தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை 34 -மரியா சிவானந்தம்

20250728184824911.jpg

தினை விளையும் வயல் அவர்கள் தினமும் சந்தித்துக் கொள்ளும் இடமாக இருந்தது.

அவள் தந்தை விதைத்த விதைகள் பயிராகி விளைந்து, பால் பிடித்து கதிராகி, கதிர் முற்றி அறுவடைக்குக் காத்திருந்தது

அதுவரை அந்த தினைப்புனத்தை காக்கும் சாக்கில் தலைவி அங்கு வந்து பறவைகளையும்,கிளைகளையும் ஓட்டிக் கொண்டு இருப்பாள்.

தலைவன் அங்கே வந்து அவளுடன் காதல் மொழி பேசிக் கொண்டு களித்திருப்பான்.

ஒருநாள் அந்த வயலை அறுவடை செய்ய வந்து விட்டனர் .

காதலரின் மனதுக்கு நெருக்கமான அந்த இடத்தில் இனி அவர்கள் சந்திக்க முடியாதவாறு இருந்தது

காதலி துயர் கொண்டாள் .தோழி அவளைத் தேற்றுகிறாள். அவர்கள் பேசுவதைத் தலைவன் ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறான்.

தலைவியின் முகக்குறிப்பை அறிந்த தோழி, அவளது வாட்டத்தைப் போக்கும் வண்ணம் பேசுகிறாள் :

" குறிஞ்சி நில மக்கள் உன்னிடம், 'தட்டை என்னும் கிளியோட்டும் கருவியைக் கையில் வைத்துக் கொண்டு இந்த தினைப்புனத்தில் காவலுக்கு இருந்த கொடிச்சியே, நீ வீட்டுக்குச் செல்' என்று கூறி விட்டனர். அவர்கள் தினைக்கதிர்களை அறுவடை செய்யவும் தொடங்கி விட்டனர்.

நமது தந்தை விதைத்த வயலில் வளர்ந்த தினையைக் கொத்த வரும் சின்னஞ்சிறு கிளிகளை இனி எப்படி அச்சுறுத்த முடியும்?

முற்றி , பாரம் சுமந்த கதிர்களை அறுவடை செய்த பின்னர் அந்த வயலானது திருவிழா முடிந்த பின்னர் தன் அழகை இழந்த ஊர்த் திடலைப் போல பொலிவிழந்துக் காணப்படுகிறது.

ஒளிமிக்க வளையல்களை அணிந்துக் கொண்டு தினைக்கொல்லையின் மேற்பரணில் நின்று கிளிகளை ஓட்டிக் கொண்டு நீ காவல் காக்கும் நிலை இனி இல்லை .

காவல் காக்கும் உன்னைத் தினமும் காலையில் வந்துப் பார்த்த தலைவனும் இனி வருவதற்கு இல்லை " என்றாள் தோழி கவலையுடன்.

இனி காதலர்கள் ஒருவரை ஒருவர் தினமும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என்பதைத் தெளிவாக்கினாள் தோழி.

மறைந்திருந்துக் கேட்டுக் கொண்டு இருந்த தலைவன் , தோழியின் கூற்றில் இருந்த உட்பொருளைப் புரிந்துக் கொண்டான் .

"விரைவில் மணம் முடித்துக் கொள்வேன்" என்று மனதில் உறுதி கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றான்.

இந்த குறிஞ்சி நிலப்பாடலை இயற்றியவர் 'உரோடகத்து சுந்தரனார்' என்னும் புலவர்.

அறுவடை முடித்த வயலைத் திருவிழா முடிந்த திடலுக்கு ஒப்பிடுவது ஓர் அழகான உவமை .

தந்தை வித்திய மென் தினை பைபயச்

சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ

''குளிர் படு கையள் கொடிச்சி செல்க'' என,

நல்ல இனிய கூறி, மெல்லக்

கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல்

சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி

விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,

பைதல் ஒரு நிலை காண வைகல்

யாங்கு வருவது கொல்லோ தீம் சொல்

செறி தோட்டு எல் வளைக் குறுமகள்

சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?

நற்றிணை 306

மேலும் ஒரு நயமான பாடலுடன் சந்திப்போம்

தொடரும்