தொடர்கள்
அனுபவம்
அனுபவம் பழமை… அவரிடம் கண்டேன்! – மோகன் ஜி

20251012223655606.jpg

நேற்று எழுபதாவது திருமண நாளைக் கொண்டாடும் தம்பதிகளைப் பார்க்கப் போயிருந்தேன். அந்நாளில் மும்பையில் பிரபலமான வக்கீலாகத் தொழில்புரிந்தவர்.

காலை. நடையில் தினமும் எதிர்படும் சுவாரஸ்யமான உரையாடல்காரர்.

இன்னொரு நண்பரும் வந்திருந்தார். பல வகையான இனிப்புகளும், குஜராத்தி நம்கீன்களுடனும் உபசரித்து திக்குமுக்காட வைத்த அந்த தம்பதிகள் சாப்பிடுவதோ அதிகமில்லை.

அவருடைய கிண்டலும் கேலியுமான பேச்சில் பலவற்றை அறிவுரையாகவே எடுத்துக் கொள்ளும் வகையில் இருந்தது.

குறிப்பாக, அறுபதைக் கடந்தவர்களுக்கு அவை மிகவும் பொருந்தும்.

அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

- இயன்றவரை பிறரிடம் எந்தப் பொருளையும் ஆசைப்பட்டுக் கேட்டோ, அன்பளிப்பாகவோ பெறாதீர்கள்.

- மனைவியைக் கணவனோ, கணவனை மனைவியோ பிறருக்கு எதிரில் விட்டுக் கொடுக்காதீர்கள்.

- மனைவி சொல்வது ஏற்புடையதாக இல்லை என்றாலும் உடனடியாக மறுத்துப் பேசாதீர்கள். அங்கே தான் சண்டைகள் ஆரம்பமாகின்றன.

- போட்டதைச் சாப்பிடுங்கள். என்ன சமைக்கட்டும் என்று கேட்டாலொழிய அதைப் பண்ணு இதைப் பண்ணு என்று ஆர்டர் போடாதீர்கள்.

- முடிந்தவரையில் சேர்ந்தே பயணங்களை மேற்கொள்ளுங்கள்.

- பிள்ளைகளுக்கு எந்த ஆலோசனைகளையும் சொல்ல வேண்டாம். வற்புறுத்திக் கேட்டாலும் ‘இந்த விதம் செய்தாலும் நல்லாயிருக்கும்’ என்பதுபோல உங்கள் கருத்தை திணிக்காத வகையில் கூறுங்கள்.

- பிள்ளை தன் மனைவியோடு வாக்குவாதம் செய்யும்போது வாக்கிங் கிளம்பி விடுங்கள். அல்லது சிவசிவா என்று உங்கள் அறையில்போய் உட்கார்ந்து கொள்ளுங்கள். அங்கு பஞ்சாயத்துப் பண்ண மூக்கை நுழைக்காதீர்கள்.

- உங்கள் பேரப்பிள்ளைகளை அவர்கள் கண்டிக்கும்போது நடுவே போக வேண்டாம்.

- பேரன்பேத்திகள் வளர்ந்து விடுகிறார்கள். ஆனால் தாத்தா பாட்டிகள் வளர்வதில்லை. பேரன் நாலுவயதாக இருக்கும்போது கொஞ்சிய அதே விதத்தில் தான் அவர்களுக்குப் பத்து வயதாகும்போது கூட நடந்துகொள்ளும் தாத்தா பாட்டிகளே பெரும்பாலும். அதைப் பேரப்பிள்ளைகள் விரும்புவதில்லை. விலக்கம் கொள்கிறார்கள்.

- உங்கள் கரிசனத்தையும் அன்பையும் வெளிப்படுத்த, வளவளவென்று பேசத் தேவையில்லை. ஒரு புன்னகையோ மென்தொடுகையோ போதும்.

- வீட்டுப் பணியாளர்களிடம் சிநேகத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் நல்லது கெட்டதிற்கு இயன்ற பொருளுதவி செய்யுங்கள்.

- அந்த நாளில்…’ என்று வீட்டிலும் வெளியிலும் உங்கள் பிரதாபங்களைப் பேசாதீர்கள். யாருக்கும் அவற்றில் ஆர்வமில்லை.

- எதிலும் மிதமான அணுகுமுறையைக் கையாளுங்கள்.

- தெய்வத்தை உங்கள் நண்பனாக பாவனை கொள்ளுங்கள். நிறைய பூஜை புனஸ்காரங்களை இழுத்துவிட்டுக் கொண்டு லோல் படாதீர்கள்.

- நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். முடியவில்லை என்று முடங்காதீர்கள்.

- உங்கள் நாக்கு கேட்டு விரும்பிச் சாப்பிடுவதையெல்லாம் உங்கள் வயிறு ஜீரணிக்கப் படாதபாடு படும். கவனமாக ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

- இவ்வளவு நேரம் இப்படி நான் அளந்தது போல யாரையும் பிடித்து வைத்துக் கொண்டு உரையாற்றாதீர்கள். பிறகு உங்களைக் கண்டாலே பதற்றம் கொள்வார்கள்!

விடைபெறுகையில் இன்னொரு இனிப்பு வகையோடு வழியனுப்பினார்.

என்னையும் கொஞ்சம் மாத்திக்கணும் போல இருக்கே!!