பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையினை மீனாட்சி மாமி கவனமாக கேட்டுக்கொண்டிருந்தாள். குப்புசாமி மாமாவும் கேட்டுக்கொண்டிருப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தார் , மனது முழுக்க அன்றைய செய்தித்தாளில் வந்த ஒரு விளம்பரம் பற்றியே இருந்தது.
செய்தி இது தான் " தமிழ் புத்தாண்டு அறிவுப் போட்டி "
இங்கு தந்திருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி , குறுக்கெழுத்துக் கட்டங்களை நிரப்பி , இதனை ஒரு போட்டோ பிடித்து உங்கள் புகைப்படம் மற்றும் முகவரியுடன் கீழே தரப்பட்டிருக்கும் வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும், சரியான விடையளிப்போருக்கு பரிசு 15000/- பலர் சரியான விடையளித்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படும் , கலந்து கொள்ளும் அனைவருக்கும் , கவர்ச்சி நடிகை ஜிகினா ஸ்ரீயின் ,கையெழுத்தும் , முத்தமும் பதிக்கப்பெற்ற புகைப்படம் அவர்களுடைய வாட்ஸப்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதோடு ரூபாய் 250 /- இலவச ப்ரீபெய்ட் ரீசார்ஜும் செய்து தரப்படும்...முந்துங்கள் முடிவு நாள் 15 ஏப்ரல் மாலை 6 மணி . " என்று வாட்சப் அனுப்பவேண்டிய மொபைல் நம்பரும் தரப்பட்டிருந்தது......அவ்வளவுதான், தினமும் ஜிகினாஸ்ரீயின் நினைவாகவே தூங்கப்போகும் குப்புசாமி, முத்தத்தோடு போட்டோ என்றால் விடுவாரா ? முந்திக்கொண்டு வேலை செய்ய துவங்கினார் .
அறிவுப்போட்டி என்பதால் மீனாட்சி மாமியை ஒதுக்கி விட்டார். அவளுக்கும் , அவள் குடும்பத்திற்கும் அடுத்த வீட்டு அக்கப்போரும் , அழுகை சீரியலையும் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்பது குப்புசாமியின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதுவோ சினிமா குறுக்கெழுத்துப்போட்டி , யோசனை பண்ணிக்கொண்டிருக்கும்போதே அன்றைய விலையில்லா சாப்பட்டைப் பெற அவர் மச்சினன் அச்சுவும், அவன் பிள்ளை சுப்புணியும் வந்தார்கள், வரும்போதே அச்சு "என்ன அக்கா அத்திம்பேர் ஆழ்ந்த யோசனையில் இருக்கார் ?" என்றான். உடனே மீனாட்சி மாமி "அவர் இந்தியப்பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்தறதுன்னு யோசிக்கறார் " நீ வேற ஏன்டா, வந்தோமா சாப்பிட்டோமா அப்டியே போய்ட்டே இருக்கணும்". (என்ன ஒரு பொறுப்பு ?! குப்புசாமி மனதிற்குள் மருகினார், அன்னிக்கு என் தங்கச்சி வந்தபோது , (அவளே எப்போவோ வாரம் ஒரு தடவ வரா), அவளுக்கு காபி போட சட்டசபையைக்கூட்டி, எதிர் கட்சி தலைவரை வெளிநடப்பு செய்ய வெச்சு , அப்புறம் தான் ஒரு டம்ளர் காபி கிடைச்சது ...இப்போ ?)
சரி இந்த ரெண்டு தண்ட சோறுகளும் சாப்பிட்டு சும்மா தான இருக்காங்க...அவங்க knowledge ய செக் பண்ணி பார்த்துட வேண்டியது தான். கட்டமும் கையுமாக உட்கார்ந்தார் , (கட்டத்துறைக்கு இன்னிக்கு கட்டம் சரியில்ல..ஹீ ஹீ ) இரண்டு கட்டம் அவராலேயே பூர்த்தி பண்ண முடிந்தது...உற்சாகம் பொத்துக்கொள்ள அடுத்த குறிப்பை படித்தார் , 4 . மேலிருந்து கீழ் ...ஒரு நட்சத்திர வருகை (6 ) என்று குறிப்பு இருந்தது ... சரியாக சுப்புணி வந்தான், (இந்த வால் நட்சத்திரம்னா வருது ) அவனிடம் கேட்டார்...."இருங்கோ அத்திம்பேர் அப்பா வரட்டும்....அவருக்கு எல்லா படமும் தலை கீழ் பாடம் " என்றான்...அதற்குள் அடுத்த குறிப்பை அவன் படித்தான்...7 மேலிருந்து கீழ் ...அம்புலி மாமா கதை சுருக்கமாக ...(6 ) " உனக்கு அம்புலி மாமா தெரியுமாடா ?" குப்புசாமி சுப்புணியிடம் கேட்டார்...."ஓ தெரியுமே...எங்கப்பா பரண்ல கட்டு கட்டா வெச்சிருக்கார்("பின்ன பணத்தையா கட்டி வெச்சுருப்பான்"- குப்புசாமி )....நான் படிச்சிருக்கேன்...இதுக்கு பதில் "விக்ரம் வேதா" சரியா...எழுதி பார்க்கிறார்... "சரியாய் இருக்குடா...அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கே."
அடுத்து 10 மேலிருந்து கீழ் "விஜயலட்சுமி ,சிலுக்கான படம் (9 ). "ம்ஹும்...எனக்கு தெரியாது எங்கப்பாவுக்கு நிச்சயமா தெரிஞ்சிருக்கும்...சுப்புணி. (குப்புசாமி மனதிற்குள் நினைத்தார் "உங்கப்பன் சரியான ஜொள்ளு பார்ட்டி, தெரியாம இருக்குமா? , எத்தனை முறை பரங்கி மலை ஜோதி 11 மணிக் காட்சில பாத்திருக்கேன்) சரியாய் வெளியே வந்தான் அச்சு , "என்ன அத்திம்பேர் எந்த கட்டத்துக்கு விடை தெரியல...." உடனே சுப்பு அந்த குறிப்பை சொல்ல , யோசிக்காமல் உடனே சொன்னான் " வண்டிச்சக்கரம் " ..குப்புசாமி மனதிற்குள் வியந்தார் ...(பயல் நல்ல படம் பாப்பான் போல ) சரிடா அச்சு , பாக்கியையும் பூர்த்தி பண்ணு...உடனே அப்பாவும் பிள்ளையும் மட மட வென வேளையில் இறங்கினார்கள். பத்தே நிமிஷம் எல்லா கட்டமும் ,பூர்த்தி செய்யப்பட்டு விட்டது. அச்சு "இந்தாங்கோ அத்திம்பேர் , உங்க கட்டம் ரெடி. " உடனே குப்புசாமி செயலில் இறங்கினார் , அதை போட்டோ எடுத்து , தன் போட்டோவும் சேர்த்து மொபைல் நம்பரை அடித்தார் அப்போது மாமி வந்து என்ன செய்யறீங்க ? காபி கலக்கட்டுமா? என்று கேட்டாள். " டக்கென்று போனை மறைத்த குப்புசாமி , " இதோ வரேன் மீனு , அச்சுவுக்கும், சுப்புணிக்கும் சேர்த்து கலக்கு ".மாமி சொன்னாள் "அத நீங்க எனக்கு சொல்லணுமா?" குப்புசாமி நினைத்தார் (அதானே?) பின்னாலே இருந்த போனில் அப்படியே , நம்பரை அழுத்தி, திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அனுப்பித்து விட்டார்.
வெளியில் ஏதோ சத்தம் கேட்டது, பரிமளா மாமி , கையில் ஏதோ கவரோடு நின்றுகொண்டிருந்தாள், மீனாட்சி மாமி ஏதோ சிரித்த முகத்தோடு பேசிக்கொண்டிருந்தாள், இது நல்ல சமயம் அல்ல என்று, பத்திரிக்கையாளர்களை பார்த்த எதிர்க்கட்சி தலைவர் போல தன் இடத்திலேயே பதுங்கினார். மீனாட்சி மாமி கவரோடு வந்து " அச்சுவுக்கு கவர்ன்மெண்டுலேர்ந்து லோன் வாங்கறது சம்பந்தமா கேட்டுருந்தேன் , அத தான்பரிமளா வந்து குடுத்துட்டு போனா, அச்சு இந்தா, அவ ரொம்ப நல்லவ தெரியுமோ ?" மாமாவுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ஓஹோ அவ தம்பிக்கு ஹெல்ப் பண்ண உடனே அவ நல்லவ ஆயிட்டா, நமக்குத்தான் நேரம் சரியில்ல போலிருக்கு....அச்சு பையனோடு கிளம்பி விட்டான்....இரண்டு நாட்கள் ஓடி விட்டது...அன்று வெள்ளிக்கிழமை மதியான டிபன் முடிந்து சற்று தலை சாய்த்திருப்பார், மாமியின் அபாயக்குரல் " "ஐயோ ஐயோ, இந்த எழவையெல்லாம் யாரு எனக்கு அனுப்புறா? சைபர் கிரைம்ல ரிப்போர்ட் பண்ணப்போறேன்...வர வர எதுவுமே சரியில்ல.....என்ன நெனைச்சுண்டிருக்கான்....அந்த நம்பரை கூப்பிட்டா , கால் போக மாட்டேங்குது.....இது யார் வேலைன்னு கண்டுபிடிக்கறேன், என் நம்பர் எப்படி கிடைச்சுது இந்த ப்ரம்மஹத்திகளுக்கு ?." குப்புசாமி மெதுவாய் ஓரக்கண்ணால் பார்த்தார்...மாமி போனில்...ஜிகினாஸ்ரீ சிரித்துக்கொண்டிருந்தாள், அவள் உதட்டு முத்திரையோடு....
( பின் குறிப்பு :அவர் பின்னால் போனை வைத்தபோது மாமா நம்பருக்கு அடுத்த நம்பரான மாமி நம்பரை அடித்து வைத்து விட்டதை அச்சு அவரிடம் சொல்லாமல் விட்டது - மாமாவுக்கு தெரியாது)
(பின் பின் குறிப்பு : போட்டோவுக்கு கத்தின மாமி 250 ருபாய் ரீசார்ஜுக்கு கத்தவில்லை, கமுக்கமாக இருந்து விட்டாள்)
Leave a comment
Upload