ஹைதராபாதில் 42.5 டிகிரியிலேயிருந்து 43Cக்கு தாவிக்கொண்டிருந்த நேற்றைய பகலில்தான் சில்லறை வேலைகளை முடிக்கக் கிளம்பினேன்.
ஓலா டிரைவரிடம் 'என்னைப்பா! காருக்குள்ளே இவ்வளவு சூடா இருக்கு? ஏஸி உறைக்கவே இல்லையே!' என்று தெலுங்கிலே கேட்டேன்.
''கொஞ்சம் வெய்யிலா அடிக்குது? இன்னும் சூடு குறையணும்னா ஹுசைன் ஸாகரில்தான் வண்டியை இறக்கணும் சாப்!' என்றான் படவா.
ஹுஸைன் சாகர் ஏரி பிரம்மாண்டமான வெள்ளிப்பாளமாக மின்னிக் கொண்டிருந்தது.
அந்த டிரைவர் சென்னைக்கு வந்து லோல்பட்ட கதையை உருது நனைந்த தெலுங்கில் சொன்னான்.
"எல்லோரும் உங்க ஊர்ல ஏன் சார் எதையோ பறிகொடுத்த மாதிரியே திரியறாங்க?"என்று கேட்டான்.
'கொஞ்சமாவாடா நாங்க பறிகொடுத்திருக்கோம்?' என்று நினைத்துக் கொண்டேன். இவனை யார் கிட்டே பிடிச்சு கொடுக்கலாம்?
"ரோடைப் பார்த்து ஓட்டு" என்பதே என் பதிலாக இருந்தது.
முன்மாலை மூன்றுமணிக்கு வந்தவேலை முடிந்து வெளியேவந்து பார்த்தால் சூரியனையே காணவில்லை.
மேற்திசையில் வானம் கறுத்துக் கிடந்தது.
வீடுதிரும்பி 'அரக்கு வேலி' காபிப்பொடியை பில்டரில் நிரப்பி கொதிநீர் வார்த்தேன்.
இரகுவம்ஸத்தில் சுதக்ஷணையின் உச்சந்தலையை முகர்ந்த திலீப மகாராஜா, அவளுடைய கூந்தல் மணத்தில் சொக்கி, உள்ளிழுத்த மூச்சை வெளியேவிடாமல் கிறங்கிக் கிடந்தானாமே... அதுவும் எப்படி? கோடைமழையின் முதல் பொழிவில் கிளம்பிய மண்வாசத்தில் கிறங்கி, துதிக்கையை உயர்த்தி மூச்சிழுத்துத் திணறும் யானையைப் போல இருந்தானாமே தீலீபன்….அப்படித்தான் அந்தக் காபி மணத்தை முகர்ந்த நானும்...
அதுவும் நானே போட்டுக்கொள்ளும் நலமுள்ள காபி!
காபி 'மக்'குடன் பால்கனி வந்தால்... அடடா! குளிர்ந்த காற்று சுழன்றடிக்கிறது. வெயில் போனஇடம் தெரியவில்லை. மழை வருமோ என்னவோ? இப்போது மழை வந்தால்,நான் நனைந்தால் என்ன? இந்தக் குதிரைக்குக் கடிவாளம் போட இங்கே இப்போ யாரிருக்கா?
"மைனர் லைஃபு ரொம்ப ஜாலி...
மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி;
ஊரைச் சுத்துவதே ஜோலி எந்நாளுமே
மைனர் லைப் ரொம்ப ..." என்று ஏ.எம்.ராஜாவே மறந்து போன பாடலை பாடியபடி ஆடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தேன்.
மணி நான்குதான். காற்று ஊதலாக வீசிக் கொண்டிருந்தது. எதிர்காற்று மூச்சுத் திணறியது. நடைபாதையில் நடக்க ஆரம்பித்தேன்.
'ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி.. மலையாள மின்னல் ஈழ மின்னல்...' என்று மனதுக்குள் முக்கூடற் பள்ளு பாடல், தாளக்கட்டுடன் தாவிக்கொண்டிருந்தது.
மரங்கள் தலைவிரித்தாடுகின்றன. நேர்த்தியாக வரிசைகட்டி நின்ற பூச்செடிகளை எண்ணிக் கவலை கொண்டேன். பொல்லாத காற்று இவற்றைக் குலைத்துவிடுமே என்று அவற்றைப் பார்த்தபடி நின்றேன்.
"நீங்க போங்க அங்கிள்! நாங்க சமாளிச்சுக்குவோம்!" என்றனவோ அவை? வீசும் திசைக்கே வளைந்து, காற்றை மதித்து வணங்கின அந்தப் பூஞ்செடிகள்.
காற்றையும் ஊழிக்கூத்தையும் பாடிப் போன பாரதி நினைவில் கூடவே வந்தான்.
காற்றையும் ஊழிக்கூத்தையும் பார்த்தா பாரதி பாடியிருப்பான்? இல்லை..... பாரதி அவற்றைப் பாடக்கேட்டே அவை ஆர்ப்பரித்து வந்திருக்க வேண்டும்!
ஆளைத் தள்ளியது காற்று. யார் வீட்டு பால்கனியிலிருந்தோ விடுதலை பெற்று, நீலநிற லுங்கியோ அல்லது பாவாடையோ ஒன்று பறந்தது. காற்று அம்மணமாய்த் திரிகிறதே என்ற கரிசனம் அதற்கு!
மழை ஏதும் வரவில்லை. வீடு திரும்ப வேண்டும். சுவாமி விளக்கேற்றி வைத்துவிட்டு, ஜபத்துக்கு அமர வேணும். இன்றைக்கு தியான அமைதி மனதில் கூடிய பின்னே, ஜபம் செய்யப் போவது புதுமை!
தனியாகத்தான் இருக்கேன்! வாங்களேன் மிஸ்டர் சுப்ரமணிய பாரதி! ராத்திரிக்கு கமகமன்னு சேமியா உப்புமா பண்ணித் தரேன்!
காலையில் வச்ச வத்தக்குழம்பும் சாதமும்கூட இருக்கு. சாப்பிட்ட அப்புறம் ஒரு போட்டி வச்சுக்கலாமா பாரதி?
நீங்க எழுதின பாட்டையெல்லாம் தப்பில்லாம சரியா நீங்க பாடுறிங்களா, இல்லை இந்த மோகன் பாடறானான்னு?
சில வருடங்களுக்கு முன் ஒரு நாளில்.....
Leave a comment
Upload