ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் மாவட்டத்தில் பஹல் காம் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியான இந்த பகுதி அருமையான சுற்றுலா தலம். இந்த பகுதியை மினி சுவிட்சர்லாந்து என்று அழைப்பார்கள். பார்க்க அவ்வளவு ரம்யமாக இருக்கும். இந்த பகுதிக்கு எப்போதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஏப்ரல் 21-ஆம் தேதியும் அதேபோல் நிறைய சுற்றுலா பயணிகள் வந்தார்கள். இங்கு வாகன வசதி எல்லாம் கிடையாது. இந்தப் பகுதியை நடந்து வந்த ரசிக்க வேண்டும் அல்லது குதிரையில் பயணிக்கலாம். அப்படி ரம்யமாக இந்தப் பகுதியை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் துப்பாக்கி குண்டுகளால் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். 26 பேர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்து போனார்கள். இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் சுட்டுக்கொன்றது இந்துக்களை மட்டும் தான். ரஷ்ய அதிபர் அமெரிக்க அதிபர் என்று உலகத் தலைவர்கள் எல்லாம் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் போது பாகிஸ்தான் மட்டும் அமைதி காத்தது.
இந்த விஷயம் கேள்விப்பட்ட உடனே உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் போனார். சவுதி அரேபியாவுக்கு சென்று இருந்த பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியாவுக்கு வந்து என்ன செய்யலாம் என்று ஆலோசனையில் இறங்கினார்.
என் கணவரிடம் நீங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர் தானே என்று கேட்டு உறுதி செய்து கொண்டு ஒரு தீவிரவாதி அவரின் தலையில் சுட்டதாக அவரது மனைவி அழுதப்படியே சொல்லும் ஒரு வீடியோ தற்சமயம் மனதை உருக்குகிறது. இதேபோல் தனது கணவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதியிடம் என்னையும் சுட்டுக் கொண்டு விடுங்கள் என்று கெஞ்ச நீங்கள் போய் மோடியிடம் சொல்லுங்கள் என்று அந்த தீவிரவாதி சொன்னதாக கணவரை இழந்த அந்த பெண் சொல்லும் வீடியோவும் நமது மனதை ரொம்பவும் பாதிக்க செய்கிறது. அதைவிட சோகம் கணவர் மனைவி இருவரும் ஒரு தனியார் சேனலுக்கு நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். இந்த இடம் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லி முடித்து சில நிமிடங்களில் கணவரை இழந்து அந்தப் பெண் கதறுகிறார். இப்படி அந்த இடமே சோகக் கடலில் மூழ்கி விட்டது.
2000-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி இதே அனந்த் நாக் மாவட்டத்தில் சட்டி சிங் போரா என்ற கிராமத்தில் சீக்கிய சமூகத்தை சேர்ந்த 36 பேர் தீவிரவாதிகளால் குறி வைத்து தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதேபோல் 2000-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நுன்வான் அடிவார முகாமில் அமர்நாத் யாத்திரிகர்களை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். 2001-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற வளாகத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல 2002-ஆம் ஆண்டு பதினோரு அமர்நாத் யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். நவம்பர் 23, 2002 இல் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்பது பாதுகாப்பு படை வீரர்கள், மூன்று பெண்கள், மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 19 பேர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்கள். புல்வாமாவின் நந்தி மார்க் கிராமத்தில் 11 பெண்கள் மட்டும் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட 24 காஷ்மீர் பண்டிதர்களை பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். ஜூன் 13, 2005ல் புல்மாவாவில் நெரிசலான சந்தை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் இரண்டு பள்ளிக் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், மூன்று சி ஆர் பி எப் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இது தவிர 100 பேர்கள் காயமடைந்தனர். செப்டம்பர் 18, 2016-ல் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாதிகள் நான்கு பேர் இந்திய ராணுவ படை பிரிவு தலைமையகத்தை தாக்கினார்கள். 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். 30 பேர்கள் காயமடைந்தனர். ஜூலை 10, 2017-ல் அமர்நாத் யாத்திரை பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள், கடைசியாக 2019-ல் பிப்ரவரி 15 அன்று புல்வாமாவில் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினரை ஏற்றிச் சென்ற வாகன தொடரணி மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு குறிப்பிட்டு சொல்லும் படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இப்போது மீண்டும் தீவிரவாதிகள் தங்கள் கை வரிசையை காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பங்கு இருக்கிறது என்கிறார்கள். பாகிஸ்தானில் இருந்தபடி அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் துணைத் தலைவர் சைபுல்லா ஆகியோர் நேரடியாக இந்த தாக்குதலை வழி நடத்தியதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதே சமயம் உள்ளூரில் உள்ள சில பயங்கரவாதிகளின் ஆதரவு இவர்களுக்கு இருப்பதால் மட்டுமே இந்த தாக்குதல் சாத்தியமானது என்கிறார்கள். மத்திய அரசு புலனாய்வு அதிகாரிகள். அதேசமயம் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா துணை அமைப்பான ரெசிடென்ஸ் பிரண்ட் நாங்கள் தான் செய்தோம் என்று பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது.
அப்பாவிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலை கண்டித்து ஒட்டு மொத்த இந்தியாவும் பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்கிறது. கிட்டத்தட்ட நிறைய மசூதிகளில் தொழுகை முடிந்த பிறகு முஸ்லிம் மத குருமார்கள் இந்த தாக்குதலை கண்டித்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். கேரளாவில் பாகிஸ்தான் கொடிகள் எரித்து பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் மோடியின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கிறது.
Leave a comment
Upload