ஶ்ரீராமரின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதத்தில் அமைக்கப் பட்டிருக்கும் ஐந்து ராமர் கோயில்களையே பஞ்ச ராமர் ஸ்தலங்கள் எனக் குறிப்பிடுகின்றனர். ஶ்ரீராமபிரான் அருள்பாலித்து நமக்குக் காட்சி தரும் இந்தக் கோயில்கள் அனைத்தும் திருவாரூர் மாவட்டத்திலே அமைந்திருப்பது சிறப்பாகும். இந்த ஐந்து திருத்தலங்களையும் ஒரே நாளில் சென்று வழிபடுவதன் மூலம் புண்ணியமும், வேண்டிய வரங்களும் கிடைக்குமென்பது ஐதீகம்.
முடிகொண்டான் ராமர் கோயில், அதம்பார் கோதண்ட ராமர் கோயில், பருத்தியூர் ராமர் கோயில், தில்லைவிளாகம் வீர கோதண்டராமர் கோயில், வடுவூர் கோதண்டராமர் கோயில் ஆகிய ஐந்து கோயில்களே பஞ்ச ராமர் ஸ்தலங்களாகும். அயோத்திக்குச் செல்ல முடியவில்லையென நம்மில் வருந்துபவர்கள் இந்த பஞ்சராம திருத்தலங்களை ஒரே நாளில் தரிசித்து அந்த புண்ணியங்களையும் பெற முடியும்.
முடிகொண்டான் ராமர் கோயில்:
இக்கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் மயிலாடுதுறை செல்லும் சாலையில், மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டானில் உள்ளது. ஊரின் பெயருக்கு ஏற்றாற்போல் தலையில் மகுடத்துடன் காணப்படுகிறார் ராமர். இது பரத்வாஜ முனிவர் தவம் செய்த இடம். இலங்கைக்குச் செல்லும் வழியில், பரத்வாஜ முனிவர் அளித்த விருந்தை இலங்கையிலிருந்து திரும்பும் போது ஏற்பதாக வாக்கு கொடுத்து, அதன் படி மீண்டும் இந்தத் தலத்துக்கு ராமர் விருந்து ஏற்க வந்தார் என்கிறது ஸ்தல புராணம். விருந்தை முடித்த ராமர் பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்னதாகவே இந்தத் தலத்தில் பரத்வாஜ முனிவருக்கு மகுடத்துடன் காட்சியளித்ததால் இங்குள்ள கோதண்டராமன் முடிகொண்டான் ராமர் என்று அழைக்கப்படுகிறார்.
இத்திருத்தலத்தில் அனுமன் இல்லாமல் ராமர் மட்டும் தனித்து எழுந்தருளியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். ராமரின் வருகையை பரதரிடம் தெரிவிப்பதற்காக ஆஞ்சநேயர் சென்றுவிட்டதால் இங்கு மூலவராக ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். இத்தலத்து உற்சவமூர்த்தி ராமர் தனது உடலில் மூன்று வளைவுகளுடன், அதாவது முகம் ஒரு திசையில், இடுப்பு. மற்றொன்று மற்றும் மூன்றாவது வளைவில் கால் என்ற நிலையில் காட்சி அளிப்பது தனித்துவமானது. ஆஞ்சநேயருக்குத் தனியாக வெளியே ஒரு சந்நிதி உள்ளது. பரத்வாஜர் இராமனுக்கு முடிசூடியதைப் பார்க்காததால் ஆஞ்சநேயர் கோபித்து வெளியே நிற்கிறார் என்றும் சொல்லுகிறார்கள். இந்தக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் ஶ்ரீராம நவமி திருவிழாக்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கீர்த்தியும், புகழும் அடைவர். குறிப்பாக மேல்நாட்டுக் கல்வி படிக்க விரும்புவோர் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதால் அவர்களது பிரார்த்தனையும் நிறைவேறுகிறது. பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வழிபட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றனர். மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்குப் பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
அதம்பார் கோதண்ட ராமர் கோயில்:
இக்கோயில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அதம்பார் என்னும் ஊரில் அமைந்துள்ளது. சீதையிடம் இருந்து ராமனைப் பிரிக்க மாரீசன் பொன்மான் உருவில் தோற்றமளித்து வந்தான். அம்மானின் தோற்றத்தில் மயங்கிய சீதா அந்த மானைப் பிடித்துத் தரும்படி ராமனிடம் கூற அவரும் சீதையின் முகம் வாடி விடக் கூடாதென மானைப் பிடிக்கச் சென்றார். அது மான் கிடையாது மாரீசன் என்று தெரிந்தவுடன் ராமன் அம்பை எய்தினான். அந்த இடமே இந்த அதம்பார் தலம்.
இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில், ராமன் வில்லை எடுத்து மானை நோக்கி 'தம் ஹந்தும் கிருத நிச்சய : ஹதம் பார்' என்று கூறி அம்பை எய்ததாகவும், 'ஹதம் பார்' என்பதே பின்னர் திரிந்து அதம்பார் ஆனதாகவும் செய்தி உள்ளது. இடதுகையில் வில்லும், வலதுகையில் அம்பும் கொண்டு ராமர் நிற்கும் தோரணை நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும். வேறு எங்கும் இப்படியான வடிவில் நாம் ராமனைப் பார்க்க முடியாது. பொதுவாக ராம, சீதா, லட்சுமண விக்ரகங்கள் தனித்தனியாக ஒரு பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கும். இங்கு மூவர் உருவமும் ஒன்றாக ஒரே பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் சீதையும், லட்சுமணரும் இருக்க, ராமர் திருவடி கீழ் வாய் பொத்தி உத்தரவு கேட்கும் பணிவான தோற்றத்தில் ஆஞ்சநேயர். வேண்டிய வரங்களையும், சகல சௌபாக்கியங்களையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தருகின்ற ஸ்தலம். இங்கு புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் இராம நவமி திருவிழாக்கள் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது.
பருத்தியூர் ராமர் கோயில்:
இந்த கோயில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் பருத்தியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சூரியன் சிவனை எண்ணி தவம் இருந்த இடம், மற்றும் ராம லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர். இந்த ஊரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் இக்கோயிலைக் கட்டியுள்ளார். ராமர் தனது இடது கையால் வில்லை ஏந்தியபடி பிரமாண்டமாக நிற்கும் நிலையில் காணப்படுகிறார், வலது கையால் நீண்ட அம்பைப் பிடித்துள்ளார். இந்த கோவிலில் உள்ள ராமரின் சிலை தெய்வீக தூய்மையின் சின்னமாகும். லட்சுமணன் புன்னகையுடன் காணப்படுகிறார்.
இந்த கோயிலில் உள்ள ராமர், பக்தர்களின் துயரங்களைப் போக்குபவராகக் கருதப்படுகிறார். வேதம், இசை, கதாசொற்பொழிவு, நாமசங்கீர்த்தனம் போன்றவற்றில் புகழும் வெற்றியும் பெற்று பேரின்பம் பெற இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். இங்கு சந்நிதியில் கொடுக்கும் துளசி தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தக் கோவிலில் பருத்தியூர் பெரியவா ஆராதனை, ஸ்ரீஇராமநவமி, கிருஷ்ணஜயந்தி, நவராத்திரி, ஹனுமத் ஜெயந்தி பண்டிகை திருநாள் திருமஞ்சன பூஜைகள் நடைபெறுகின்றன.
தில்லைவிளாகம் வீர கோதண்டராமர் கோயில்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில் ராமருக்கு என அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். நடராஜருக்கும் இந்தக் கோவிலில் சந்நிதி உள்ளது. இந்த தில்லைவிளாகம் கோவிலில் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம்.
இங்கு ராமர் மற்றும் தில்லை நடராஜர் இருப்பதால்,
தில்லை விளாகம் என்று அழைக்கப்படுகிறது. ராவணனை வென்று சீதையை மீட்ட பின் அயோத்திக்குத் திரும்பும்போது இங்கே ஸ்ரீராமபிரான் சற்று அமர்ந்ததாகக் கூறப்படுகிறது. கருவறையில் கற்சிலைகளே கிடையாது. இடமிருந்து வலமாகச் சீதை, ஸ்ரீராமர், லக்குவணன் ஆகியோர் விக்கிரகங்கள் பஞ்சலோகத்தால் ஆனவை. இந்த ராமர் சிலை சுமார் 4 அடி உயரம் இருக்கும். இவ்வளவு பெரிய பஞ்சலோக சிலையைக் காண்பதரிது. வலக் கையில் அம்பும் இடக்கையில் வில்லுமாக வெகு கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் ஸ்ரீராமபிரான். ஆகவே வீரவீகோதண்டராம சுவாமி என்ற திருப்பெயரைப் பெற்றிருக்கிறார். சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ ஆஞ்சநேயர் ஒருகை பொத்தி, ஒரு கையை கீழே வைத்து கட்டளையி டுங்கள் எனச் செய்தி கேட்பது போன்று உள்ளார்.
கால் சிறப்பு: வலது காலில் பச்சை நரம்பும், இடது காலில் தேமல் மச்சம் மற்றும் வடுக்களும், தாயார் கட்டிய ரக்ஷாபந்தனமும் உள்ளது. இந்தக் கோவிலில் இராம நவமி, ஆடி, தை அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி உள்ளிட்ட திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
திருமணம் பாக்கியம் கிடைக்க, மனச் சஞ்சலம் நீங்க, கோர்ட் விவகாரம் தீர, புத்திர பாக்கியம் கிடைக்க, நவகிரக தோஷ பீடைகள் தீரவும் இங்குப் பிரார்த்தனை செய்கிறார்கள்.
வடுவூர் கோதண்டராமர் கோயில்:
இக்கோயில் திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் வடுவூர் என்னுமிடத்தில் உள்ளது. இந்தக் கோயில் தட்சிண அயோத்தி எனவும் மக்களால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் மூலவராக கோதண்டராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். இந்தக் கோயிலின் உத்ஸவர்... ஸ்ரீராமரே உருவாக்கித் தந்தருளிய விக்கிரகம் என்கிறது ஸ்தல புராணம். வனவாசம் முடித்தபிறகு, இராமபிரான் அயோத்திக்குப் புறப்படத் தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். இராமர் தன் உருவத்தைச் சிலையாகச் செய்து, தான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார்.
இந்தக் கோயிலில் இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, திருவிழாக்கள் இங்குச் சிறப்பான முறையில் நடைபெறுகின்றது. இந்த ராமரிடம் வேண்டிக்கொள்ளப் பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறப்பார்கள், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் நாம் வேண்டியது நிறைவேறினால் திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் பழக்கமும் உண்டு.
இந்த பஞ்சராம திருத்தலங்களை ஒரே நாளில் தரிசித்து பஞ்ச ராமரின் அனுக்கிரகமும், வேண்டியவை அனைத்தும் கிடைக்கப்பெற்று, வாழ்வில் நலம் பெறுவோம்!!
Leave a comment
Upload