பவித்ரா அப்பொழுதுதான் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு. வீட்டுக்கு வெளியே வந்தாள். வாகனத்தின் ஸ்டாண்டை போட்டுவிட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ண முயற்சித்தாள்.கடந்த சில நாட்களாக அந்த வண்டியை அவள் எடுத்து பயன்படுத்தவில்லை.எனவே அதனுடைய பேட்டரி டவுன் ஆகி இருந்தது.அப்பொழுது அவனுக்கு எதிரே வந்த அந்த வாலிபன், ’மேடம், நான் வேண்டும் என்றால் வண்டியை ஸ்டார்ட் பண்ணித் தரட்டுமா?’ என்று கேட்டான். பாஸ்கர் என்பதுதான் அவனுடைய பெயர்.அதே தெருவில்தான் வசிக்கிறான்.திருமணம் ஆகாத வாலிபன்.
அந்த வண்டியின் கிக்கரை சில முறை உதைத்தான்.முதலில் மக்கர் பண்ணிய வண்டி சிறிது நேரம் உதை வாங்கிய பிறகு முணுமுணுத்துக் கொண்டே புறப்பட்டது.அவ்வளவு அழுத்தம் கொடுத்து அந்த கிக்கரை உதைக்க பவித்ரா போன்ற இளம்பெண்ணானால் இயலாது.
மெதுவாக வண்டியின் சீட்டில் அமர்ந்த பவித்ரா பாஸ்கருக்கு நன்றி சொல்லி விட்டு வண்டியை நகர்த்தினாள். சிறிது நேரம் போன பிறகு ஒரு மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு, யாருக்கோ போன் பண்ணி சொன்னாள், ’நான் வர பத்து நிமிஷமாகும். என்றும், கிளம்பும்போது வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. கடவுளே அனுப்பின ஒருத்தர் வந்து வண்டி ஸ்டார்ட் பண்ணி கொடுத்தார்.நான் இப்பொழுதுதான் புறப்படுகிறேன். பேங்குக்கு போயிட்டு அப்படியே போஸ்ட் ஆபீஸ் போயிட்டு வரேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு ஃபோனை அணைத்து விட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணி புறப்பட்டாள் பவித்ரா.
இது வரை இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு அலமேலு, பவித்ராவின் வீட்டு கேட்டைத் தட்டினாள். பேசிக் கொண்டிருந்த கைப்பேசியை அணைத்து விட்டு,பவித்ராவின் மாமியார் பத்மாதான் கதவை திறந்தாள்.
‘அம்மா.உங்களைத்தான் பார்க்க வந்தேன். இந்த கலிகாலத்தை பார்த்தீங்களா?உங்க வீட்டுக்கு எதிரிலேயே உங்க மருமகள் வெயில கூட பார்க்காமல் பத்து நிமிஷம் அந்த பாஸ்கர் பையனோட அரட்டை அடித்து பேசிவிட்டு போகிறாள்.எனக்கு மனசே கேட்கவில்லை. அதனால்தான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகலாம்’ என்று வந்தேன் என்று சொல்லிக் கொண்டே ஹாலிலிருந்த சோபாஃவில் உட்கார்ந்து கொண்டாள்.
பவித்ராவின் மாமியார் பத்மாவுக்கு அலமேலு தனக்கும் தன்னுடைய மருமகளுக்கும் சிண்டு மூட்ட பார்க்கிறாள் என்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் ஆகவில்லை. அப்போதுதான் பவித்ரா வண்டி பழுதான ஆன விஷயத்தை அவளிடம் சொல்லி திரும்ப நேரமாகும் என்றும் அவளுக்கு போன் பண்ணி சொல்லி இருந்தாள். உண்மை இப்படி இருக்க, இவள் வந்து ஒரு கட்டுக்கதை சொல்லியிருக்கிறாள். கதை கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கவே, பவித்ராவின் மாமியார் பத்மாவும் அதைக் கேட்டு ரசித்து கொண்டிருந்தாள்.இல்லையென்றால்,அடுத்த வீட்டுக்கதை நாளைக்கு இவளுக்கு கிடைக்காதே!
அக்கப்போரை பற்ற வைத்ததில் அலமேலுவுக்குவுதான் எவ்வளவு சந்தோஷம்? ’திரும்ப வரும் பவித்ராவுக்கு நல்ல அவமானம் காத்திருக்கு ’என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டே, ஏதோ பவித்ராவை பழி தீர்த்துவிட்ட மனஉணர்வுடன் புறப்பட ஆயத்தமானாள் அலமேலு.
பவித்ராவின் மாமியார் கொடுத்த சூடான பிஃல்டர் காஃபியை ஒரே மூச்சில் குடித்துவிட்டு, ’நான் புறப்படட்டுமா?இன்னும் நாலு வீட்டுக்கு போய் பேசிவிட்டு போக வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டாள் அக்கப்போர் அலமேலு.
புறப்பட்டவளிடம்,’ஆமா நேற்று மாலை உங்க வீட்டுக்காரர் தன்னுடைய பி.ஏ.ஓவோட சினிமாவுக்கு வந்தாரே, அந்த கதை உனக்கு தெரியுமா? நாங்களும் அந்த படத்துக்குதான் போயிருந்தோம்’
அதிர்ச்சி தனக்கே திரும்பி விட்டதே என்று மனதில் புழுங்கிக் கொண்டே புறப்பட்டாள் அலமேலு.
அலமேலுவின் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி அவள் அப்பாவி வீட்டுக்காரர் மேல் அடியாய் விழப்போவது நிச்சயமாகிவிட்டது.
பவித்ராவின் மாமியார் மைண்ட் வாய்ஸ் !!
யார் அந்த பி.ஏ.?
யாருக்குத் தெரியும்?
ஆண்டவன் அவளை இனிமேல்தான் படைக்க வேண்டியிருக்கும்.
Leave a comment
Upload