தொடர்கள்
அனுபவம்
காடறிதல்-10 ஆதிக்கிழவியும் ஆதிமொழியும்

ஆதிக்கிழவியும் ஆதிமொழியும்

இந்துமதி கணேஷ்

இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் போது அது ஏற்பாடுபட்டாவது தன்னை சீரமைத்துக் கொள்ளும். மனிதனால் அதற்கு ஆபத்து உருவானால் அது அவனை திருப்பித் தாக்கும். அப்போது இள மஞ்சள் நிறம் உள்ள டாஃபோடில் மலரை விட ஒரு மைக்கேல் ஏஞ்சலோவோ, ஒரு சேக்ஸ்பியரோ, ஒரு மொசார்ட்டோ இயற்கைக்கு முக்கியமல்ல.. ஏனெனில் இயற்கை அன்னைக்கு செல்ல குழந்தைகள் என்று எவருமில்லை"- ரோமன் கிரே...

அந்த புளியமரத்தினடியில் எங்களை அமரச் சொன்னார் தேக்கன். ஆங்காங்கே குடம் புளி காய்கள் விழுந்திருந்தன. அந்த இடம் சற்றே அகலமாகவும் குளுமையாகவும் இருந்தது. சின்னச் சின்ன பூச்சிகளும் எறும்புகளும் போய் கொண்டிருந்தன. அதை பார்த்ததும் உட்காரலாமா வேண்டாமா என்று சிலருக்கும் யோசனை வந்தது பயமில்லாமல் அமரலாம் என்று தேக்கன் உறுதியளித்த பிறகே அனைவரும் அமர்ந்தோம். "எவ்வளவு பெரிய நிழல் அந்த மரத்தின் நிழல் எத்தனை அழகு என்னவொரு சாந்தம்! எவ்வளவு பேரமைதி ! நிழலின் உள்ளே போய் நின்றவுடன் மரம் தன் குளிர்ச்சியை நெற்றியில் உடலில் தடவிவிடுகிறது. மரத்தின் நிழலைத்தவிர வேறேதும் இவ்வளவு வசீகரம் தருவதில்லை" என்ற எஸ். ராவின் வார்த்தைகளை அசைபோட்டபடி அமர்ந்திருந்தேன்.

"கிட்டதட்ட ஒரு மணி நேரமாக நாம் நடந்து கொண்டிருக்கிறோம், சில காட்டுயிர்களை பார்த்தோம் ஆனால் நாம் காட்டில் காலடி வைத்த கணத்திலிருந்தே அவைகள் நம்மை பார்த்து விட்டன" என்று தேக்கன் தொடங்கியதும் ஒரு ஆச்சர்யமும் மென் சிரிப்பும் எங்களிடம் பரவியது. மீண்டும் தொடர்ந்த தேக்கன், "இது வரை நாம் பேசி நாமே கேட்டோம். இனி காடு உங்களுடன் பேசட்டும், காடு பேசுவதை கேட்க அனைவரும் கண்களை மூடி, காதுகளை திறந்து வையுங்கள். இரண்டு நிமிடங்கள் அமைதி காப்போம். அந்த அமைதிக்கு பிறகு பேசலாம்" என்றதும் அனைவரும் தியான நிலையில் அமர்ந்தோம்.

குழந்தைகள் கூட சத்தமில்லாமல் கண்களை மூடிக் கொள்ள, இரண்டு நிமிடங்களில் பேச்சுக் குரல்களற்ற நிசப்தம். இயந்திரங்களின் இரைச்சலில்லை, எந்நேரமும் பேசிக் கொண்டே இருக்கும் தொலைபேசியின் சத்தங்கள் இல்லை, இயல்பாய் பழகிப்போன கைபேசி தொடுகைகள் இரண்டு நாட்களாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. சுற்றம் மறந்த ஒரு மோன நிலைக்கு மனம் தயாரானது. யோகா வகுப்புகளில் செயற்கையாக முயன்ற அக அமைதியை இயற்கை எளிதில் எங்களுக்கு வழங்கியது. இயற்கை எங்களுடன் பேசத் தொடங்கியது. மனதை மௌனமாக்க முடியுமா என்ன, அதுவும் கூடவே குழந்தை போல இயற்கையுடன் பேசத் தொடங்கியது.

சின்னாற்றின் சலசலப்பு சீரான ஸ்ருதியுடன் கேட்டுக்கொண்டிருந்தது. ஆற்றில் நீந்தி விளையாடும் மீன்கள் பேசினால் நமக்கு கேட்குமா ? அவை என்ன மொழியில் பேசக் கூடும். சில் வண்டுகளின் ரீங்காரம் கேட்கிறது, எங்கோ ஒரு மைனா ஓசை எழுப்பியது, ஒரு நீர்க் கோழி மளுக்கென்ற ஓசையுடன் நீரில் மூழ்கி ஒரு மீனை பிடித்துவிட்டு, நீர் திவலைகள் தெரித்து விழ ஓசையிட்டபடியே மீண்டும் நீரிலிருந்து பறந்து போயிருக்க வேண்டும். தூரத்து அருவியின் இரைச்சல் மிக மெல்லியதாய் ஓம்காரமாய் காதில் விழுகிறது. மென்மையாய் உடலை உவகையூட்டும் விதத்தில் இளம் தென்றல் வீசுகிறது, அந்த காற்றில் அசைந்தாடும் இலைகள் கூட மெலிதாய் பேசிக் கொள்ளுமோ ! வெயில் மர இடுக்குகளின் வழி நதியில் விழுகிறது, அதெப்படி வெயிலால் மட்டும் சத்தமின்றி விழமுடிகிறது ! எதிர் கரையில் இருந்த ஒரு அரசமரத்தில் குட்டி மந்திகள் ஓசை எழுப்பிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தன. எங்கள் அமைதியை பார்த்து முதிய மந்திகள் குட்டிகளை அதட்டுவதையும் அவைகளின் சத்தம் குறைவதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

நாங்கள் இந்த மௌனத்தில் என்ன உணர்ந்தோம் என்று கேட்டார் தேக்கன். ஒவ்வொருவரும் ஒன்றைச் சொன்னோம். ஒரு தோழமை சொன்னார், "உங்கள் மூதாதையருக்கு கொடுத்த காற்றையும் நீரையும் உங்களுக்கு தருகிறேன், அடுத்த தலைமுறைக்கும் தருவேன் தயவு செய்து என்னை அழிக்காதீர்" என்று காடு கூறியதாக சொன்ன போது நாங்கள் நெகிழ்வாக உணர்ந்தோம். அவ்வளவு நேரம் பேசிக் கடந்து அறிந்து கொண்ட விஷயங்களைவிட இந்த மௌனம் நிறைய கற்றுத் தந்ததாய் உணர்ந்தேன்.

அதிகம் ஆழமில்லாத ஆறு ஆசையை தூண்டியது எப்போது குளிக்கலாம் ஐயா என்ற கேள்விக்கு, இன்னும் சற்று தூரம் நடந்தால் நாம் ஒரு ஆதி கிழவியை பார்த்து விடலாம் அவளை பார்த்த பிறகு நாம் ஜோராய் குளிக்கலாம் என்றார். நாங்கள் ஆர்வமாய் அவரை பின்தொடர்ந்தோம். அந்த ஆதிகிழவி ஒரு மூதாய் மரமாக தான் இருக்குமென்று எனக்குத் தோன்றியது. போகும் வழியில் என் குழந்தைகளுடன் சிப்கோ இயக்கத்தை குறித்து பேசிக் கொண்டே போனோம். மரங்களை வெட்ட வருவோரை மரங்களை கட்டித் தழுவி எதிர்த்த ஒரு வன்முறையற்ற சூழலியல் போராட்டம் தான் சிப்கோ இயக்கம். இந்த இயக்கம் முக்கியமாக பெண்களால் வழிநடத்தப்பட்டது, காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் இயற்கையின் சமநிலையை நிலைநாட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. இதனால் பல பழங்குடி பெண்கள் உயிரிழந்தார்கள் எனினும் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதை பற்றி நாங்கள் பேசிக் கொண்டே நடந்ததை கேட்ட தேக்கன் சில வருடங்களுக்கு முன்பு ஜூலியா என்ற பெண் மரத்தை வெட்ட விடாமல் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் போராடினாள் என்றும் அவள் அந்த காடழிப்பை எதிர்த்து பல நாட்கள் மரத்திலேயே தங்கினாள் என்றும் வியப்பான ஒரு செய்தியை கூறினார்.

என் உணர்வுகள் பொய் சொல்லவில்லை, ஆதிகிழவி ஒரு மூதாய் மரம் தான். அவ்வளவு பழமையான அந்த மரத்தை கண்ட போது மேனி சிலிர்த்தது. மிக அகலமான பழமையான நீர் மருது மரமது. அதன் அடிப்பகுதியை பத்து பேர் சேர்ந்தாலும் கட்டி பிடிக்க முடியாதோ என்று எண்ணுமளவுக்கு அகலமாக இருந்தது. தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆத்துச்சாலை என்று நாங்கள் அழைக்கும் அந்த பிரியத்திற்குரிய சாலைகளில் நான் அதிகம் பார்த்தது இந்த மருத மரங்களை தான். ஆற்றின் போக்கை சரியாக வைத்திருக்க கூடியவை இந்த மருத மரங்கள் என்றார் தேக்கன்.

20250729121705632.jpeg

"எத்தனையாண்டு காலம் பழமையானது இந்த மரமென்று என்னால் கூற இயலாது ஆனால் இன்னும் சில நாட்களில் இந்த மரம் தன் வாழ்நாளை முடித்துக் கொள்ளும் என்பது மட்டும் தெரியும்" என்றார் தேக்கன். "ஐயோ!" என்று நாங்கள் கவலை முகம் காட்ட, அது இயற்கையின் விதியென்று சொன்னார் தேக்கன். "ஆம்! ஆலம் விதைகளை உண்ட பறவையொன்று இந்த மரத்தின் கிளைகளில் எச்சமிட்டுள்ளது, அந்த கிளையிலிருந்து ஒரு ஆலமரம் வளர தொடங்கிவிட்டது. ஆலமரம் இந்த மருத மரத்திலிருந்து தனக்கான ஊட்டத்தை எடுத்துக்கொண்டு வேகமாக வளர்ந்து வருகிறது. ஆலமரம் எப்போது மண்ணில் வேர்களை இறக்குகிறதோ அப்போது பெரிதாக வளர்ந்து இந்த மருத மரத்தை சாய்த்து விடும்" என்ற போது எங்கள் மனங்கள் பொலிவிழந்து போனது. "இதுவே இயற்கையின் நீதி, ஒன்றை அழித்தாலும் மற்றொன்றை உருவாக்கும் இயற்கை. ஆனால் யாரோ ஒருவர் இந்த ஆலமரத்தின் விழுதுகள் பூமி தொடமுடியாதபடி அதை வெட்டி விடுகிறார்கள், யாராக இருந்தாலும் இயற்கை அதற்கு தேவையானதை சரியான நேரத்தில் செய்து கொள்ளும் என்பது உறுதி. இப்போது இந்த மூதாட்டியுடன் நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்" என்றவுடன் சற்றே எங்கள் சோர்வை மறந்து நாங்கள் அனைவரும் அமர்ந்து அங்கே ஒரு குழுப்படம் எடுத்து கொண்டோம். அந்த மரத்தை அணைத்து அதற்கு ஒரு முத்தம் கொடுத்தாள் மகள், நானும் அந்த ஆதிகிழவிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்.

குளிக்க தோதான இடம் தேடி நடந்த போது, "ஐயா இந்த ஆறு எங்கிருந்து உருவாகி வருகிறது ? " என்று கேட்டார் கணவர். "ஆனைமலை காப்பு காடுகளில் உருவாகி சோலைக்காடுகள் வழி பயணித்து பல தாவரங்களுக்கு நீருற்றி விட்டு இங்கே பாம்பாற்றையும் தேனாற்றையும் சந்திக்கிறது. சமவெளியில் இந்த ஆறுகள் ஒன்று சேர்ந்து காவேரியில் கலக்கிறது" என்றார். எப்போது எந்த இடத்தில் ஆற்றில் இறங்கலாம் என்று ஆர்வமாய் இருந்தார்கள் குழந்தைகள். வேட்டை தடுப்புக் காவலர்கள் ஒரு இடத்தை காட்டவே அந்த இடத்தில் கரையில் எங்கள் சில உடமைகளை வைத்து விட்டு குளிக்க தயாரானோம். அதிக ஆழமில்லாத பரிசுத்தமான நன்னீர். "ஒரு ஆற்றில் உள்ள நன்னீர் உயிர்கள் இன்னொரு ஆற்றில் இருக்காது, அங்குள்ள தட்ப வெட்ப சூழல் சார்ந்து இயற்கை உயிரனங்களை படைக்கும். இந்த ஆற்றிலுள்ள மீன்கள் பலவும் ஆனைமலைக் காடுகளுக்கு உரித்தான ஓரிட வாழ்விகள். அதனால் தயவு செய்து சோப்பு, சாம்பு, எண்ணெய் போன்ற பொருட்களை கொண்டு இங்குள்ள நீரை மாசுபடுத்தி விடாதீர்கள்"என்றார் தேக்கன்.

"அப்படி எதையுமே நாங்கள் கொண்டு வரவில்லை ஐயா" என்றவுடன், "நல்லவேளை ஆறுகள் யானைகளின் தாய்மடி. யானைகள் ஆற்றில் குளிப்பதை பார்க்க வேண்டும் கூட்டமாய் சென்று ஆற்றை கலக்காமல் ஒவ்வொன்றாய் இறங்கி நீர் குடித்து விட்டு படுத்துப்புரளும். ஆற்றங்கரையோரம் படிந்திருக்கும் கருமணலை எடுத்து பூசும், யானைகள் குளிக்க தொடங்கியதும் கல்லொட்டி மீன்கள் பாறையடியில் பதுங்கும்" என்று அவர் பேசிக் கொண்டே போக, மகள் ஆற்றுக்குள் இறங்க தயாராகிவிட்டாள். "ஐயா நீங்க குளிக்க வரலியா ?" என்று கேட்டதற்கு, "இந்த ஆறு காடுகளில் இருந்து உற்பத்தியாகி வருகிறது, அங்கே காட்டுக்குள் மழை பெய்தால், இங்கே வெள்ளம் உருவாகி விடும். ஆற்றில் நீர் வருவதை அவதானிக்க வேண்டும். வெளியே தெரியும் கூழாங்கற்கள் நீரில் மூழ்கினால், காய்ந்த சருகுகள் சுழன்று சுழன்று நீரில் மிதந்தால், ஆற்றின் போக்கில் கரையோர தாவரங்கள் சாய்ந்திருந்தால் உடனே குளிப்பவர்கள் கரையேற வேண்டும், குழந்தைகளும் குளிப்பதால் நான் கரையில் அமர்ந்து நீரை அவதானிக்கிறேன்" என்றார், அவரின் தாயுள்ளம் கண்டு நெகிழ்ந்தது மனம்.

சின்னாற்றில் அதிகம் ஆழமில்லாமல் இருந்தாலும் நல்ல இழுவை இருந்தது. நீர் அதீத குளிர்ச்சியில்லாமல் குளிக்க சுகமாக இருந்தது. உள்ளங்கை நிறைய நீரையள்ளி அதில் வானத்தை பார்த்துவிட்டு அதை பருகிய போது அமிர்தமாய் இனித்தது இயற்கையின் சுவை. எந்த ஊரில் மழை பெய்தாலும் மனம் சொந்த ஊர் மழையை தான் தேடுகிறது என்ற கலாப்ரியாவின் கவிதைக்கு இணங்க சின்னாற்றில் மூழ்கி தாமிராபரணியில் எழுந்ததாய் உணர்ந்தேன். அப்போதே மணி ஒன்றை தாண்டிவிட்டது, பார்வை கோபுரத்தை பார்த்துவிட்டு சாப்பிட போகலாம் என்று அழைத்தார்கள். ஆற்றிலிருந்து கரையேற மனமேயில்லை ஒரு மணி நேரம் போனதும் தெரியவில்லை. எனினும் நேரமில்லாத காரணத்தால் கரையேறி அந்த காட்டின் ஓரிட வாழ்வியான நட்சத்திர ஆமைகளை காணச் சென்றோம்.

20250729121546810.jpeg

தொடர்ந்து பயணிப்போம் .....