தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு கேள்வி பதில் 2 - பரணீதரன்

பக்தியால் தமிழ் வளர்ந்ததா, தமிழால் பக்தி வளர்ந்ததா ?

இந்த கேள்விக்கு பரணீதரன் பதில் தொடர்ந்து தருகிறார்.

20250409230542997.jpg

பொதுவாக சிறு குழந்தைகளுக்கு தமிழில் சுலோகங்களை சொல்லிக் கொடுக்கும் பொழுது நாம் முதலில் சொல்லித் தரக்கூடிய ஒரு ஸ்லோகம் ஔவையார் இயற்றியது ஆகும். மிகவும் உயர்ந்த கருத்துக்களை மிகவும் சுலபமாக சொல்லிக் கொடுப்பது ஔவையாரின் தனித் திறன் ஆகும். பக்தியையும் தமிழையும் ஒருசேர ஊட்டக் கூடியதாகிய அந்த ஸ்லோகத்தை இன்று, முதலில் பார்ப்போம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா - ஔவையார்

அதாவது பசும்பாலையும், தெளிவான தேனையும், வெல்லப் பாகையும், பாசிப் பருப்பையும் கூட்டாக சேர்த்து உருவாக்கிய பாசிப்பருப்பு பால் பாயசத்தை ஔவையார், அழகான யானை முகத்தை உடைய தூய்மையான மணியை போன்று இருக்கக்கூடிய விநாயகர் பெருமாளுக்கு படைக்கிறார்; அதற்கு பதிலாக அவர் இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று அழைக்கக்கூடிய முத்தமிழையும் தனக்கு அருளும்படி கேட்டுக் கொள்கிறார். ஒரு பக்கம் பக்தியுடன் படையல்; மறுபக்கம் தமிழ் மேல் காதல். இதுதான் தமிழ் புலவர்களின் இயல்பான வாழ்க்கை. இதில் தெரிந்து கொள்ளக்கூடிய மற்றொரு மருத்துவ ரகசியமும் உள்ளது. மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு பொருட்களிலும் பல்வேறு விதமான சத்துக்கள் உள்ளன. அவை நம் மூளையை தூண்டிவிட்டு நம்முடைய படிக்கும் ஆற்றலை அதிகரிக்கும். அதனால் தான் தமிழை கற்றுக் கொள்வதற்காக இந்த பொருட்களை ஔவையார் உபயோகிக்கிறார்.

20250409230622337.jpg

அடுத்ததாக முருகப்பெருமானின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்த அருணகிரிநாதரும்,

இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறித்

திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே

பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத்துவஞானா

அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே - அருணகிரிநாதர்

அதாவது, இரவு பகல் என்று நேரம் பார்க்காமல் எப்பொழுதும் இயல் இசை நாடகம் என்று முத்தமிழையும் வைத்து அதன் மூலமாக பாடல்களை பாடி, நிலையான பொருள் எது என்பதை எனக்கு தெளிவாக விளக்கி அதன் மூலமாக திருவருளை தருவாயே. மிகுந்த கருணையை கொடுக்கக்கூடிய பெருமைமிக்க வாழ்க்கையை போன்றவனே. மிகுந்த கடினமான சிவ தத்துவத்தின் ஞான வடிவானவனே. அரன் என்று அழைக்க கூடிய சிவபெருமானின் பிள்ளையே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமானே! என்று அருணகிரிநாதர் பாடுகிறார். இதில் பக்தியை மட்டும் வைக்காமல், தமிழையும் சேர்த்து வைத்தே பாடுகிறார்.

20250409230656969.jpg

அடுத்ததாக சிவபெருமான் மீது மிகுந்த பாசமும் பக்தியும் கொண்டிருந்த அப்பர் என்று அழைக்கப்படுகின்ற திருநாவுக்கரசர் கீழ்கண்டவாறு பாடுகிறார்,

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்

நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்

உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்

உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்

உடலுள் உறு சூலை தவிர்த்தருளாய்

அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே - திருநாவுக்கரசர்

அதாவது, சலம் (ஜலம்) என்று அழைக்கப்படுகின்ற தண்ணீர், பூ, தூபம் (இவை சமண மதத்தில் பூஜை பொருட்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை) போன்ற பூஜை பொருட்களை என்றும் மறக்க மாட்டேன். தமிழையும் தமிழில் உருவாக்கப்பட்ட இசை பாடல்களையும் என்றும் மறக்க மாட்டேன். நன்மையிலும் தீமையிலும் உன்னை மறக்க மாட்டேன். என்னுடைய நாக்கு உன்னுடைய பெயரை என்றும் மறக்காது. பிரம்மனுடைய தலையை கிள்ளி எடுத்தவனே, என்னுடைய உடம்பில் உள்ள சூலை நோயைத் (அல்சர் நோயை போன்றது) தவிர்த்து அருள வேண்டும். அடியேன் மிகவும் கஷ்டமடைந்து விட்டேன், திருவதிகை வீரட்டானத்தில் கெடில நதி கரையில் உறைந்திருக்கும் அம்மானாகிய சிவபெருமானே என்று திருநாவுக்கரசர் பாடுகிறார். இப்படிப்பட்ட தாகிய கஷ்ட நேரத்தில் கூட பக்தியையும் தமிழையும் அவர் மறக்காமல் சேர்த்தே பாடுகிறார்.

20250409230747249.jpg

அடுத்ததாக திருமாலை பாடிய ஆழ்வார்களின் முதன்மையானவர்கள் மூன்று பேர். பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் ஆகியவர்கள் தான் முதல் மூன்று ஆழ்வார்கள் ஆவார்கள். இவர்கள் பாடிய பக்தி பாடல்களாகிய திவ்ய பிரபந்தத்திலும் தமிழ் மொழியின் மேன்மை வெளிப்பட்டு கொண்டே தான் இருக்கும்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான் - பூதத்தாழ்வார்

திருமால் மேல் கொண்ட அன்பை விளக்காகவும், பெருமாளை அடையக்கூடிய ஆர்வத்தை நெய்யாகவும், அவரால் உருவாக்கப்பட்ட பேரானந்தத்தை அடைந்திருந்த தன்னுடைய சிந்தனையையே திரியாகவும் இட்டு, உருகி உருகி ஞானசுடர் என்ற விளக்கை ஏற்றினேன், என்னுடைய நாயகனான நாராயணனுக்கு ஞானத் தமிழை புரிந்து கொண்ட நான் இன்று பூதத்தாழ்வார் பாடுகிறார். பேரானந்தத்தையும், பெருமாளையுமே தெரிந்து கொண்ட ஆழ்வார் கூட தமிழை விட்டுக் கொடுக்காமல் தான் பாடியுள்ளார். பக்தியும் தமிழும் ஒன்றே என்பதை இங்கு நாம் பார்க்க முடியும்.

அடுத்ததாக நாம் பார்க்கப் போகின்ற பாடல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அதற்கு காரணம் அது சக்தி வழிபாட்டை உணர்த்தும் பாடல் ஆகும். குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையில் இருந்து ஒரு பாடலைப் பார்ப்போம்.

20250409230834735.jpg

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்

குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு

களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! - குமரகுருபரர்

மேலே உள்ள பாடல் சரஸ்வதி தேவியை போற்றி துதிக்க கூடிய பாடல் ஆகும். இந்த சகலகலாவல்லி மாலையில் உள்ள பல பாடல்களில் தமிழ் மொழியின் சிறப்பும், பெருமையும் வந்து கொண்டே இருக்கும். அதனால் நாம் ஒரே ஒரு பாடலை மட்டும் பார்ப்போம். செழுமையான தெளிந்த அமுதத்தை போன்ற தமிழ் மொழியை கற்று அதன் மூலமாக மகிழ்ந்து கொண்டிருக்கும் நான், உன்னுடைய அருட்கடலில் குளிக்க போகின்ற நாள் என்றோ ? தங்களுடைய உள்ளத்தைக் கொண்டு தெளிவான கவிதைகளை உருவாக்கும் புலவர்களின் கவி மழையை கண்டு, அந்த மழையில் நனைந்து கொண்டு மகிழும் அழகான தோகைகளை கொண்ட மயிலை போன்றவளே, சகலகலாவல்லி ஆகிய சரஸ்வதி தேவியே என்று குமரகுருபரர் பாடுகிறார்.

இப்படி எந்த தெய்வத்தை எடுத்துக் கொண்டாலும், அந்த தெய்வத்தின் மேல் பக்தி கொண்ட அன்பர்களும் புலவர்களும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தும் பொழுது அதன் கூடவே தமிழ் மொழியையும் சேர்த்தே பாடுகிறார்கள். அவர்கள் கடவுள் பக்தியையும், தமிழ் மொழியையும் வேறு பெயராக பார்க்கவில்லை. அவை இரண்டும் ஒன்றே என்ற ரீதியில் தான் வாழ்ந்து இருக்கிறார்கள். இதை நாம் மேலே பார்த்த சில பாடல்களில் இருந்து தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். அதனால் தமிழும் பக்தியும் ஒரு சேரவே வளர்ந்தது என்பதை மிகவும் திண்ணமாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி பதில் தொடரும்…..