தொடர்கள்
ஆன்மீகம்
போப் - மரியா சிவானந்தம்

20250325191242832.jpg

"மக்கள் போப்" என்று அன்பாக அழைக்கப்பட்ட போப் பிரான்சிஸ் மறைவு , உலகில் ,அமைதி, சகோதரத்துவம் , நீதியை விரும்பும் உள்ளங்களுக்கு ஒரு பேரிடியாக அமைந்தது .

இயேசுவின் பிரதம சீடரான பேதுருவின் வழிவந்தவர்கள் போப்பாண்டவர். அவர் பேதுருவை திருச்சபையின் தலைவராக்கி , "உன் பெயர் பேதுரு , இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடை செய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும் . மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" (மத்தேயு 16:13-19) என்று அதிகாரம் வழங்கினார். அவரே முதல் போப்பாண்டவர்.

பேதுருவின் வழிவந்தவர்கள் 2000 ஆண்டுகளாக கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலமைப் பதவியில் இருந்து, திருச்சபையின் தலைவராகவும், வழிகாட்டியாகவும் வழி நடத்தி வந்துள்ளனர்.

மறைந்த போப் பிரான்சிஸ் , இவ்வழியில் வந்த 266 வது தலைவர். வாடிகன் என்னும் உலகின் மிகச் சிறிய நாட்டின் அரசராக இருந்துக் கொண்டு திருச்சபையை நிர்வகித்து வந்துள்ளார்.

ஒரு நெடிய பாரம்பரியம் மிக்க ,கட்டுக்கோப்பான நிறுவனத்தை நடத்தும் கம்பீரமும் , அரசருக்குரிய ஆடம்பர வசதிகளும் இருந்த போதும் எளிமையான வாழ்க்கை முறையைக் கடைபிடித்தார்.

எளிமையான ஆடைகளை தேர்ந்தெடுத்தார். எளியவர்களை சந்திப்பதும் , அவர்களுக்கான நிதி உதவிகளை நிர்வகிப்பதையும் மிகுந்த அக்கறையுடனும் , கரிசனத்துடனும் செய்து வந்தார்.

ஆடம்பரங்களைத் தவிர்த்து , அதனால் ஏழைகளுக்கு உதவும் தொண்டினை அவர் இளம் வயது பாதிரியாராக இருந்த போதே செய்து வந்தவர் .

பல கட்டுப்பாடுகளை உடைத்தவர் போப் பிரான்சிஸ் .

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முனைந்தவர் .

இந்த பூமியைக் காக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் படவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தவர்."Laudato si " என்னும் சுற்று மடலில் , "இப்பூமி ஒரு மகத்தான புத்தகம். இப்புத்தகத்தின் வழியாக கடவுள் நம்மிடம் பேசுகிறார். கடவுளின் அளவற்ற அழகையும் , நன்மைத்தனத்தையும் நாம் தரிசிக்க வைக்கிறது இப்பூமி . என்று எழுதுகிறார். (Earth is a magnificent book in which god speaks to us and grants us a glimpse of his infinite beauty and goodness)