பக்கிங்காம் அரண்மனையின் புதிய வரவு
லண்டன் பத்திரிக்கைகளில் இந்த செய்தியை படித்தவுடன், கேட் மற்றும் வில்லியம் நான்காவது முறை பெற்றோர்களாக போகிறார்கள் என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் அவர்களது செல்லப்பிராணியான "ஒர்லா" நான்கு குட்டிகளை ஈன்றதே அந்த செய்தி என்பதை, பின்பு அறிய வந்தேன். அரண்மனையின் முக்கியமான நபரான ஒர்லாவை பற்றிய வரலாற்றை அறிவது முழுமுதற் கடமையல்லவா!
பிளாக் காக்கர் ஸ்பானியல் (Black Cocker Spaniel) என்னும் நாய் வகையை சேர்ந்தவர் "ஒர்லா". நாய் என்று அழைப்பதை மரியாதை குறைவாக யாரும் எண்ண வேண்டாம். இருப்பினும், ஒரு இனத்தை பற்றி எழுதும்போது அவ்வாறு குறிப்பிடுவது அவசியமாகிறது. (ப்ளூ கிராஸ் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் என்னை பொறுத்தருள வேண்டும்). இந்த வகை நாய் மிகச் சிறந்த அறிவாளி, மிகுந்த அன்போடும், நட்போடும் பழகும் தன்மை வாய்ந்தது. விளையாட்டில் நாட்டம் கொண்டவராகவும், மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்படும் வல்லமை பெற்றவர்.
ஒர்லா என்னும் பெயர் அயர்லாந்திலிருந்து வந்தது. "தங்க இளவரசி" (Golden Princess) என்பதே இவரது பெயர் காரணமாகும்.
ஒர்லா, கேட் அவர்களின் அண்ணன் ஜேம்ஸ் மிடில்டன், தனது தங்கைக்கு அளித்த பரிசாகும். 2020 ஆம் ஆண்டு அரண்மனைக்கு வந்த ஒர்லா அனைவரின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். கேட் மற்றும் வில்லியம் வளர்த்து வந்த லுப்பா அந்த ஆண்டில் இறந்த பொழுது, ஒர்லாவின் துணை அவர்களுக்கு அந்த துக்கத்திலிருந்து மீள்வதற்கு உதவியாக அமைந்தது என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள். இப்பொழுது இவர் நான்கு குட்டிகளை ஈன்றது தனக்கு மிகுந்த மஃகிழ்ச்சி அளிப்பதாக கேட் மற்றும் வில்லியம் அறிவித்துள்ளனர். இவரது குழந்தைகளான ஜார்ஜ், சார்லெட் மற்றும் லூயிஸ் இந்த வரைவின் மூலம் மிகுந்த உற்சாகம், மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளனர்.
ராஜா வீட்டு நாய் அதுவும் லண்டன் அரண்மனையின் செல்ல பிராணி என்றால் சும்மாவா??
Leave a comment
Upload