சில செய்திகள் பிரச்சனைக்கு உள்ளாகும்போது, அப்படிச் சொல்லவில்லை என்று அரசியல்வாதிகள் மறுப்பது வழக்கம். ஆனால் அப்போதைய கல்வி மந்திரி அவனது செய்தியைப் பற்றி அப்படிச் சொல்லவில்லை.
முதல் நாள் சிதம்பரத்தில் கல்வி மந்திரி அரங்கநாயகம் ‘‘அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இப்போதெல்லாம், தகுதியின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது’’ என்றார். செய்தி எழுதப்பட்டவிதம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களை ஆர்பாட்டம் செய்யத் தூண்டியது.
மறுநாள் தன் செய்திக்கு எதிர்வினை ஏதும் இருக்குமோ என்று தெரிந்து கொள்ள அவன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றான். ஒரு பிரச்சனையும் இல்லை என்று தெரிய வந்ததும், நெய்வேலிக்குத் திருப்பினான். அன்று இரவு சிதம்பரத்தில் இருந்த ஒரு தமிழ் பத்திரிகை நிருபரை தொடர்பு கொண்டு தன் செய்திக்கு ஏதாவது பின்விளைவுகள் உண்டா? என்று கேட்டான். அவர் சொன்ன பதில் “உண்டே? உங்கள் பெயர் ஊர் ஊராக ரயிலில் போய்கொண்டு இருக்கிறது. மாணவர்கள் முன் இரவு நேரத்தில் சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, எல்லா ரயில் பெட்டிகளிலும், உங்கள் பெயரைக் குறிப்பிட்டு, ஹிண்டு நிருபர் ஒழிக என்று எழுதிவிட்டார்கள்’’.
காலையில் இல்லாத எதிர்ப்பு, மாலையில் எப்படி எழுந்தது என்று யோசித்துப் பார்த்தபோது ஒரு விஷயம் விளங்கியது. அது ஆல் இந்தியா ரேடியோவின் செய்தி அறிக்கையின் உடனடி விளைவு.
ஏஜென்சி செய்திகளில் வாசகங்கள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதால், சிபாரிசின் பெயரிலேயே அட்மிஷன் என்று செய்தி ஒலிபரப்பப்பட்டிருக்கிறது. கண்ணால் பார்ப்பதை விட காதால் கேட்பதில் வீரியம் அதிகம். அதனால் தான் வானொலி செய்தி அறிக்கையை கேட்ட மாணவர்கள் வெகுண்டு, ஒன்று திரண்டார்கள்.
சிலர் மீண்டும் ஹிண்டு பத்திரிகையை படித்திருப்பார்கள்.
பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவர்கள், தாங்கள் தகுதியில்லாமல் சிபாரிசில் தான் சேர்க்கப்பட்டதாக பழி விழுந்ததே என்று கோபப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்கள் பதிவாளரிடமும், துணை வேந்தரிடமும் அதுபற்றி பேசினார்கள்.நிர்வாகப் பொறுப்பில் இருந்த அந்த இருவரும், மந்திரி அப்படி சொல்லவில்லை என்று மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றார்கள். ஆனாலும் மாணவர்கள் ஆர்பாட்டத்தை தொடர்ந்தார்கள். அவன் அந்த ஆர்பாட்டத்தையும் காரணங்களை குறிப்பிட்டு செய்தி ஆக்கினான்.
ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்த தினத்தில் கல்வி மந்திரி அரங்கநாயகம் மதுரையில் இருந்தார். மதுரை நிருபர்கள் அவரிடம் கேட்டார்கள் “நீங்கள் என்ன சொன்னீர்கள்? மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஏன்?”
அதற்கு அரங்கநாயகம் சொன்னார், ‘‘ஹிண்டு பத்திரிகையில் என்ன வந்திருக்கிறதோ அதுதான் நான் வார்த்தைக்கு வார்த்தை சொன்னது. அடுத்த நாள் இதுவும் செய்தி ஆனது. மாணவர் ஆர்பாட்டமும் தொடர்ந்தது. அதுமட்டும் அல்ல மாணவர்கள் கோபம் ஹிண்டுவின் பக்கம் திரும்பியது. நான்காம் நாள் மாணவர் சங்க தலைவர்கள் ஒன்று கூடி, பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து, எல்லா நிருபர்களையும் அழைத்திருந்தார்கள். அந்த சந்திப்பின் இடம் அந்த பல்கலைக்கழகத்தில் ஒரு வகுப்பறை. இந்த தகவல் சிதம்பரத்தில் இருந்த மத்திய உளவுத்துறை அதிகாரியான வி.கார்த்திகேயன் என்பவருக்கு தெரிய வந்தது. அவர் ஹிண்டு நிருபரை அழைத்து, ‘நிலைமை மோசமாக இருக்கிறது, நீங்கள் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு போக வேண்டாம், மற்றவர்கள் போகட்டும். பேச்சுவார்த்தை அத்துமீறினால் உங்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். ஒரு வேளை நீங்கள் தாக்கப்படலாம். மற்ற நிருபர்கள் போகட்டும். நான் என் உதவியாளர் சேகரை நிருபர்களுடன் நிருபராக அனுப்பிவைக்கிறேன்’.
ஆனால் அவன் உளவுத்துறை அதிகாரியின் அறிவுரையை ஏற்கவில்லை. மாறாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டான். மாணவர் சங்க தலைவர், ‘ஏன் அந்த ஆர்ப்பாட்டம், என்று சுருக்கமாகச் சொன்னார். அதையொட்டி பிற மாணவர்கள் கேள்வி கேட்கும் முன்னதாக அவன் எழுந்து பேச ஆரம்பித்தான்.
‘‘நானும் இதே பல்கலைக்கழகத்தின் மாணவன் தான். ‘‘English Club’’ என்கிற மாணவர் சங்கத்தின் செயலாளராக இருந்தவன். இதே பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். கடந்த சில வருடங்களாக என்ன நடந்து வந்தது? இப்போது என்ன மாற்றம் என்று எனக்குத் தெரியும். சொல்கிறேன், கேட்கிறீர்களா?’’
மாணவர்களின் கூச்சல், குழப்பம் ஓய்ந்தது. அவர்கள் அவன் பேசுவதைக் கேட்கத் தயாரானார்கள். அவன் சொன்னான், ‘‘ஒரு காலத்தில் தகுதியை புறக்கணித்து, சிபாரிசுக்கே இடமிருந்தது என்பதை நான் அறிவேன். அதனால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் ரேங்க் மாணவனாக இருந்த நான், எம்.ஏ. ஆங்கில இலக்கிய வகுப்பில் சேர விண்ணப்பம் கொடுத்தேன். என்னுடன் கல்லூரியில் படித்த, என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்ற, ஒரு மாணவர், ஒரு சிண்டிகேட் உறுப்பினர் சிபாரிசினால் எம்.ஏ. வகுப்பில் சேர்ந்தான். நீங்கள் விரும்பினால் அந்த மாணவனின் பெயரையும், முகவரியையும் தருகிறேன், கேட்டுக் கொள்ளலாம்’’ என்றான். சிபாரிசு தான் வழி என்பதால் மறுவருடம் நான் இணைவேந்தரின் உதவியாளரின் சிபாரிசை பெற்று எம்.ஏ. வகுப்பில் சேர்ந்தேன். முன்னாள் சகமாணவனுக்கு ஜுனியர் ஆனேன், அதுவும் சிபாரிசினால். இது நடந்த கதை. என்னைப் போல் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆகவே கல்வி மந்திரி அப்போதைய நிலைமையைப் பற்றித்தான் சொன்னார்.
கடந்த சில வருடங்களாக அட்மிஷன் பெற்று, படித்து வரும் மூத்த மாணவர்கள் தங்களைப் பற்றிய விமர்சனமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டாம்’’. இந்த விளக்கத்தைக் கேட்ட மாணவர்கள், ‘‘எந்த வருடம் படித்தீர்கள்? ஹாஸ்டலில் தங்கினீர்களா? அப்போது ஆசிரியர் யார்-?’’ என்றெல்லாம் கேட்டார்கள். அவன் பொறுமையாக பதில் சொன்னான்.
பத்திரிகையாளர் சந்திப்பில் சகஜநிலை திரும்பிய பிறகு அவன் சொன்னான், ‘‘நான் இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவன் மட்டுமல்ல, முன்னாள் செனட் உறுப்பினரும் கூட. இந்த மாவட்டத்தில் ஹிண்டு நிருபராக பொறுப்பேற்றதும், செனட் ஊறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன். செனட் உறுப்பினராக இருந்தபோது, இணை வேந்தருக்கான மதிய விருந்தில் பிற செனட் உறுப்பினர்களுடன் கலந்து கொண்டேன். நிருபரானதும் மதிய விருந்தில் கலந்து கொள்வதில்லை.
அப்போது நிருபராக ஆட்டோ ரிக்ஷாவுக்கு போகவர எட்டு ரூபாய் கொடுத்து, நான்கு ரூபாய்க்கு உடுப்பி ஹோட்டலில் அளவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு வருவேன். பல்கலைக்கழக உணவை ஏற்பதில்லை. பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் தங்குவதும் இல்லை’’ என்றான். இதைக் கேட்ட மாணவர்கள், கை தட்டினார்கள். அருகே வந்த சிலர், ‘உங்களை இப்போது புரிந்து கொண்டோம் சார்’ என்றார்கள்.
பிறர் மூலம் சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தாமல், அவன் நிலைமையை நேரடியாக எதிர்கொண்டான். செய்திகளில் பின்விளைவுகளை நேரடியாக எதிர்கொள்ளும் நேர்மையும் நெஞ்சுரமும் ஒரு நிருபருக்கு இருக்க வேண்டும். அது இல்லையென்றால் வேறு வேலைக்கு போய்விடலாம். ஆக, ஒரு நிருபருக்கு வேண்டிய மூன்று குணங்கள், துணிவு, தெளிவு, நேர்மை.
Leave a comment
Upload