சந்திப்பு

நவம்பர் 5 அன்று உடுப்பியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின், மாலை நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலுக்கருகே தெப்பக்குளத்தை ஒட்டிய சிறு வீதி வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தேன்.
அங்கு, சிறு கூட்டமொன்றில் சத்தம் மிகுதியால் ஈர்க்கப்பட்டேன். அருகில் சென்று பார்த்தேன்.
ஒரு கணம் ஆடிப்போய் விட்டேன்.
கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். பார்ப்பது கனவா? அன்றி நனவா?
பின்ன என்னங்க?
ஷெர்வாணி பைஜாமாவோடு கழுத்து அணைத்து இடுப்பு வரை நீட்டாக மடித்து இரு புறமும் தொங்கும் அங்கவஸ்த்திரம் சஹிதம் மோடி நின்றுகொண்டிருந்தார். க்ஷண நேரத்தில் குழப்பத்திலிருந்து மீண்டேன்.
சே சே இருக்காது. அவரு எங்க இங்க இப்ப, அதுவும், இந்த சின்ன கூட்டத்தில், கலாய்க்கப்பட்டவாரே…
புடை சூழ டிப் டாப்பாக கண் கொத்தி பாம்புகளாக வலம் வரும் NSG கமாண்டோக்களக் காணோம்…..என்றே உள்வாங்கிக் கொண்டிருக்கையிலேயே, பக்கத்தில் இருந்த ஸ்ரீகிருஷ்ணன் கோயிலின் கோசாலை பசுவின் ம்ம்மா..ஆ..ஆ…ஆ… என்னை நிலை நிறுத்தியது.
இந்த சிறு கூட்ட கேலியில் சிறிதும் தொட்டுக்கொள்ளாத பிஸியான கடை சிப்பந்திகளோ, பொருள் வாங்க வந்த சுற்றுலா பயணிகளோ போனதும் எனது நிலைமையை சுதாரித்தது.
ஏ மோடி..ஹா ஹா..மோடி..என்ற கோஷங்களுக்கிடையே ஹாய் மோடி என்றே அவரிடம் கை குலுக்க கரம் நீட்டினேன், வாய் நமஷ்கார் என்றது.
அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க எனது நமஷ்கார் அவருக்கு உதவி இருக்கவேண்டும், சட்டென எனது கரத்துடன் தனது வலது கரத்தினால் பிடித்துக் கொண்டார்.
கூட்டம் சற்று விலகிக் கொண்டது.
எப்பிடி..இப்பிடி..இந்த வேடம் உங்களுக்கு அமைந்தது? என்றேன்.
"ஹா..ஹா… அது தான் விதி என்பது.
ஏழு வருடங்களுக்கு முன் வடக்கில், ஹரித்வாரில் ஒன்பது தினங்களுக்கு தொடர்ந்து ரயிலில் சமயலறையில் பணி புரிந்து வந்தேன். சவரம் செய்யாத முகத்தில் வளர்ந்துவிட்ட நரைமுடி பிரதமர் மோடி ஜியின் முக அமைப்புடன் ஒத்துப் போனதை என்னைப் பார்த்த அங்குள்ள மக்களும் நண்பர்களும் பலரும் குறிப்பிட்டுக் கூறினார்கள். மேலும், இந்த தாடியை எடுத்துவிடாதீர்கள். இதையே நன்கு கவனித்து வாருங்கள் என்றும் கூறினார்கள்.
எனக்கு நரேந்திர மோடி பிடித்த தலைவரும் ஆவார். பீஜேபீ கட்சியின் அபிமானி வேறு.
அதன்படியே, ஆடைகளும் குர்த்தா ஷெர்வாணி பைஜாமா அணிய ஆரம்பித்தேன்.
அதுவே, எனது வாடிக்கையாகிவிட்டது".
நடை உடை பாவனை, இடது கை இரு விரலை V என வைத்து அசைப்பதில் பார்ப்பவர்களுக்கு முதல் இரு க்ஷணங்கள் ஆச்சர்யமே மூழ்கடித்துவிடும்.
செல்லுமிடமெல்லாம் இவருடன் செல்ஃபிக்கு ஏக கிராக்கி. நான் உள்பட.

செல்ஃபி, தவிர்த்து, அவரை சைட் போசிலும் பாருங்களேன்..

இதனால் செல்லுமிடமெல்லாம், வரவேற்பு தான். கர்னாடகத்தில் மட்டுமில்லமல் குஜராத்திலும் எலக்ஷன் சமயத்தில் முக்கியமாக அழைக்கப்படுகிறார்.
உங்கள் ஊர் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டேன்.
உடுப்பியின் அருகில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் இவரின் பெயர் சதானந்த் நாயக். இவரது தொழில் சமையல் வேலை.
நான் வாழ்த்து கூறி விலக, மீண்டும் மோடி பிஸி. !!!

Leave a comment
Upload