25.4.2025 (சங்கர வருஷம் 2533) அன்று காஞ்சி மடத்திலிருந்து வந்த மடல் அகில உலக சனாதன மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
வரும் 30.04.2025 அன்று அக்ஷய த்ரிதியை கூடிய நன்னாளில், 2506 வருட பாரம்பர்யமிக்க ஸ்ரீ ஆதி சங்கர பரம்பராகத மூலாம்னாய சர்வஜ்ஞ பீடம் என்று ஸ்ரீஆதி சங்கர பகவத் பாதாள் நிறுவிய ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட த்தின் தற்போதைய பீடதிபதி, பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச ஷர்ம டிராவிட் எனும் 20 வயது நிரம்பிய ரிக் வேத விற்பன்னருக்கு சன்யாஸ தீக்ஷை கொடுத்து ஆசீர்வதிப்பார். இதன்மூலம் மடத்திற்கு அடுத்த, 71ஆவது பீடாதிபதியாக அவரை சிஷ்ய ஸ்வீகாரம் செய்கிறார்.
இந்த நாளின் சிறப்புகள் பற்பல உள்ளன.
- முதலாமவது அக்ஷய த்ரிதியை
- இரண்டாவது புதனோடு கூடிய ரோஹிணி நட்சத்திரம் நிறைந்த நன்னாள்.
- இந்த நாளை ஒட்டி வரும் மே இரண்டாம் நாள் அன்று வரும் மூலவர் ஸ்ரீஆதி சங்கரரின் 2534 ஆவது ஜயந்தி என்ற பிறந்த நாளும் கூட.
28.2.2018 அன்று ஸ்ரீமடத்தின் 69ஆவது பீடாதிபதி பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் முக்திக்குப் பிறகு இளயவருக்கு(இன்றைய பெரியவருக்கு)ப் பிறகு யார் பீடாதிபதி என்று ஆஸ்தீக அன்பர்களின் மனதில் ஒரு இயற்கையான வேண்டுகோள் எழுந்த வண்ணம் இருந்தது.
நூற்றாண்டு காலம் நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டிய, மஹாபெரியவா என்று அன்றும் இன்றும் என்றும் நம்மனைவரின் உள்ளங்களில் நடமாடும், ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தனக்கு அடுத்த இளையவர் ஸ்ரீ ஜெயேந்திரர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கையைலேயே அவருக்கும் அடுத்த இளயவரான தற்போதைய 70ஆவது பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திரரை 1983ல் ஸ்வீகரித்துக்கொண்டார்.
ஆக, 1983லிருந்து 1994 வரை காஞ்சி மடத்தில் மூன்று ஆச்சார்யர்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.
சதாசிவ சமாரம்பாம்
சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் ஆசார்யா பர்யந்தாம்
வந்தே குரு பரம்பராம்
என்று குரு முகமாக இறையனார் சிவனே குரு ஸ்தானத்தில் இருந்து அவர் மூலமாக ஆதி சங்கரர் மற்றும் அவரது வழி வந்த பீடாதிபதிகள் நிறைந்த பரம்பரை என்று சங்கர மடத்தின் போற்றுரை எங்கும் என்றும் இன்றும் ஒலிப்பதுண்டு.
இந்த பாரம்பர்யமிக்க மடத்தின் பீடாதிபதி ரிக் வேதத்தில் முழு பாண்டித்யம் பெற்றவராக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவரோ ரிக் வேதத்தில் சலக்ஷண கணபாடிகள்.
ஆந்திராவின் அன்னாவரம் என்னுமிடத்தில் பிறந்தவர். தெலிங்கானாவின் ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் பணி புரிந்திருக்கிறார். 2006ல் அவர் வேத பாடசாலையில் சேர்ந்ததிலிருந்தே பெரியவரின் ஆசிகளுக்கு பாத்திரமானார். இவருக்கு யஜுர் வேதம், சாம வேதம், ஷடங்கங்கள், தசோபனிஷத்துக்களிலும் பாண்டித்யம் உண்டு. தற்போது தொடர்ந்து சாஸ்த்ரீய நியமங்களிலும் படித்துக்கொண்டிருக்கின்றார். அவரது குடும்பம் வேத விற்பன்னர்களைக் கொண்டது.
[பூர்வாசிரமத்தில் தாய் தந்தையருடன் இளையவர்]
இந்த மடத்தை மொழி, மாநிலம் தாண்டி ரிக் வேதத்தில் பண்டிதம் என்னும் தகுதியின் அடிப்படையில் ஸ்ரீ கணேச சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சொல்லப்போனால் இந்த மடத்தின் இரண்டாவது ஆசார்யராக இருந்தவர் ஸ்ரீசுரேஷ்வராச்சார்யர் காஷ்மீரத்தைச் சேர்ந்தவர். இவரது காலம் கி.மு. 477 – கி.மு 407 வரை. சித்தி அடைந்தது காஞ்சிபுரத்தில் தான்.
குறித்த நாளுக்கு முன் இரு தினங்களாகவே பூர்வாங்க சடங்குகள் மடத்தில் ஆரம்பித்துவிட்டன. முதல் நாள் சடங்கில்,” பசி, தாகம் முதலிய சிரமங்களில் இருந்து தன்னை விடுவியுங்கள் பகவானே என்று பிரார்த்தனை மிக முக்கியமாக இருந்தது. ஆசிரம ஸ்வீகாரம் மேற்கொள்ளுவதற்கு வேண்டிய சடங்குகள் ஒரு நாளும், சந்நியாஸ ஸ்வீகாரம் மறுநாளும் என்பவை.
ஸ்ரீ கணேச சர்மாவிற்கு சரீர சுத்தி கர்ம சுத்தி, பந்த சுத்தி, ஆஸ்ரம சுத்தி எல்லாம் ஏற்பட மந்திர பூர்வமாக அந்த சடங்குகளில் விற்பன்னர்களைக் கொண்டு ஸ்னானம் செய்வித்தனர்.
பெரியவர் அவரையும் அவரது குடும்பத்தினரையும் மஹாபெரிவா மற்றும் ஜெயேந்திர பெரியவாவின் அதிஷ்டானங்களுக்கு அழைத்துச் சென்றார்.
காஞ்சிபுரமே களை கட்டிக் கொண்டது. நகரேஷு காஞ்சி என்பதற்கேற்ப வேதங்களின் உறைவிடமான காஞ்சி அந்த நாளுக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டது. காஞ்சியை நோக்கி அனைவரும் நேரிலோ, தொலைக்காட்சி வாயிலாகவோ இணய தளங்களின் வாயிலாகவோ இணைந்திருந்தனர்.
காமாக்ஷி அம்மன் ஆலயம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.
ஆலயத்தின் பஞ்ச கங்கா தீர்த்த குளம் இந்த மாதிரியான சந்நியாச தீக்ஷைகளையும் சிஷ்ய ஸ்வீகாரங்களும் கண்டிருக்கும். அன்றும் குளத்தச் சுற்றி தேவையான அளவுக்கு சடங்குகளுக்கென்றும் மீதமுள்ள பகுதிகள் நேரில் காண வந்திருப்பவர்களுக்கென வசதியுடன் அமைக்கப்பட்டிருந்தன.
ஸ்ரீசங்கர விஜயேந்திரர் ஆணைப்படி அதிகாலை 5.30 மணி முதல் அம்மன் சந்நிதியில் பூஜையுடன் ஆரம்பித்தது. 6.30 மணி முதல் குளத்தில் சந்நியாச தீக்ஷை சடங்குகள் ஆரம்பித்தன.
குளக்கரையின் ஒரு பகுதியில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத புனித கங்கை நீரில் இளயவருக்கான தண்டத்திற்கு அபிஷேகம் செய்தார் பெரியவர்.
அருகிலேயே ஸ்ரீகணேச சர்மா சந்நியாச ஆசிரமத்திற்கு தயாராகிவிட்டார்.
மெலிந்த குடுமி மட்டுமிருக்க தலையை மழித்து விட்டிருந்தார். இதற்கு வபனம் என்று சொல்வார்கள்.
முறைப்படி ஓதப்பட்ட மந்திரங்கள் தொடர அவரும் கூடவே சொல்லிக்கொண்டு தனது பெற்றோர் குடும்பத்தார் முன்னிலையில் குளத்தில் இறங்கினார்.
குடும்பமே அவருக்கு மலர் தூவி வாழ்த்தியது. இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி உலக சுகங்கள் ஒவ்வொன்றாக கூறி அதை இழக்கத் தயார் என்று சூளுறைகின்றார்.
அருகில் பெரியவர் அதை கவனித்துக்கொண்டிருந்தார்.
நீரில் இடுப்பளவு நின்றுகொண்டு முதலில் அங்கவஸ்திரத்தை விட்டார். காதில் தரித்திருந்த வளையம் இரண்டையும் அவிழ்த்து குடும்பத்தாரிடம் தந்தார்.
வலது கை விரல் மோதிரத்தை விட்டார். தலையில் மழிக்காமல் விடப்பட்ட மெலிந்த குடுமியை தனது இரு கரங்களால் பிய்த்து எறிந்தார்.
தோளை அலங்கரரித்த பூணூலை அறுத்து குளத்தில் விட்டார். நீருக்குள்ளாகவே. தனது குருவை நோக்கி வடக்கு திசை முகமாக ஏழு அடிகள் நகர்ந்தார். அவரது இடுப்பில் இருந்த வேஷ்டியும் விட்டார்.
எல்லாவற்றையும் விட்டு விட்டு தங்களிடம் சரண் புகுந்து விட்டேன் என்ற பாவத்துடன் நீருக்குள் நின்றிருக்க தயாராக வைத்திருந்த காவி வஸ்த்திரத்தை பெரியவர் ஸ்ரீ கணேச சர்மாவிடம் கொடுக்க வினயத்துடன் பெற்றுக்கொண்டார்.
திரைச்சீலை மூடிய அமைப்பினுள் புதியவர் காஷாயத்தை அணிந்து கொண்டு தனது குருவருகே நின்று கொண்டார்.
பெரியவரும் தனது சீடருக்கென்று தயாராக வைத்திருந்த தண்டத்தை அவரின் கரத்தில் கொடுத்தார். கமண்டலமும் பீடமும் கூடவே தந்தார்.
இரு ஆசார்யார்களும் அருகருகே அமர்ந்து கொள்ள பெரியவர் இளையவரிம் சிரசின் மீது சங்கு சாளக்கிராமத்தை வைத்து புருஷ சூக்தம் சொல்லி அபிஷேகம் செய்தார். கற்பூர ஆர்த்தி எடுத்தார்.
அவர் இனி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற நாமத்தை தரிப்பார் என்று மும்முறை சொன்னார். பஞ்ச பூதங்களின் சாட்சியாக சூரிய பகவானின் சாட்சியாக இளையவரின் நெஞ்சின் மீது தனது வலது கரத்தை வைத்து தன்னையே அவருக்குத் தந்தேன் என்று கூறினார்.
தனது சிஷ்யராக ஏற்றுக்கொண்டார். இந்த பீடம் ஞானத்தின் பரம்பரை, தியாகத்தின் பரம்பரை, சேவையின் பரம்பரை என்று கூறினார். முக்கிய வேத வாக்கியங்களை தனிமையில் உபதேசம் செய்தார்.
பெரியவர் சமஸ்கிருதம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் அனுக்ரஹ பாஷணம்(உரை) தந்தார்.
பின்னர் இரு ஆசார்யர்களும் அங்கிருந்தபடியே வந்திருந்து வைபவத்தினைக்கண்டு கொண்டிருக்கும் பக்தர்களுக்கு கரம் உயர்த்தி ஆசீர்வாதம் செய்தனர்.
அவர்களுக்கு திருப்பதியிலிருந்து பெருமாளின் பிரசாதமும் வந்தது. தலைப்பாய் கட்டு கட்டிக்கொண்டு இருவரும் அனைவருக்கும் காட்சி தந்தது நினைவில் என்றும் நிற்கும்.
படங்கள்.... இனி.....
[தலை மழித்தவுடன்]
[பெரியவருடன்]
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
Leave a comment
Upload