கோடைக் காலம் என்றதுமே நினைவில் வருவது அக்னி நட்சத்திரம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். அக்னி நட்சத்திர வெயிலைக் கத்தரி வெயில் என்றும் அழைக்கின்றனர்.
அறிவியல் ரீதியாகப் பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலம் அக்னி நட்சத்திரம் என்றும், அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்துக்களின் பஞ்சாங்க அடிப்படையில் அக்னி நட்சத்திரத்துக்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் சூரியன் அதிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் வரையில் பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் 4 மே 2025 அன்று (ஞாயிற்றுக்கிழமை) 24.09 நாழிகைக்கு அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 3.40 மணிக்குத் தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் 28 மே 2025 அன்று (புதன்கிழமை) 42.02 நாழிகைக்கு அதாவது இந்திய நேரப்படி இரவு 10.49 மணிக்கு முடிவடைகிறது.
அக்னி நட்சத்திரத்தில் முதல் ஏழு தினங்கள் வெயிலின் தாக்கம் மெதுவாக அதிகரிக்கும் அடுத்த ஏழு தினங்கள் அதிக அளவில் வெப்பம் தெரியும். கடைசி ஏழு தினங்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும்.
புராணத்தில் அக்னி நட்சத்திரம்:
கார்த்திகை நட்சத்திரத்திற்கு அதிபதி அக்னி பகவான். அக்னி தேவன் தர்மத்தின் வடிவாக உள்ளதாகவும், சூரியனின் கதிர்களிலிருந்து பிறப்பெடுத்ததாகவும் என்றும் பதினெண் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில் அக்னி தேவனின் பசியைப் போக்கப் பகவான் கிருஷ்ணரும், அர்ஜுனனும் யமுனை ஆற்றங்கரையில் இருந்த காண்டவ வனத்தை எரித்துண்ண உதவிய அந்த 21 நாட்களே அக்னி நட்சத்திர காலம் எனக்கூறப்படுகிறது. தாரகாசுரனை வதம் செய்யும் பொருட்டு சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்த போது ஆறு ஒளி பிழம்புகள் உருவாகின. அவைகளை வாயு பகவான், சரவணப் பொய்கையில் விட அத்தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக மாற, கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தைகளை எடுத்து வளர்த்தனர். தீப்பொறிகளின் (குழந்தைகளின்) வெம்மை - உக்கிரம் கார்த்திகைப் பெண்களை அடைந்தது. பின்னர் கார்த்திகைப் பெண்கள் பார்வதிதேவியிடம் ஒப்படைக்க, ஆறு குழந்தைகளும் ஒன்றாகி ஆறுமுக முருகப் பெருமானாகக் காட்சி தந்ததாக பவிஷ்யோத்ரபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கோயில்களில் வழிபாடு:
இந்துக்கள் அக்னி நட்சத்திர நாட்களில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள முருகர் ஆலயங்களில் வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள்.
சிவன் அக்னியின் அம்சம் ஆனதால் சிவன் வழிபாடு செய்யப்படுகிறது. அம்மை போன்ற நோய்கள் வராமல் இருக்க அம்மன் கோயிலில் பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. சில கோயில்களில் விசிறி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்ச்சாதம் கொடுப்பது வழக்கம். வீடுகளில் அக்னி நட்சத்திர வெப்பம் தணிக்க வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீரைக் கொண்டு வீட்டைத் தூய்மை செய்தும், உஷ்ண நோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு,
‘அஸ்வத் த்வஜாய வித்மஹே! பாஸ ஹஸ்தாய தீமஹி! தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!’ எனச் சூரிய காயத்ரீ மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது சிறப்பு.
மருத்துவர்கள் ஆலோசனை:
அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தால் நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்கக் குளிர்ச்சி தரும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதிக கார உணவு வகைகளையும், மாமிச உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வெயிலில் வெளியில் செல்வதை முடிந்த அளவுக்குத் தவிர்க்க வேண்டும். அப்படியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் காலுக்கு நல்ல இதமான சூட்டைத்தாங்கும் காலணிகளும், தலைக்குத் தொப்பியும், பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. கண்களைச் சூரிய வெப்பம் தாக்காமல் இருக்க, குளிர் கண்ணாடிகளை அணியலாம். அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக என்பதால் அவ்வப்போது, தண்ணீரைக் குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். செயற்கை பானங்கள் அருந்தவதை விட, நீர்மோர், இளநீர் மற்றும் நுங்கு போன்ற உடலுக்குக் குளிர்ச்சி தரும் இயற்கை பானங்களைப் பருகலாம், கோடையில் நம் உடலில் நீர்ச்சத்து எப்போதும் நிறைவாக இருப்பதை, உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
மரம் நடுவோம்! இயற்கையைக் காப்போம்!
"இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போது உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே நமது வீடு மற்றும் சுற்றுப் புறங்களில் நம்மால் முடிந்த அளவு மரங்களை நட்டு இயற்கை வளத்தைக் காத்து அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தைக் குறைப்போம்!!”
Leave a comment
Upload