தொடர்கள்
தொடர்கள்
இந்த வார பறவை  - பனங்காடை  - 24 -   ப ஒப்பிலி

20250423162301105.jpg

பெரிய தலை, கருஞ்சாந்து நிறத்தில் அலகு, செம்பழுப்பும் நீலமும் கலந்த மார்பு, வெளிர் நீல வால்பகுதி இவைதான் இந்த பறவையின் அடையாளங்கள் என்கிறார் சலீம் அலி, பறவைகளின ஆராய்ச்சியாளர்களின் தந்தை. இந்த பறவைகள் பறக்கும் பொழுது அடர்ந்த மற்றும் வெளிர் நீல நிறத்தில் உள்ள சிறகுகள் மிகவும் அழகாக இருக்கும் என்கிறார் அவர்.

பொதுவாகவே தனித்து தொலைபேசி கம்பிகளின் மேல் அமர்ந்திருக்கும் இந்த பறவை. திறந்த விளைநிலங்களுக்கு அருகிலும் இவைகளை காணலாம். இமயமலை அடிவாரத்திலிருந்து இந்திய துணைக்கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த பறவையை காணலாம். அது தவிர பங்களாதேஷ், இலங்கை, மியான்மர், மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளிலும் காணப்படும் ஒரு பறவை இந்த பனங்காடை.

டெலிபோன் கம்பிகளில் அமர்ந்துகொண்டு புழு, பூச்சியோ, அல்லது ஓணான் போன்ற ஊர்வனங்களோ செல்வதை பார்த்தல் பறந்து சென்று அந்த இரையை பிடித்து உண்ணும் குணம் கொண்டவை இந்த காடை வகைகள்.

அதிக அளவில் பூச்சிகளை உண்பதால் இந்த காடைகள் விவசாயிகளுக்கு ஒரு முக்கிய நண்பனாக கருதப்படுகின்றன. அதிக சத்தத்துடன் பல விதமான குரல்களில் ஓலி எழுப்பும் இவை. இனப்பெருக்கத்திற்கு இணை தேடும் ஆண் பறவைகள் வானத்தில் வட்டமிட்டு, குட்டிக்கரணம் அடித்து, வில்லிலிருந்து எய்தப்பட்ட அம்பு போல மேலிருந்து கீழாக பாய்ந்து சாகசங்கள் பல செய்யும் என்கிறார் சலீம் அலி.

மார்ச் முதல் ஜூலை வாரியான காலகட்டமே இந்த பறவைகளின் இனப்பெருக்க காலம். சுள்ளிகள் மற்றும் குப்பையிலிருந்து எடுத்த இலைகள் ஆகியவற்றைக்கொண்டு தங்கள் கூடுகளை அதிக உயரமில்லா மர பொந்துகளில் கட்டும் இந்த காடை வகைகள். ஒரு நேரத்தில் நான்கு அல்லது ஐந்து முட்டைகளை ஈனும் பெண் காடைகள்.