ஆண்டு விடுமுறையின் ஆனந்தம்,
வேண்டி வந்துவிடும் பேரனிடம்...!
தாத்தா பாட்டியின் பாசங்கள்,
பேரனைக் காண ஏங்கிவிடும் ...!
ஓடும் இரயிலின் சன்னல் ஓரத்தில்,
தந்தையும் தாயும் தன் புறத்தில்...!
தாத்தாவின் ஊர் வரும் தருணத்தை
தேடும் விழிகள் அந்த நேரத்தில்...!
எத்தனை விடுமுறைப் பயணம்...
சிறு பிள்ளையாய் பெற்றோருடன்...!
அத்தனை நினைவுகள் வலம்வரும்.!
சிறுவனாய் இனி வளர்ந்துவிட்டான்
தனியாய் செல்ல துணிந்தவிட்டான்!
தாயும் தந்தையும் ஒப்புதலில்,
தனியாய் செல்லும் பிள்ளைதான்,
நலமாய் பயணம் அமைந்திட,
நல்லறிவு தந்தார் தந்தைதான்...!
அச்சமோ ஆபத்தோ எதிர் வந்தால்,
தந்தையின் மந்திரம் காதருகே,
"இது உனக்காக என்று" ஒர் காகிதம்,
சட்டென நுழைத்தார் சட்டைபையில்!
தனியாய் செல்வது முதல்முறை,
தன்னிலை மறந்தான் பிள்ளை...!
சன்னலில் இயற்கைகாட்சி நிலை...!
பின்னோக்கி ஓடிடும் மரம் மலை...!
சந்தோஷம் வந்து நெஞ்சில் நிறை...!
நேரம் செல்ல மாறியது சூழ்நிலை...!
ஏறும் இறங்கும் அந்நியர் வருகை...
மாறும் மனிதர் முகமும் தோற்றமும்,
தனிமை உணர்வு தந்தது ஒருபுறம்
தவிர்க்க முடியாத அச்சம் மறுபுறம்..!!
தடதடவென இரயிலின் சத்தம்...
படபடவென நெஞ்சின் பதட்டம்...!
சட்டென்று தந்தை நினைவு வந்தது..
சட்டைப்பையில் காகிதம் வைத்தது !
பட்டென்று எடுத்து பிரிக்கின்றான்...!
முத்தென்று எழுத்து படிக்கின்றான்..!
"பயப்படாதே மகனே,நான் அடுத்த பெட்டியில் தான் இருக்கிறேன்”...!
விருட்டென்று நிமிர அமர்கின்றான் !
நம்பிக்கை அலையாய் எழுகிறது...!
புன்னகை புதுக்கதிராய் பூக்கிறது...!
பயத்தில் குனிந்ததலை நிமிர்கிறது!
நேர்கொண்டு பார்வை மிளிர்கிறது !
சிறுவன் கற்றதோ அரிய பாடம்...!
சூழல் தந்ததோ வாழ்வின் பாடம்...!
வாழ்வில் தருணங்கள் தடம் மாறும்
மகிழ்ச்சி சோகமாய் ஆகலாம்...!
சோகம் தனிமையை நாடலாம்...! தனிமை அச்சமாய் மாறலாம்...!
தந்தை மகனுக்கு வைத்தது போல்,
படைக்கும் நேரம் இறைவனும்...
இதயத்தில் ஓர் காகிதம் வைத்து,
"உன்னுள் நான் இருக்கிறேன்"
"உன்னோடு தான் இருக்கிறேன்"
நம்பிக்கை வரிகள் வடிக்கின்றான்...!
அச்சமும் பயமும் ஆளும் வேளை,
இதயக் காகித வரிகளை நீ நினை..!
நிச்சயமாய் நம்புங்கள் இறைவனை
நிராதரவாக விடமாட்டான் நம்மை...!!
பாலா கோவை
Leave a comment
Upload