தொடர்கள்
தொடர்கள்
பறவைகள் பல விதம் - இந்த வார பறவை தட்டை வாயன் -  22 ப ஒப்பிலி

20250408142610602.jpeg

மயில் தோகை நிறத்தில் தலைப்பகுதி. தட்டையான வாய். பலவிதமான வண்ணங்களை கொண்ட உடம்பு இவைதான் ஆண் தட்டை வாயன் வாத்தின் அடையாளம். பெண் வாத்துகள் வேறு நிறம் கொண்டவைகளாக இருக்கும். வட மத்திய ரேகை பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் பறந்து தென் இந்தியாவில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், நெமிலிச்சேரி நீர்நிலை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகிய இடங்களுக்கு வந்து செல்லும் இந்த வாத்தினம்.

பள்ளிக்கரணைக்கு வரும் பறவைகளை கணக்கெடுத்து வரும் கே வீ ஆர் கே திருநாரணன் கூறுகையில் கடந்த சில வருடங்களாக வேடந்தாங்கல் அருகில் உள்ள கரிக்கிளி பறவைகள் சரணாலயத்திற்கு வரும் வாத்துகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கூறுகிறார். இந்த வகை வாத்துகளுக்கு நீர்நிலைகளில் அதிக அளவு தண்ணீர் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் இந்த வாத்துகள் அந்த நீர்நிலைக்கு வராது என்கிறார் அவர்.

பருவநிலை மாற்றத்தினால் ஆர்க்டிக் போன்ற பகுதிகளில் உறைபனி பாறைகள் மிகவும் சீக்கிரமாகவே கரைந்துவிடுகின்றன. இதனால் இந்த வாத்துகள் இனப்பெருக்க இறகுகள் வந்தவுடனேயே தங்கள் வாழ்விடமாகிய மத்திய ரேகை பகுதிகளுக்கு திரும்பிவிடுவதாக அவர் கூறுகிறார்.

பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் துணை இயக்குனர் ச பாலச்சந்திரன் கூறுகையில் இந்த பறவைகளின் கால்களில் வளையம் செருகப்பட்டது. இந்த வளையம் கொண்ட வாத்துகளை ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பேகிஸ்தான் போன்ற நாடுகளில் பறவையின ஆராய்ச்சியாளர்கள் பிடித்துள்ளனர். அதே போல இந்தியாவிலும் ராஜஸ்தானில் உள்ள பரத்பூர், ஒடிசாவில் உள்ள சிலிகா ஏரி, பஞ்சாபில் உள்ள பூபிந்தர் அணைக்கட்டு பகுதிகளிலும் காணப்பட்டதாக கூறுகின்றார் அவர்.

வந்தால் ஒரே கூட்டமாக ஆயிரக்கணக்கில் வரும் இந்த தட்டை வாயன்கள். அப்படி இல்லை என்றால் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் இந்த வாத்துகளை காண முடியும் என்கிறார் திருநாரணன்.