தொடர்கள்
கதை
அஞ்சாதே அஞ்சனா - வி பிரபாவதி

20250729230826820.jpeg

அந்தக் காலை நேரம் மிகவும் அழகாக இருந்தது. சந்திரன் மெல்ல பிரியா விடைபெற கதிரவன் சற்று நிதானித்து பூமியைப் பார்க்க வரும் நேரம். காலை ஐந்து மணிக்கு மொட்டை மாடியில் கையில் காஃபியுடன் நின்று கொண்டிருந்தாள் அஞ்சனா.

அடர்ந்த ஆரஞ்சும், இளம் சிவப்பும் மஞ்சளுமாய் வானத்தின் அழகை, வழிவிடும் மேகக்கூட்டங்களை ரசித்து காபியை ருசித்துக் கொண்டிருந்தாள்.அம்மாவின் குரல் கேட்டு இறங்கி வந்தாள்.

"இன்னிக்கு என்ன வீட்லயா? ஆபீஸ்லயா உத்தியோகம்?"

"இன்னிக்கு ஆபீஸ் போகனும்மா, லஞ்ச் கட்ட வேண்டாம். ஆனந்த் வரேன்னு சொல்லியிருக்கார். வெளில போய் சாப்பிட்டுக்கறேன். காலைல டிபனுக்கு கொஞ்சம் மிளகுப் பொங்கல் பண்ணிடு. 'தொண்டைல கீச், கீச்' ம்மா" என்றாள்.

இவர்களுக்கு பென்ஷன் இல்லை, சொந்த வீடு இல்லை என்பதால் தட்டிப்போய்க் கொண்டிருக்கிறது அவளது திருமணம்.

இவர்களை இலவச இணைப்பு, ஓல்டு ஃபர்னிச்சர், அட்டாச்மென்ட்ஸ் என்றெல்லாம் சொல்லி பெண்பார்க்க வருபவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். இந்த வரன் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. பெண்ணைப் பிடித்துள்ளது. படிப்பும், பண்பும் அழகும் நிறைந்தவளாயிற்றே அஞ்சனா.

இவள் எதையாவது பேசி காரியம் கெட்டு விடப்போகிறது என்ற பயம் சாவித்திரிக்கு.

"எங்களைப் பாத்துக்கணும், சம்பளத்த தந்துடுவேன் அப்படியெல்லாம் சொல்லாதம்மா. மொதல்ல கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும். ஒன்னோட வாழ்க்கையை நல்லா வாழப்பாரு. கொஞ்சம் வருஷங்கள் போனால் எல்லாம் சரியாகும்" என்று அப்பா ரவீந்திரனும் சொல்லியிருந்தார்.

இரண்டு மணி இருக்கும். அஞ்சனாவிற்கு ஒரே பசி. ஆனந்த் வருவதற்கு தாமதமானது. இரண்டரைக்கு டேபிள் முன் அமர்ந்து ஆர்டர் செய்து விட்டார்கள்.திருமணம் குறித்து, தேனிலவு குறித்து, அவரவர் வேலை குறித்து பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள்.

"அஞ்சனா சொல்லிவிடு, கேட்டுவிடு" என்று மனசு கொஞ்சம் கொஞ்சமாய் வாயில் வந்து அமர்ந்து அதிகாரம் செய்ய ஆரம்பித்தது. சற்று பயமாக இருந்தாலும் மெல்ல கொஞ்சம் உள் மூச்சு வாங்கிக் கொண்டு, கொஞ்சம் தண்ணீர் குடித்து, ஒரு ஐந்து விரல்களுக்குள் மற்றொரு ஐந்து விரல்களைத் திணித்து எச்சில் விழுங்கி ஆரம்பித்தாள்.

"வந்து ஒங்கக்கிட்ட ஒன்னு சொல்லனும்" பீடிகை ஜவ்வாக இழுப்பதற்குள்,

"பை த பை அஞ்சும்மா ஒங்கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்னு நெனச்சேன். கல்யாணத்துக்கப்புறம் ஒங்கம்மா அப்பாவை என்ன பண்ணப் போற? எப்பிடிப் பாத்துக்கப் போற? எனி ஐடியா?" கேட்டான் ஆனந்த்.

"அதைப்பத்தித் தான் ஒங்ககிட்டப் பேசணும். அவங்களுக்கு எல்லாமே நான்தான். அப்பா வேலைக்கு போறதுனால (பிரைவேட், 15000 சம்பளம்) வீட்டு வாடகை, மெடிக்கல் எல்லாத்துக்கும் ஹெல்ப்" ஒருவழியாய் அரையும் குறையுமாய் சொல்லி முடித்தாள்.

"நோ நோ ஒன்னோட பேர்ல நாங்க இருக்கிற ஏரியாவிலேயே ஒரு பிளாஃட் வாங்கிடலாம். லோன் நீ பாத்துக்கோ. அவங்க ரெண்டு பேரும் அங்க இருக்கட்டும். அவங்க மெடிக்கல் செலவெல்லாம் நான் பாத்துக்கறேன்."

"மாமா வேலைக்கு முடிந்தவரை போகட்டும். நீ அடிக்கடி போய் அவங்கள பாத்துக்கோ. என்னோட அம்மா, அப்பா ரொம்ப நல்ல டைப். எதுவும் மாறுவாங்களான்னு தெரியாது. நீ எதையும் பெரிசா எடுத்துக்காத. நம்ம வாழ்க்கையை நாம் பாத்துக்கலாம்" என்றான் ஆனந்த்.

"ஆகாயம் வரை ஆனந்த உயர்ந்து தெரிந்தான். மெல்ல பத்து விரல்களைப் பிரித்து இருபது விரல்களாக்கினாள்.

"கிளம்பலாமா, நான் உன்னை ஒங்க வீட்டுல விட்டுட்டு அப்படியே அத்தை கையால ஒரு காஃபிக் குடிச்சிட்டு கிளம்பறேன்" என்றான்.

"சரிங்க, போகலாம்" என்றாள்.

வீட்டுக்கு வந்தார்கள்.

காஃபி குடித்துக் கொண்டே அப்பா அம்மாவிடம் பொதுவாக பேசிவிட்டு கிளம்பினான்.

வாசலில் வழியனுப்பச் சென்றவள் "அத்தை மாமாவைக் கேட்டதாச் சொல்லுங்க" என்றாள் .

"நினைப்பது நிறைவேறும், நீ இருந்தால் என்னோடு. நடப்பது நலமாகும் நானிருந்தால் உன்னோடு" என்று பாடிக் கொண்டே வந்த மகளைப் பார்த்த சாவித்திரிக்கு எல்லாம்புரிந்து விட்டது. சிரித்துக் கொண்டே தன் கணவன் இருந்த அறையை நோக்கி நடந்தாள்.