தொடர்கள்
கவர் ஸ்டோரி
அவரும் நானும் “ புத்தகம் பிறந்த கதை - மூத்த பத்திரிகையாளர் லோகநாயகி

20250625161446567.jpeg

இயல்பில் சற்று கூச்சமான சுபாவம் கொண்டவர் துர்கா ஸ்டாலின். அதனாலேயே மீடியா வெளிச்சத்துக்கு அவர் அதிகம் வருவதில்லை. இந்த கூச்ச சுபாவத்துக்குக் காரணமும் கூட, சிறு வயதிலேயே அவர் தன்னைப் பெற்ற தாயை இழந்து விட்டதால், அவரை அடக்க ஒடுக்கமாக கலாச்சார பண்புகளோடு வளர்க்க நினைத்த அவரது பாட்டியின் வளர்ப்பு தான்.

அவரிடம் கூச்சம் இருக்குமே தவிர, தானொரு அரசியல் குடும்பத்தை சேர்ந்த பெண் என்ற பந்தாவோ, ஈகோவோ இல்லாதவர் துர்கா..

இந்த 'அவரும் நானும்' கூட முதன்முதலில் ஒரு தொடராக குமுதம் சிநேகிதியில் வந்ததே நான் மிகவும் கேட்டுக் கொண்டதால் தான்.

20250625161646284.jpeg

ஒரு விழாவில் துர்கா அவர்களை 2009 ல் நான் சந்தித்தபோது, இப்படியொரு தொடர் எழுதுவது பற்றி கேட்டேன். அப்போது மு.க .ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்தார். நான் சொன்னதுமே,

"எங்க வீட்டுக்காரங்க பத்தி தான் எல்லாமே எல்லோருக்கும் நல்லாத் தெரியுமே.. நிறைய பத்திரிகைகள்ல அப்பப்போ இவங்களோட பேட்டிக் கட்டுரைகள் வந்துட்டே தானே இருக்கு. அதனால் புதுசா சொல்ல என்ன இருக்கு?" என்று சொல்லி விட்டார்.

"நான் ஆசிரியராக இருப்பது ஒரு பெண்கள் பத்திரிகை. அதனால் ஒரு மனைவியாக உங்கள் கண்ணோட்டத்தில் உங்கள் கணவர் பற்றி நீங்கள் சொல்லுங்கள்..! அதில் உங்கள் திருமணம், கணவர், புகுந்த வீட்டுக் குடும்பம், குழந்தைகள் என்று சொல்லுங்கள்.." என்று கேட்டேன்.

20250625161744827.jpeg

நான் கேட்கும்போது எனக்கு ஒரு வருடம் போல இந்தத் தொடரை கொண்டு செல்லலாம் என்று ஒரு ஐடியா இருந்தது. அதாவது குமுதம் சிநேகிதி இரண்டு வாரத்துக்கு ஒரு இதழ் என்பதால் மொத்தம் 24 அத்தியாயங்கள் இந்தத் தொடரை கொண்டு செல்லலாம் என்று நினைத்தேன். அதையும் அவரிடம் சொன்னேன்.

"ஐயோ அவ்வளவு பெருசா எல்லாம் வராதுங்க.. ரெண்டு வாரம் போல வந்தாலே பெருசு..!" என்று சொன்னார் துர்கா ஸ்டாலின்.

"சரிங்க.. நாம் முதல்ல உட்கார்ந்து எழுதுவோம்.. அப்புறம் எவ்வளவு வருதுன்னு பார்க்கலாம்.." என்று அவருக்கு உற்சாகமூட்டினேன்.

அப்படி ஆரம்பித்த அந்தத் தொடர்தான் வாசகர்களின் பெரும் ஆதரவோடு தொடர்ந்து 5 வருடங்கள் வெளிவந்தது.

"ரெண்டு மூணு வாரம் தான் வரும்னு நினைச்சேன். இவ்வளவு விஷயங்கள் இப்போ பேசியிருக்கோம்!" என்று அவ்வப்போது ஆச்சர்யத்துக்கு உள்ளாவார்..

பேசப் பேச உற்சாகம் வந்தது துர்கா ஸ்டாலினுக்கு. அது பிரசுரமாகி வெளி வரும்போது எழுந்த பிரமாண்ட வாசக வரவேற்பு அவர் அதுவரை காணாதது.

"போன புத்தகத்தில் படிச்சுட்டேன். அடுத்து என்ன எழுதப் போறே.?" என்று அவருடைய மாமியார் தயாளு அம்மாள் அப்போது ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து விட்டு சுவாரசியம் தாங்காமல் கேட்டுக் கொண்டிருப்பார்.

20250625162001899.jpeg

நாங்கள் வாரத்தில் ஒரு நாள் சந்தித்துப் பேசுவது என்று திட்டம் போட்டுக் கொண்டு அவர்களது ஆழ்வார்பேட்டை வீட்டில் பார்த்து பேசிக் கொண்டிருப்போம். மணிக்கணக்கில் நீளும் அந்தப் பேச்சு.

பேசும்போது அவர் உணர்வுகள் எங்கேயெல்லாம் அவரை இழுத்துக் கொண்டு போகிறதோ எல்லாவற்றையும் சொல்வார்.

இப்போதைய காலகட்டத்தை தொட்டு பேசிக் கொண்டிருப்பவர், திடீரென்று நினைத்து சிறுவயது கதையை தொட்டு ஒரு சுவாரசிய சம்பவம் சொல்வார்.

மொத்தமாக குறித்து வைத்துக் கொண்டு நான் தேவையான அத்தியாயத்துக்கு தேவையானதை எடுத்து வரிசைப்படுத்திக் கொள்வேன்.

அதேபோல் இன்னொரு விஷயத்தையும் அப்போதே தீர்மானித்துக் கொண்டேன்.

இவருடைய இந்த வெள்ளந்தி பேச்சுக்கு இவர் பேசும் அந்த மொழியையே உபயோகித்தால் இந்த வாழ்க்கைத் தொடர் மிகச் சிறப்பாக வரும் என்று தோன்றியது. அதனால் முதல் அத்தியாயத்திலேயே அவர் பேசுவது போன்ற மொழியை உபயோகிக்க ஆரம்பித்தேன்.

20250625162109533.jpeg

"சூப்பர்ங்க.. துர்கா அண்ணியே நேர்ல வந்து நின்னு பேசற மாதிரியே இருக்குங்க.." என்று அவரைத் தெரிந்த கட்சிக்காரர்கள், அவரை தெரியாத வாசகர்கள் என்று பலரும் அந்த நடையை சிலாகித்தார்கள்.

'தளபதியும் நானும்' என்ற தலைப்பில் பிரசுரமான அந்தத் தொடர், பிறகு அவர் கட்சியின் செயல் தலைவராக ஆனபிறகு நூலாக வெளிவந்தபோது,"அவரும் நானும்' என்ற பேரில் வெளியிட்டோம்.

சொல்லப்போனால் 90 களிலேயே துர்கா ஸ்டாலின் எனக்கு நன்கு பழக்கமாகி இருந்தார்.

ஆனந்த விகடனுக்காக நான் கலைஞர் 90 களில் அவ்வப்போது பேட்டி எடுக்கப்போகும் சமயங்களில், கோபாலபுரம் வீட்டு உள் ஹாலில் சில நேரங்களில் நான் காத்திருப்பேன்.

அப்படி நான் அமர்ந்திருக்கும் சமயங்களில் அந்த வீட்டு மருமகளாக அவர் தான் வந்து அழகாக புன்னகை செய்தபடி வரவேற்று பேசுவார்.

"காபி சாப்பிடுங்க" என்று உபசரிப்பார்.

அதே இடத்தில் தொடர்ந்து நாலைந்து முறைக்கும் மேல் பார்க்கும் சந்தர்ப்பங்கள் வந்தபோது, அருகே அமர்ந்து பேசும் அளவுக்கு கொஞ்சம் நட்பானார். அந்த சமயத்தில் தான் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்டாலின் பேட்டி' என்று ஸ்டாலின் மேயர் ஆவதற்கு முன் அவரது குடும்பம் சம்பந்தமாக நான் அந்தத் தம்பதியை ஒரு பேட்டி எடுத்தேன். விகடன் இணையாசிரியர் மதன் சார் ஐடியா அது.

அப்போதே "இந்தப் பேட்டியில் நான் எதுக்குங்க?" என்றுதான் அந்த பேட்டியில் இருந்து விலகி நிற்கப் பார்த்தார் துர்கா ஸ்டாலின்.. ஆனால் அப்புறம் அந்தப் பேட்டி ஒரு கவர் ஸ்டோரியாக வந்து பயங்கர ரீச் ஆனது.அந்த பேட்டி மூலம்தான் ஸ்டாலின் அவர்களுக்கு கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்றே பலருக்கும் வெளியே தெரிந்தது. அந்த பேட்டி வெளி வந்தபின் இன்னும் சற்று நெருக்கமாக ஆனார் துர்கா ஸ்டாலின். எப்போதாவது விழாக்களில் சந்தித்தால் பிரியமாக பேசுவார்.

அதன்பின் நான் விகடனில் இருந்து குமுதம் நிறுவனத்துக்கு மாறி சிநேகிதி பத்திரிகையின் ஆசிரியராக ஆகி அந்த புது பத்திரிகையை முன்னேற்றும் கடுமையான பணி சூழலுக்கு போய்விட்டதால் பல வருடங்கள் இடையில் துர்கா அவர்களை சந்திக்கவில்லை. அப்படியான சூழலில் தான் ஒரு விழாவில் அவரைப் பார்த்துவிட்டு நான் ஒரு தொடர் எழுதலாம் என்று கேட்டுக் கொண்டேன்.

2010 ஏப்ரல் கடைசியில் எழுத ஆரம்பித்தோம்.

அதன் முதல் அத்தியாயத்திலேயே நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும்.

தயாளு அம்மாள் அவர்களின் அண்ணன் வீட்டு திருமணத்துக்காக திருவாரூர் வரை வந்த கோபாலபுரம் குடும்பத்தினர் (கலைஞர், ஸ்டாலின் தவிர) அப்படியே திருவெண்காடு வந்து துர்கா அவர்களை பெண் பார்த்துவிட்டு பெண் வீட்டார் தந்த பெண்ணின் ஜாதகத்தையும் வாங்கி கொண்டு சென்றார்கள் என்று அந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தேன்.

பிரசுரம் ஆவதற்கு முன் அலுவலகத்தில் அதை படித்துப் பார்த்த சீனியர் சிலர், " என்னது இது, பெண்ணின் ஜாதகம் வாங்கிப் போனார்கள் என்று வந்திருக்கிறது.

கலைஞரின் கோபாலபுரம் குடும்பம் பற்றி இப்படி எழுதியிருக்கிறீர்களே. இதனால் இந்தத் தொடரே இனி வராதபடி ஏதும் பிரச்னை ஆகிவிடப் போகிறது. அந்த வார்த்தைகளை நீக்கி விடுங்கள்" என்று என்னை எச்சரிக்க, நான் குழம்பிப் போனேன்.

உடனே துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு போன் செய்து "எங்கள் அலுவலகத்தில் இது போல சொல்கிறார்கள்.

என்ன செய்யட்டும்?" என்று கேட்க, "ஏங்க, அப்படித்தான் அன்னிக்கு நடந்தது. நடந்ததைத் தானே நான் சொல்ல முடியும்!" என்று வெள்ளந்தியாக சொன்னார் அவர். அதுதான் துர்கா ஸ்டாலின்.! அதுதான் அவரது இயல்பு.! அந்த வார்த்தைகள் அப்படியேதான் பிறகு அந்தத் தொடரில் வந்தது.

20250625162413948.jpeg

பொதுவாக சினிமா, அரசியல் குடும்பங்களில் பல விஷயங்களை வெளியே சொல்லாமல் மறைப்பார்கள், அல்லது 'இதை இப்படிச் சொல்லுங்கள்' என்று தங்கள் பேர் கெடாதபடி மாற்றிச் சொல்வார்கள். ஆனால், இந்தத் தொடரின் ஒரு பெரிய பலமே, துர்கா ஸ்டாலின் வெள்ளந்தியாக தன் வாழ்வில் நடந்ததை எல்லாம் மறைக்காமல் சொன்னதுதான். அந்த உண்மையும் நேர்மையும்தான் பலரது மனசைக் கவர்ந்து இந்தத் தொடர் வெற்றி பெற உதவியது என்று சொல்லலாம்.

ஸ்டாலின் நான் ஒவ்வொரு அத்தியாயம் எழுதினதுமே படிக்க அனுப்புவேன்.

அவருக்கு தன் மனைவி அந்த அத்தியாயத்தில் எதைப் பற்றி பேசுகிறார் என்று எதுவும் தெரியாது. அவரே அந்த அத்தியாயத்தைப் படிக்கும் போது தான் என்ன விஷயம் பற்றி சொல்லியிருக்கிறார் என்று தெரியும்.

ஸ்டாலின் நான் எழுதியதில் எது ஒன்றையும் ஒரு வரி கூட மாற்றியதில்லை. சொல்லப்போனால் இந்த தொடர் நிறைவுற்றபோது ஸ்டாலின் சொன்ன ஒரு விஷயம் என் மனசை நெகிழ்ச்சியுறச் செய்தது..

"உண்மையில் என் மனைவியின் இந்தத் தொடர் எனக்கு ஒரு கணவராக மிகவும் மகிழ்ச்சியாக, அவர் மனதை புரிந்து கொள்ள உதவியாக இருந்தது.

கணவர் மனைவியாக இருந்தாலும்கூட, வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் உணர்வுகளையும் வெளியே சொல்லிவிட மாட்டோம்..

என் மனைவி என்னை பற்றி என்ன நினைத்திருந்தார், குறிப்பிட்ட ஒருசில தருணங்களில் அவர் மனதில் என்ன உணர்வு இருந்தது என்று இந்தத் தொடரைப் படிக்கும் போது தான் நானே புதிதாக தெரிந்து கொண்டேன்.!'' என்று மனந்திறந்து சொன்னார் ஸ்டாலின்.

ஸ்டாலினிடம் பேசி குடும்பம் பற்றிய அவருடைய உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு, அவருடைய வாழ்க்கை சரிதையை 'அவரும் நானும்' நூலின் முதல் பாகத்தின் ஒரு பகுதியாக நான் எழுதியிருந்தேன்.. அதைப் படித்த துர்கா ஸ்டாலின், "இவங்களோட மன உணர்வுகளை நான் தெரிஞ்சுக்க நூலின் இந்தப் பகுதி எனக்கு உதவியா இருந்தது' என்று அவரும் மனந்திறந்து சொல்லியிருக்கிறார்.

20250625162547434.jpeg

அந்த வகையில் இந்த இரண்டு பாகம் தொடரையும் உருவாக்கிய எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

முதல் பாகம் தொடர் வெளியானபோது, இந்த நூல் பற்றி மிகவும் ஆச்சர்யப்பட்டு பேசியவர் உதயநிதி ஸ்டாலின் தான். "எங்க அம்மாவுக்குள் இது போலவொரு திறமை இருக்குன்னு எனக்கெல்லாம் தெரியாது. ரொம்ப ஆச்சர்யப்படுத்திட்டாங்க. சூப்பரா பண்ணியிருக்காங்க.!" என்று மகிழ்ச்சியோடு பேசினார்.

மருமகள் கிருத்திகாவுக்கு தனது அத்தை பற்றி ரொம்பப் பெருமையும் மரியாதையும் இருக்கிறது. "அவங்களுக்கு பயங்கர ஞாபக சக்தி!" என்று எப்போதும் சிலாகிப்பார் அவர். "அம்மா எந்தவொரு விஷயத்தைக் கையில் எடுத்துக்கிட்டாலும் அதை முடிக்காம கீழே வைக்க மாட்டாங்க.. அதே நினைப்பா இருந்து முடிச்சுடுவாங்க!" என்று தன அம்மாவைப் பற்றி எப்போதும் பாசம் பீறிட சொல்வார் மகள் செந்தாமரை.

இரண்டாம் பாகம் நூலில் ஒரு சிறப்பு என்னவென்றால், துர்கா ஸ்டாலின் நான்கு பேரக்குழந்தைகளுமே இதில் தங்கள் தாத்தா பாட்டி பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

2010ல் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்து இந்த பதினைந்து வருடங்களில் இந்த தம்பதியிடம் நெருங்கிப் பழகின வகையில் சில விஷயங்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தன் உயிரைவிட தன் கணவரை பெரிதும் மதிக்கும் ஒரு மனைவி துர்கா ஸ்டாலின். ஆச்சர்யாமாகத்தான் இருக்கும், ஆனால் உண்மை. இவர் தன் கணவருக்குத் தெரியாமல் எதையும் இதுவரை மறைத்ததில்லை.

சின்ன விஷயமாக இருந்தாலும் கூட கணவரிடம் அதை சொல்லாவிட்டால் இவருக்கு தூக்கமே வராது. மனைவி மேல் மரியாதை கொண்ட ஒரு கணவராக இன்னொருபுறம் ஸ்டாலின் அசத்துகிறார். உதாரணமாக ஒரு விஷயம்,

90 களின் ஆரம்பங்களில் ஸ்டாலின் குறிஞ்சி மலர், சூர்யா உட்பட்ட டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். மேலும் வாய்ப்புகள் வர, இன்னும் நடிக்கும் ஆசையும் அவருக்கு இருந்தது.

20250625162651346.jpeg

தனக்கு மிகவும் விருப்பப்பட்ட நடிப்பை, மனைவிக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகவே ஸ்டாலின் கைவிட்டார்.

"குடும்பத்தில் ஒருத்தருக்கொருத்தர் விட்டுத் தரணும். மனைவி நடிப்பு வேணாம்னு சொன்னாங்க. அதனால் நான் அதை விட்டுட்டேன். அந்த என் அன்பை மனைவியும் புரிஞ்சுக்கிட்டதால் வாழ்க்கையில் எங்க இருவரின் பிணைப்பு இன்னும் அதிகமாச்சு.இதைவிட வேறென்ன வேணும்?" என்று எனக்குத் தந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

ஒரு பத்திரிகையாளராக அறிமுகமானாலும், ஒரு சகோதரியாகவே என்மேல் அன்பு வைத்திருப்பதாக அடிக்கடி சொல்வார் துர்கா ஸ்டாலின் மேடம். அதை நான் மனப்பூர்வமாக பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்..