சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்த கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது. லேசான மழையில், சின்ன இருட்டுப் படலத்தில்.. விடிந்தும் விடியாமலிருந்த அந்த காலைப் பொழுதில், ஸ்ரீதேவி அவசரமாக உள்ளே நுழைந்தாள். மணி நாலு என்றது. ஒன்பது மணிக்கு மேல் தான் முகூர்த்தம். இருந்தாலும் கல்யாணப் பெண்ணை அலங்கரிக்கும் வேலை இப்போது நிறைய நேரம் பிடிக்கிறது.
மணப்பெண் வைஷ்ணவியின் அம்மா சியாமளா அக்கா ஸ்ரீதேவியை வரவேற்று காபி உபசாரம் செய்து பிறகு பெண் ரூமுக்கு அழைத்துச் சென்றாள்.
அழகிய பூ அலங்காரங்களும் பளிச்சிடும் ஒளிவெள்ளமும், பட்டுப் புடவைகள் சரசரப்பும் மல்லிகையின் வாசமும், குதித்து ஓடும் குழந்தைகளின் கலகலப்பும், இனிய சிரிப்பலைகளோடு சிறிது நேரத்தில் மண்டபம் ரம்யமாக ஆகிவிட்டது.
வைஷ்ணவியின் அம்மா சியாமளா நகைகளும் தாலிக்கொடியும் வைத்திருந்த பெட்டியை எடுத்தாள். அதை திறக்க முடியவில்லை. பத்து நிமிஷப் போராட்டத்தில் அவளுக்கு பயம் வந்துவிட்டது. பக்கத்தில் செல்போனை நோண்டிக் கொண்டிருந்த தம்பியின் பெண் திவ்யாவிடம் " ஏடி குட்டி திவ்யா நீ அந்த பெட்டியை வைத்து விளையாடிட்டு இருந்தியா.. பாக்க அழகா இருக்கு அழகா இருக்குன்னு நீ சொல்லும்போதே எனக்கு சந்தேகம்.. ஏதாவது நம்பர மாத்தி பூட்டிட்டியா? ஞாபகப்படுத்தி சொல்லுடி " என்று கேட்டாள். பதட்டத்தில் அவளுக்கு வேர்த்தது..
"குழந்தைகிட்ட போய் இதெல்லாமா விளையாட குடுப்பீங்க.. ரொம்ப தான் செல்லம் " அண்ணன் மனைவி நொடித்தாள்.
" மணி ஆகிட்டே போறது யாராவது ஆள கூப்பிட்டு தான் திறக்கணும் " என்றாள் ஒரு நாத்தனார்.
" அது எப்படி... இத்தனை நகை இருக்குற பொட்டிய புது ஆளிடம் எப்படி தருவது? "
எல்லோரும் மாற்றி மாற்றிக் கேட்க அழுகை வந்தது, திவ்யாவிற்கு. பயத்த்தில் சிறுமி, தான் லாக் போட்ட நம்பரை மறந்து விட்டாள்.
ஷ்யாமளாவுக்கு பதட்டமும், பயமும் சேர்ந்து ஏசி ரூமிலும் வேர்க்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக உறவுகள் மேலும் சிலருக்கு விஷயம் தெரிந்து கச முச வென்று பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
பக்கத்து அறையில் ஸ்ரீ தேவி மும்முரமாக, வைஷ்ணவிக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்தாள். அழகான வயலட் நிற, பச்சை பார்டர் வைத்த பட்டுப் புடவையை அவளுக்கு கட்டி விட்டு, அழகு பார்த்தவுடன், தன் செல் போனில் ஓரிரு போட்டோ எடுத்துக் காட்ட, வைஷ்ணவி திருப்தியுடன் thank you அக்கா என்று புன்னகைத் தாள். ஆண்டாள் கொண்டையிட்டு, புடவைக்கு பொருத்தமாக கவரிங் நகை,நெற்றி சுட்டி, ஒட்டியாணம், வங்கி, ஹாரம் எல்லாம் மிளிர அழகு தேவதை போல் வைஷ்ணவி,தன்னை ரசித்து சிரித்து க் கொண்டாள்.
பக்கத்து அறையில் நடக்கும் அமளி இன்னும் அவள் காதுக்கு எட்டவில்லை.
ஷ்யாமளா கொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.. சம்பந்தியம்மா அந்த கால ஸ்டைல். நவீன மாமியார்கள் மாதிரி இல்லை. திருமாங்கல்யம் மற்றும் தாலி சரடு ரெண்டையும் தானே நல்ல நாள் பார்த்து ஆர்டர் கொடுத்து பாதிப் பணத்தையும் கொடுத்து விட்டாள். அந்த மாமி என்ன சொல்லுவளோ.. மறுபடியும் வேர்க்கிறது...
முஹூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டு இருக்கு. ஷ்யாமளாவின் கணவர் சுந்தர ராமனுக்கும் விஷயம் தெரிந்து, BP ஏற ஆரம்பித்து விட்டது.
திவ்யாவைத் திருப்பி உட்கார வைத்துக் கேட்க 2 முறை தவறாக lock code சொல்லி அது திறக்காமல் இன்னும் ஒரு சான்ஸ் மட்டும் பாக்கி. இல்லை என்றால் கடைக்கு எடுத்துக் கொண்டு ஓடணும்.. ஆனால் அதற்கு நேரம்.?.. பகவானே ஈஸ்வரா!
" மாமி, மாமி, என்று சுபத்ரா, மாப்பிள்ளைக்கு அக்கா, உள்ளே வந்தாள். ஷ்யாமளா இன்னும் பதட்டமாக, முகத்தை துடைக்க..
" என் பொண்ணுக்கு கொஞ்சம் ஹேர் ஸ்டைல் பண்ணி விடணும்.. நீங்க அந்த மேக் அப் லேடி கிட்ட சொல்ல முடியுமா " என்றாள்..
" அதுக்கென்ன.. பேஷா.. ஏடி குட்டி திவ்யா.. மாமியை, வைஷ்ணவி ரூமுக்கு கூட்டிண்டு போய், அவா பொண்ணுக்கு ஹேர் டிரஸ் பண்ணனும் னு, ஸ்ரீ தேவி ஆண்ட்டி கிட்ட சொல்லிட்டு ஓடி வா " என்றாள்..
திவ்யா, விட்டால் போதும் என்பது போல் ஓடி பக்கத்து ரூமுக்கு போனாள். ஸ்ரீ தேவியிடம் விஷயம் சொன்னவள், வைஷ்ணவியின் அலங்காரம் கண்டு அசந்து போய் நின்றாள். ஸ்ரீ தேவிக்கு ஏதோ போன் வர, திவ்யா மெதுவாக விஷயத்தை வைஷ்ணவிக்கு சொல்ல.. அவளுக்கும் பயம் தொற்றி கொள்ள.. பக்கத்து ரூமுக்கு ஓடினாள்
மகளுடன் போன் பேசிக் கொண்டு இருந்த ஸ்ரீ தேவி, " என்னமா.. WiFi code ஆ? நேத்து நைட் மாத்தினேன்.. உனக்கு கூட சொன்னேனே.. இந்த 2k kids க்கு எதுவும் நினைவு இருக்காது.. என்ன. ஆமாம் அது தான் 2k.. என் கல்யாண வருஷம்.. 2000 அதான் code " மற்ற படி airs@, அது, மாறலையே.. அப்படியே போட்டுக்கோ எனவும் திவ்யாவுக்கு பொறி தட்டி. கண்ணுக்குள் மின்னலடிக்க. "ஓ யா யா யா யுரேகா "என்று சந்தோஷக் கூச்சலுடன் ஷ்யாமளாவுக்கு சொல்ல ஓடினாள்!
Leave a comment
Upload