அந்தத் தோழிக்குத் தவிப்பாக இருக்கிறது .
தலைவியின் நிலையைப் பார்க்கும் போது அவளுள் பெருங்கவலை எழுகிறது.
அழகோவியமாக இருந்த தலைவி புகைப் படிந்த சித்திரமாக மாறி விட்டதைப் பார்த்து அவள் தடுமாறினாள்
தலைவனைப் பிரிந்ததால் தலைவியின் உடல் நலம் குன்றி ,பசலைப் படர்ந்து இருப்பதைக் காண காண தோழியின் உள்ளம் உடைந்துப் போகிறது.
பொருள் தேடச் சென்ற தலைவன் ,விரைவில் வந்து தலைவியை மணமுடித்துக் கொள்வான் என்ற அவளது நம்பிக்கை தளர்ந்து வருகிறது.
அவனது மெத்தனமான போக்கு தோழியை ஆழ்ந்த துன்பத்தில் ஆழ்த்தியது
எனவே, அவள் ."தலைவி , தலைவன் வரும் போது , அவனிடம் ஊடல் கொண்டு உன் உன் கோபத்தைக் காட்டு" என்று தூண்டுகிறாள் .
தலைவியோ குறையாத காதலுடனும் , குலையாத நம்பிக்கையுடனும் அவனுக்காக காத்திருப்பவள் .
அவள் ," நான் இறந்து போனாலும் போவேனே தவிர , என் தலைவனிடம் கோபம் கொள்ள மாட்டேன் " என்று கூறி விடுகிறாள். .
தலைவி கூறுகிறாள் :
" தோழி , என் கண்களும் , தோள்களும் ,மென்மையான மணம் வீசும் கூந்தலும் பழைய அழகை இழந்து விட்டது . என்னுடலில் பசலை பாய்ந்தது.
இதனால் நான் இறந்தாலும் சரி ,
சிறிய கால்களை உடைய நண்டுகளை அடித்துச் செல்லும் , புலால் மணம் வீசும் அலைகள் அடிக்கும் கடல் .
அக்கடலில் பெரிய மீனைப் பிடிக்கும் பரதவர் , இரவில் தம் மரக்கலங்களில் ஏற்றிய விளக்கு . அவ்விளக்கின் ஒளியோ , இளங்காலை கதிரவன் பரப்பும் கதிரொளிக்கு ஒப்பாகும். .
இவ்வாறு கடல் தீபங்கள் ஒளி வீசும் ,கடற்கரையும், அக்கடற்கரையில் அமைந்த சோலைகளும் கொண்ட நெய்தல் மண்ணின் தலைவன் , என் மனம் குளிர அணைத்துப் புணர்ந்தவன்.
அத்தகைய அன்பு கொண்ட தலைவனிடம் ஊடல் கொள்ளுவதும் , சினம் கொள்ளுவதும் என்னால் செய்ய இயலாது " என்கிறாள்.
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய,
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்
புலவேன் வாழி- தோழி!- சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்-
தானே யானே புணர்ந்தமாறே.
நற்றிணை - 219
தாயங் கண்ணனார் என்னும் புலவர் எழுதியுள்ள , நெய்தல் நிலப்பாடல். பாடல் இது .
எக்காலத்திலும் , எவரிடத்திலும் விட்டுக் கொடுக்காத உயர்ந்த காதல் உள்ளம் கொண்ட சங்கக்கால பெண்ணின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி உள்ள இப்பாடலை படிக்கும் போதே இனிக்கிறது.
மேலும் ஓர் அழகிய பாடலுடன் அடுத்த வாரம் சந்திப்போம்
தொடரும்
Leave a comment
Upload