ஐபிஎல் கல்யாண வைபோகமே
சூர்யவன்ஷியின் வைபவமே
இப்படித்தான் பாடத் தோன்றுகிறது.
அன்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் 209 ரன்கள் இலக்கிற்கு அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி தனது ஹோம் பிட்ச் எனப்படும் ஜெய்பூரில் 15.5 ஓவரிலேயே வெறும் இரண்டு விக்கெட்டுள் இழப்பிற்கு 212 ரன்களை அடித்து வெற்றி பெற்றனர்.
இதில் ராஜஸ்தானுக்கு விளையாடிய 14 வயதே ( பிறந்த தேதி 27.03.2011) ஆன வைபவ் சூர்யவண்ஷி தான் மேன் ஆஃப் த மேட்ச்.
அவன்(ர்) செய்தது தனது மூன்றாவது ஐபிஎல் மேட்சிலேயே சென்சுரி அடித்தது.
கேட்டால், தொடருக்கு முன் நாங்கள் எடுத்துக்கொண்ட பயிற்சி தான். கூடவே ஆடிய ஜைஸ்வால் அண்ணனின் ஊக்கமளிப்பு. பௌலெர் யாரென்பது பார்ப்பதில்லை, பந்தின் மீது தான் எனது பார்வையே.
பந்துக்குண்டான ட்ரீட்மெண்ட் கொடுப்பதே எனது இலக்காக வைத்துள்ளேன் என்கிறார் வைபவ்.
அவ(ன்)ர் சொன்னது சரி தான். அந்த பத்தாவது ஓவரைப் போட ஆஃப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த வலது கை வேக பந்து வீச்சாளர் கரிம் ஜனத் வந்து போட்ட முதல் பந்தை இடது கை பேட்ஸ்மேன் ஆன, வைபவ் தனது இடப்பக்கம் காலை நோக்கி வந்த வேகமான பந்தை கால் பக்கமாக தனது மணிக்கட்டுகளின் சக்தி கொண்டு திருப்பி கல்லியின் தலைமேல் புறமாக சிக்சர் அடித்தது அவரது ஆட்ட வல்லமையைக் காட்டியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அடி பட்ட பந்து மைதானத்திற்கு வெளியே. அந்த ஓவரில் மட்டும் மூன்று சிக்சர்களும், மூன்று பௌண்ட்ரிகளும் என மொத்தம் 30 ரன்களை குவித்தார்.
இந்த ஓவருக்கு முன் 64ல் இருந்தவர் அடுத்த ஆறு பந்துகளில் தனது ஸ்கோரை 94க்கு உயர்த்திக் கொண்டார். அந்த ஒவரில் சூர்யவண்ஷியின் வைபவம் பளிச்சிட்டது.
வீசப்படும் அதி வேகப் பந்துகள் வைபவின் மட்டையில் பட்டு தரை வழியாகவும் வானத்தினூடேயும் மைதானத்தைத் தாண்டின. பார்வையாளர்கள் சில ஷாட்களைக் கண்டு இருதயத்துடிப்பு நின்றது கூட தெரியாமல் இருந்திருப்பார்கள்.
வீசப்படும் பந்துகளின் மீது தான் தனது கவனம் என்றவர் சில சமயங்களில் நமது அதிரடி ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மாதிரி pre determined shotம் ஆடியிருக்கிறார். என்ன ஒன்று என்றால், ஸ்ரீக்காந்த் போலே அவசரத்தை வெளிப்படையாக காண்பிக்காது அமைதியான எரிமலை வெடிப்பது போல ஆடினார் என்று தான் சொல்ல வேண்டும்.
அடுத்த ஓவர் வீச கருமி மற்றுமொரு ஆஃப்கானிஸ்தானின் பிரபல சுழல் பந்து வீச்சாளர் ரஷித் கானின் முதல் பந்தை ஒரு ரன் அடித்து விட்டு எதிரேயுள்ள விக்கெட்டுகளுக்குத் துணையாக யெஷஸ்வி ஜெய்ஸ்வால் நின்று கொண்டார். அவருக்கும் இந்த இளவலின் அதிரடி ஆட்டம் அருகே இருந்து ரசிக்க ஆசை போலும்.
ரஷீதின் அடுத்த பந்தை சிக்சர் தான் அதற்கு மருந்து என்று டீப் மிட் விக்கெட் வழியாக இழுத்தது மைதானத்தை வான் வழியாக சென்றடைந்தது. காலில் அடிபட்டு வீல் சேரில் அமர்ந்திருந்த ராஜஸ்தான் அணியின் முதன்மை கோச் ராஹுல் டிராவிட் தனது சேரிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்து மற்றவர்களோடு கை தட்ட சேர்ந்து கொண்டார்.
சதம் அடித்த வைபவ் தனது அணியினர் அமர்ந்திருக்கும் டக் அவுட் திசையை நோக்கியவாறே தலைக் கவசத்தை வலது கையில் பிடித்துக்கொண்டு இடது கையில் பேட்டை தனது முகத்திற்கும் தலைக்கும் அருகே தொட்டு ராயல் சல்யூட் அடித்த அந்த ஸ்டைலை... மொத்த மைதானமும் இரசித்தது....!
வைபவம் கண்ட மகிழ்ச்சி நீண்ட நாள் நிற்கும். வைபவமும் தொடரும் என்பது நிச்சயம்.
ஐபிஎல்லின் சரித்திரத்திலேயே இரண்டாவது வேகமான சதம். 35 பந்துகளில் 100 ரன்களைக் குவித்தார். அதில் 11 சிக்சர்களும் 7 பௌண்ட்ரிகளும் அடங்கும். வெஸ்ட் இண்டீஸின் அதிரடி ஆட்டக்காரர் க்ரிஸ் கெயில் 30 பந்துகளிலேயே சதம் அடித்துள்ளார். ஐபிஎல்லில் சதம் அடித்த முதல் இளம் வயதுக்காரர் மற்றும் முதல் இந்தியர் என்பது இவருக்கு மற்ற சிறப்புகள்.
வைபவின் வைபவம் 101 ரன்கள் எடுத்து. காட்ச் கொடுத்து அவுட்டாகி பெவிலியனுக்கு செல்கையில் மைதானமே எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்.
இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு வரம் கிடைச்சாச்சு என்று அடித்து சொல்லலாம். டெக்னிக்கில் ஸ்ட்ராங்க், வேறென்ன வேண்டும்.
வைபவ் இந்த வெற்றியை மட்டும் மனதில் கொள்ளாமல், திடீர் புகழையும் தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல், ஒரு ஞானியின் மனநிலையில் தொடர்ந்தால், கிரிக்கெட் வரலாற்றில் தமது பெயரை அசைக்க முடியாமல் எழுதி விடலாம்.
Leave a comment
Upload