கலாய்த்தல் என்பது பேச்சு வழக்கில் வந்த சொல்.
கலாய்த்தல் என்றால் ஒருவரைக் கிண்டல் அல்லது கேலி செய்து சிரிக்க வைக்கும் ஒரு செயலாகும்.
"கலாய்ச்சு விடு", "செம கலாய்!!" என்று இந்நாட்களில் சொல்லப்படும் இச்சொல் ஆனது பொருளற்ற வேற்று பழிச்சொல் அல்ல.
கலாய் - என்பதொரு பழந்தமிழ்ச் சொல்லாகும்… ஆனால் இன்றைக்குப் பொருள் திரித்துப் புழங்கப்படுகிறது. ஆனால், அன்றைக்குக் கலாய்த்தலின் பொருள் கலகம் செய்தல், சினத்தல், வம்பு இழுத்தல், சினத்தோடு உரையாடல் போன்றவையாம்.
பண்டைய இலக்கியங்களில் “கலாய்த்தல்”:
சுந்தர மூர்த்தி நாயனார் அவர்கள் ஏழாந்திருமுறையில் கரையுங் கடலும் என்று துவங்கும் திருவாரூர் பதிகத்தின் எட்டாம் பாடலில் அடியார் அல்லாதவர்களை "காலாய்ப்பேன்” என்று ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார்.
"நெண்டிக்கொண் டேயுங் கலாய்ப்பேன்
நிச்சய மேஇது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
மெய்ப்பொரு ளன்றி யுணரேன்".
யான், மெய்ப்பொருளேயன்றி பொய்ப்பொருளைப் பொருளாக நினையேன் ; அதனால், அம்மெய்ப் பொருளை உணரமாட்டாத முருடர்க்கு முருடான சொற்களை யன்றிச் சொல்லமாட்டேன், வலியச் சென்றும் அவர்களோடு வாதிடுவேன், இஃது எனது துணிபும், தளர்வில்லாத குணமும் ஆகும், என்பது பொருளாகும்.
எனவே கலாய்த்தல் என்பதற்குக் கலகஞ் செய்தல், சினத்தல் எனப் பொருள் கொள்ளலாம்.
திருத்தக்க தேவர் இயற்றிய ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் கூட இது குறித்த ஒரு பாடல் உள்ளது.
"வெய்தாய்க் கலாய்த் தொலைப் பருகுவார் போற் கன்னியர்துவன்றினாரே.... " - சீவக சிந்தாமணி.
கலாய்= வம்பு இழுத்தல்; சினத்தோடு உரையாடல்!
போரில் வீரர்கள் கலாய்த்தனர்!
“கலாய்த்தல் என்பது ஒரு தூய தமிழ்ச்சொல். அதனுடைய உள் அர்த்தம் புரியாமலே நாம் அன்றாடம் இந்த சொல்லைப் பயன் படுத்தி வருகிறோம்!!”
Leave a comment
Upload