தொடர்கள்
பொது
மன நிறைவு - கவிதாஇராஜகோபாலன்

20250429115348279.jpg

கிரிஜாவிற்கு தலைவலி மண்டையை உடைத்தது. அவள் சிநேகிதி மாலாவின் மகள் தீபாவிற்கு கல்யாணம். நாளை மறுநாள் ரிசப்ஷனிற்கு ப்ளவுஸ் தைக்க கொடுத்துவிட்டு, டெய்லரோடு ஒரே போராட்டம்.
கிரிஜா கட்ற ஸாரிக்கு பின்னாடி ஸ்டோரி இருக்கும்டி...
சிநேகிதிகள் நடுவே இவள் புடவைகள் ரொம்பப் பிரபலம். பொடிக்கட்டம், புளியங்கொட்டை கட்டம், பட்டாணி கட்டம், மூக்குப் பொடி கலர்ல, குங்குமப்பூ கலர்ல...
யார்கிட்டயும் இல்லாத புடவைக்கு ஜர்தோஸி ப்ளவுஸ் போட்டு அந்த இடத்துல தனியா தெரிவா கிரிஜா. பின்ரெஸ்ட்ட பின்னி எடுத்து டிஸைன் தேடி அனுப்பி வைப்பா. மார்கழி கச்சேரிக்கு ஆண்டாள் டிஸைன் ப்வுஸ்னு எல்லாமே பக்காவாயிருக்கும்.
இப்ப போடப்போற புடவையும் ஜூட் ஸில்க் காட்டன்.. ஒருமாதிரி லைட் க்ரீம்ல கறுப்பு ஸ்ரைப்ஸ், வேல்தாரி டிஸைன்... அதே ப்வுஸ் வேண்டாம்னு கறுப்புல புடவ கலர்ல த்ரெட் வொர்க் அப்புறம் பாட்ச் வொர்க்னு தனியா தெரியறா மாதிரி ஒரு வாரம் முன்னாடியே குடுத்தாச்சு.
இன்னும் வந்தபாடில்ல..
' வொர்க் போடறவரு லீவு மேடம்'
' கட்டிங் மாஸ்டருக்கு ஜுரம்'
' பொண்ண காலேஜ் சேர்க்க அலஞ்சுகிட்டுயிருக்கேன் மேடம்... டி.ஜீ. வைஷ்ணவா நல்ல காலேஜுங்களா'
ப்ளவுஸுக்கு போன் பண்ணி காரியர் கவுன்சலர் ஆனது தான் மிச்சம்.
ஒரு புடவையை தீர்மானித்து விட்டால் மாற்றிக் கட்ட மனசே வராது.
மறுநாள் முழுக்க பிளக்கும் மண்டையும், தொங்கிய முகமுமாக அலைந்தாள்.
சிந்துவிற்கு அம்மாவை பார்க்க பாவமாய் இருந்தது. ' அம்மா, வாயேன், மாடவீதிக்கு போலாம், சும்மா..' கிரிஜாவும் கிளம்பிவிட்டாள்.
தெருக்கடைகளை வேடிக்கை பார்ப்பதில் அலாதி ப்ரியம் இருவருக்கும்.
மாங்காய் துண்டை கடித்துக் கொண்டே மெல்ல நடந்தனர்.
சட்டென்று மினிஹாலில் போட்டிருந்த எக்ஸிபினுக்குள் சிந்து கிரிஜாவை அழைத்து சென்றாள். கடைசியாய் கண்களில் நம்பிக்கையோடு அந்த சின்னப் பெண், 15,16 வயதிருக்கும்.
அருகில் அவள் ஜாடையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்.
' மேடம், இது எங்க பாப்பா செஞ்ச மணிமாலைங்க, சும்மா பாருங்க'..
உயர் ரக மணிகள் அழகாய் பதக்கத்துடன் கோர்க்கப்பட்டு...
சிந்து அந்த கறுப்பு நிற செட்டை கையிலெடுத்து விட்டாள்.
' அம்மா, நீ ஏன் ஸிம்பிள் ப்ளவுஸுக்கு இப்படி செட்ஸ் போடக் கூடாது'
இரண்டு நாட்களாய் தொங்கிய முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப்.
மாந்துளிர் பச்சை, வைன் கலர், ரோஸ்மில்க் பிங்க் என்று பத்துக்கும் மேல் எடுத்துக் கொண்டாள்.
அம்மாவிற்கும் பெண்ணிற்கும் சந்தோஷம் தாங்கவில்லை. 'அனீஸ் க்ரியேஷன்ஸ்' குட்டி கார்டை அவள் கையில் தந்தனர்.
பாரீஸ் கார்னர் போயி தானே வாங்கிட்டு வருவாங்க, நைட்டு கண்ணு முழிச்சு டிஸைன் பண்ணி கோர்ப்பாங்க' தொண்டை அடைத்தது அந்த அம்மாவிற்கு.
' நான் சொந்தக் கால்ல நிக்கணும் மேடம், அதுக்காக என் கைத்திறன்ல இதெல்லாம் செய்யறேன்' தான் உட்கார்ந்திருந்த
வீல்சேரின் பக்கவாட்டிலிருந்து கேரிபேக்கை எடுத்து எல்லாவற்றையும் போட்டுக் கையில் கொடுத்தாள் அனிதா.
கிரிஜாவிற்கு வார்த்தையே வரவில்லை. மனசார வாழ்த்திவிட்டு இன்னும் கொஞ்சம் விசிட்டிங் கார்டுகளை வாங்கிக் கொண்டாள்.
ரிசப்ஷனில்சினேகிதிகள் எல்லோரிடமும் குடுக்க வேண்டும்..
ரிசப்ஷனுக்கு அந்த கறுப்பு செட்டை போட்டுக் கிளம்பும் போது ஏதோ ஒருவித மனநிறைவு.
' என்னம்மா, உன் செட்பத்தி இன்ஸ்டால ஸ்டோரி போட்டுரலாமா?'... சிந்து கேட்டதும் இருவரும் சிரித்து விட்டனர்.