திக்கான் ! இதற்கு காரணம் போப் !.
அந்த நாட்டை ஆள்பவர் போப் ஆண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .
உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்க திருஅவையின் தலைமையிடம் வத்திக்கான் .
கடந்த வாரம் 21ஆம் தேதி காலை போப் பிரான்சிஸ் மறைந்தார் என்று கர்தினால் கெவின் அறிவித்தார் .
கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி 266 ஆவது போப்பாக தேர்தெடுக்கப் பட்டார் இவர் .
அர்ஜென்டெனா நாட்டைசேர்ந்தவர் புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக பணியாற்றியவர் .
தென்னமெரிக்காவிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட முதல் போப்.
இயேசு சபையின் முதல் போப்பும் இவரே .
மூன்றாம் கிரெகொரிக்கு பின் கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பியாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போப் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு .
பிரான்சிஸ் போப் 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார் . ஆயராக 1992 ஜூன் 27 உயர்த்தப்பட்டார்.
பின் 2001 பிப்ரவரி 27 அன்று கர்தினாலாக உயர்த்தப்பட்டார் ஜோர்ஜ் மரியோ பெர்கோலியோ .
கர்தினாலாக உயர்த்த பட்டபோது பேபல் ஆர்ச் பிஷப் பேலசில் தங்காமல் ஒரு சிறு அபார்ட்மெண்டில் வாழ்ந்தார் என்கின்றனர் வத்திக்கான் வாசிகள் .
கால்பந்து ரசிகரான போப் பிரான்சிஸ் அர்ஜென்டெனா லயோனெல் மேசி கோல் அடிக்கும் போது கைதட்டி அர்ஜென்டெனாவுக்கு தன் ஆதரவை கொடுத்தவர் .
போப்பாக தேர்வு செய்தவுடன் புனித பிரான்சிஸ் அசிசியின் எளிமையான வாழ்வை பின்பற்றி தனக்கு பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார் .
ஏழை எளிய மக்களுக்காக வாழ்வதை குறிக்கோளாக வாழ்ந்த போப் .
போப் பிரான்சிஸ் தன் பதவியேற்றவுடன் முதலில் விசிட் செய்த இடம் சிசிலி தீவிற்கு அருகில் உள்ள லாம்படுசா என்ற தீவிற்கு ஒரு சிறிய படகில் சென்றுள்ளார் .
இங்கு மத்திய தரைக்கடல் வழியாக கப்பலில் வந்திறங்கி அகதிகளாக வாழும் மனிதர்களை சந்தித்து அவர்களுடன் பேசி உணவருந்தி வந்துள்ளார் இவர் என்பது அனைவராலும் ஆச்சிரியமாக பேசப்பட்ட ஒன்று .இவரின் இந்த விசிட் தன் வாழ்க்கையின் மறுபுறத்தை எடுத்து இயம்புகிறது .
போப் பிரான்சிஸ் குடும்பம் கூட ஒரு அகதிகள் தான் இத்தாலியில் இருந்து அர்ஜென்டெனாவுக்கு அகதிகளாக சென்று தஞ்சம்புகுந்தவர்கள் .
அதனால் தான் தன் திருத்தந்தை பயணத்தின் போது உலக தலைவர்களிடம் அகதிகளை மனிதநேயத்துடன் நடத்தவேண்டும் என்ற வேண்டுகோளை வைக்காமல் இருந்ததில்லை .
போப்பாக பயணித்த இந்த பன்னிரெண்டு ஆண்டுகள் ' ஏழைகளின் போப் , மக்களின் போப் ' என்று அழைக்கப்பட்டார் .
தனக்கு உடைகள் காலணி வாங்க மக்கள் வாங்கும் மார்க்கெட் பகுதிக்கு சென்று தான் வாங்குவாராம் !.
தன் போப் வாழ்வில் பல சீர்திருத்தங்களை செய்து விமர்சனங்களை சந்தித்துள்ளார் .
ஒரு பால் திருமணம் செய்தவர்களுக்கு எதிராக திருச்சபையில் சட்டம் கொண்டுவர முயன்றபோது அதற்கு எதிராக குரல் கொடுத்து " அவர்களை தீர்ப்பிட நாம் யார் ? அவர்களும் கடவுளின் பிள்ளைகள் தான் " என்று கூறி " whom am I to Judge them ?! மன்னிக்கப்படாத பாவங்களின் பட்டியலிலிருந்து ஒரு பாலின திருமணத்தை நீக்கியுள்ளார் என்பது உலக முழுவதும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது .
அதே போல குழந்தைகள் சம்பத்தப்பட்ட பாலின வழக்குகளில் சந்தேகத்திற்கு உட்பட்ட அனைத்து துறவற பாதிரியார்களும் அந்தந்த நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு வழக்குகளை சந்திக்கவும் , தண்டனைகளை ஏற்கவும் உத்தரவிட அதிர்ந்து போனார்கள் குருமார்கள் .
உலகின் 80 சதவிகித சொத்துக்கள் 20 சதவிகித பேரிடம் குவிந்துள்ளன .
80 சதவிகித மக்கள் வறுமையில் வாழ்வது எந்த விதத்தில் நியாயம் என்று வாதாடின திருத்தந்தை .
நிறைந்து தழும்பி நிற்கும் கோப்பையிலிருந்து சிந்தும் பானம் ஏழைகளுக்கு கிடைக்கும் என்ற அமெரிக்காவின் ட்ரிக்கிள் டவுன் கோட்பாட்டை கடுமையாக விமரிசித்து கூறியுள்ளார் , "உங்களது பாக்கெட்டை பெரிதாக்கிக் கொண்டே போவது சரியா ?" என்று கேட்டு முதலாளித்துவ கொள்கைகளை எதிரித்து பேசியவர் போப் பிரான்சிஸ் .
இரண்டாம் உலக போரின் போது முசோலினியின் பாசிச ஆதிக்க காலத்தில் பிறந்ததாலோ என்னவோ கல்லூரி படிப்பில் வேதியியலில் பட்டம்பெற்று பரிணாம சித்தாந்தத்தை ஏற்று கொண்ட அதிசிய போப்பும் இவரே என்கின்றனர் .
காசாவின் மக்கள் நம் சகோதர்கள் அவர்களை துன்புறுத்த கூடாது என்ற வேண்டுகோளை கூறி கொண்டே இருந்துள்ளார் .
காசாவில் உள்ள தேவாலயத்திற்கு தினமும் தொடர்ப்பு கொண்டு நிலைமையை கேட்டு தெரிந்து கொண்டுள்ளார் .
தான் இறப்பதற்கு முந்தின நாள் கூட தொலை பேசியில் பேசியுள்ளார் .
ஈஸ்டர் அன்று பீட்டர் சதுக்க பால்கனியில் தோன்றி இஸ்ரேல் காசா மேல் தாக்குவதை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார் .
வழக்கமாக பெரிய வியாழன் அன்று சிறைக்கு சென்று கைதிகளின் கால்களை கழுவுவது வழக்கம் .
இந்த வருடம் நுறையீரல் பாதிப்பால் 38 நாள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி ஓய்வில் இருந்தவர் .
கடந்த பெரிய வியாழன் அன்று வீல் சேரில் ரோமில் உள்ள ரெபிப்பியா பெண்கள் சிறைக்கு சென்று 12 பெண் கைதிகளின் கால்களை கழுவி முத்தமிட்டுள்ளார் .
கால் கழுவும் சடங்கில் ஆண்கள் மட்டுமே இருக்கவேண்டுமென்ற ஆணாதிக்க நிலைப்பாட்டிலிருந்து மாறி பெண்களும் தெய்வ மக்கள் என்று அவர்களின் கால்களை கழுவி ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் திருத்தந்தை .
ஏராளமான சீர்திருத்தங்கள் புரட்சிகளை செய்து வந்த போப் பிரான்சிஸ் தன் இறுதி அடக்கம் எப்படி அமையவேண்டும் என்பதை கூட எழுதி வைத்துள்ளார் .
போப்களின் சவப்பெட்டி மூன்றாக தயாரிக்கபடும்
முதல் சவப்பெட்டி சைப்பிரஸ் மரத்தால் செய்யப்படும் அது போப்பின் தாழ்ச்சி மற்றும் ஒழுக்கத்தை குறிக்கும் .
இரண்டாவது சவப்பெட்டி ஈயத்தால் செய்யப்படும் அது உடலை பாதுகாப்பது .
மூன்றாம் சவப்பெட்டி கருவேல மரத்தால் செய்யப்படும் அது போப்பின் கண்ணியத்தையும் வலிமையையும் பிரதிபலிப்பதாக அமையும் .
அதே சமயம் போப் பிரான்சிஸ் தனக்கு மூன்று சவப்பெட்டிகள் தேவையற்றது சாதாரண மரத்தால் செய்ய பட்ட சவப்பெட்டியில் கிடத்த வேண்டுமென்று எழுதிவைத்துள்ளார் .
அதே போலத் தான் அவரின் நல்லடக்கம் நடைபெறுகிறது .
அவரின் உடல் வழக்கமாக வத்திக்கான் செயின்ட் பீட்டர் பேராலயத்தின் கீழே அமைந்துள்ள நிலத்தடி தேவாலயத்தில் குரோட்டோவில் அடக்கம் செய்வது வழக்கம் .
போப் பிரான்சிஸ் அந்த வழக்கத்தையும் மாற்றிவிட்டார் .
தன் உடலை தினமும் தான் அமர்ந்து ஜெபிக்கும் செயின்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்ய விரும்பியுள்ளார் .
அவரின் விருப்பப்படி அதே பேராலயத்தில் போப் பிரான்சிசின் உடல் சனிக்கிழமை சாதாரண கிறிஸ்தவர்களின் உடல் அடக்கம் போல நடைபெறும் .
நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் 2016 ஆம் ஆண்டு வத்திக்கானில் போப் பிரான்சிசை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளார் ,
" ரோம் நகரில் நடந்த ஐ நா மலைகள் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள சென்றேன் .
அப்பொழுது ஏன் போப் அவர்களை சந்திக்க கூடாது என்று எண்ணம் வர உடனே அதற்கான முன் அனுமதிக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு புதன் கிழமை பொது மக்களை போப் சந்திப்பது வழக்கம் .
எனக்கும் என் மனைவிக்கும் அனுமதி கிடைக்க பீட்டர் சதுக்கத்தில் அமைந்துள்ள மிக பெரிய ஹாலில் அமர்ந்தோம் .
சரியான நேரத்திற்கு போப் பிரான்சிஸ் வந்து ஒவ்வொருவரின் அருகில் வந்து பேசி ஆசீ வழங்கினார் .
நாங்கள் நீலகிரி தோடர் ஷால் மற்றும் நான் எழுதிய நீலகிரி புத்தகத்தை கொடுக்க வைத்திருந்தேன் .
எங்களுக்கு முன் ஒரு சிறுவன் நின்று கொண்டு " போப்புக்கு இங்கிலீஷில் பேச முடியாது நான் லத்தீனில் பேசி புரிய வைக்கிறேன் " என்றான் நான் என்னை பற்றி அவனிடம் கூற ....என் அருகே போப் பிரான்சிஸ் வந்தவுடன் நான் பேசுவதை லத்தீனில் போப்பிடம் அவன் கூற போப் புரிந்து கொண்டு நம் அன்பளிப்பை பெற்றுக்கொண்டு நீலகிரியை பற்றி கேட்டு பூரித்து எங்களுக்கு ஆசீ கூறியதை மறக்க முடியாது .
அவர் மறைந்தாலும் ஒரு புனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .
திருச்சபையில் பல மாற்றங்களை கொண்டுவந்த ஒரு புரட்சி போப் இவர் தான் .
சனிக்கிழமை போப் பிரான்சிசின் நல்லடக்கம் முடிந்தவுடன் புதிய போப் தேர்வு துவங்கும் வத்திக்கானில் .
Leave a comment
Upload