
13 வயது குறும்புக்காரச் சிறுவன் பென். ஒற்றைப் பெற்றோராய் அவன் தாய் அவனை வளர்த்து வருகிறார். பொறுப்பின்மை அவனிடம் மிக அதிகம். நல்ல நண்பர்களும் அவனுக்கு கிடையாது. ஒரு சூழலில் அவன் வாழ்க்கையில் ஸ்மிட்டி என்ற ஒரு அன்பான நாய் நுழைகிறது. அது அவனுடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றுகிறது. நட்பு , குடும்பம் மற்றும் பொறுப்பின் முக்கியத்துவத்தை அவன் எவ்வாறு கற்றுக் கொள்கிறான் என்பதை உணர்ச்சிகரமாகச் சொல்லும் ஒரு திரைப்படம் தான் ஸ்மிட்டி.
பெஞ்சமின் ( பென் ) என்ற 13 வயது சிறுவனுக்கு, நல்ல நண்பர்கள் கிடையாது. கிடைக்கும் நண்பர்களும் இவனை ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டி விடுபவர்களாகவே இருக்கிறார்கள். புதுப்பள்ளியில் முதல் நாள் கேன்டீனில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, டியா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. அவள் இவனிடம் பேசிவிட்டு, சிறிய தொலைவில் வேறு ஒரு மேஜையில் அமர்ந்திருக்கும், சில மாணவர்களைக் காட்டுகிறாள். வாழ்க்கையில் அனைவருக்கும் நண்பர்கள் தேவை. ஆனால் இவர்களை எப்போதும் உன் நண்பர்கள் ஆக்கிக் கொள்ளாதே என்று எச்சரிக்கிறாள்.
டியா அந்த இடத்தை விட்டு அகன்ற பிறகு, அங்கிருக்கும் ஒரு மாணவன் இவனிடம் வந்து நட்பு பாராட்டுகிறான். அவன் பெயர் பீபூ. ஏன் தனிமையில் இருக்கிறாய். எங்களிடம் நீ ஏன் நண்பனாகக் கூடாது? என்று கேட்கிறான். அதனால் என்ன நண்பர்களாக இருப்போமே என்கிறான் பென். இன்று இரவு எங்களுடன் வெளியே வருகிறாயா? உனக்கு மறக்க முடியாத ஒரு சிறந்த அனுபவத்தைத் தருவோம் என்கிறான் அந்தப் புதியவன். இவனும் வருவதாக ஒப்புக்கொள்கிறான்.
அவர்கள் இவனை ஒரு உயர்தர உணவகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அந்த உணவகத்தில் யாரும் இல்லை. அங்கிருக்க கூடிய பீங்கான் பொருட்களை உடைக்கிறார்கள். ஒரு விளையாட்டுக்காகத்தான் என்று இவனிடம் சொல்கிறார்கள். இவனும் அவர்களுடன் சேர்ந்து சில தட்டுகளை உடைக்கிறான். பின்பு பென்னை ஒரு அறைக்குள் உணவிருப்பதாக அழைத்துச் சென்று, அவனை உள்ளே விட்டுப் பூட்டி விடுகிறார்கள். மேலும் அங்கிருக்க கூடிய மேஜை ,கண்ணாடி கதவுகள் ,ஜன்னல்கள் போன்றவற்றை உடைத்து அந்த உணவகத்தை மிக மோசமாகச் சேதப்படுத்தி விடுகிறார்கள்.
காவல்துறையினர் வந்து அந்த அறைக்குள் இருக்கும் பென்னை கைது செய்கிறார்கள். அப்போதுதான் அவனுக்கு தெரிகிறது, பள்ளி உணவகத்தில் இவனுடன் வந்து பேசிய டியாவின் பெற்றோர்களின் உணவகம் தான் அது. அவளைப் பழிவாங்குவதற்காக இவனை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை அறிகிறான்.
நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்பு பென்னும் அவன் அம்மா அமண்டாவும் அமர்ந்து இருக்கிறார்கள். அவனுடைய அம்மா செவிலியர் பட்டப்படிப்பு படித்துவிட்டு, அந்த வேலைக்குச் செல்லாமல், ஒரு உணவகத்தில் வேலை செய்வதைச் சொல்கிறார். தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கர்ப்பம் ஆனதும் தன் கணவன் தன்னை விட்டுச் சென்று விட்டதாகவும் நீதிபதியிடம் அவன் அம்மா தெரிவிக்கிறார்..
அப்பாவும் இல்லாமல் அம்மாவுடன் போதிய நேரம் செலவிடக் கிடைக்காததால் , இந்தக் குழந்தை இப்படி பொறுப்பற்று இருக்கிறான் என்பதை நீதிபதி உணர்கிறார். அமண்டாவுக்கு யாரேனும் உறவினர்கள் இருக்கிறார்களா என்று கேட்கிறார். அப்போதுதான் அவனுக்கு ஒரு தாத்தா இருப்பதும், ஒருமுறை கூட தாத்தாவை அவன் பார்த்ததில்லை என்பதை நீதிபதி அறிகிறார்.
இந்தக் குழந்தை தவறு செய்யவில்லை என்றாலும் தவறான சகவாசம் இவனை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்பதை அவருடைய அனுபவம் உணர்த்துகிறது.
இவனுடைய குற்றத்திற்கு மூன்று வருடம், சிறார் காப்பகத்தில் இருக்க வேண்டும். அல்லது இவனுடைய கோடை விடுமுறையின் மூன்று மாத காலத்தை , இதுவரை இவன் பார்த்தே அறியாத தாத்தாவுடன் கழிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்.
மூன்று வருடம் காப்பகத்தில் இருப்பதைவிட, தன் தந்தையிடம் இருப்பது தான் சிறந்தது என்று எண்ணி அவனைத் தன்னுடைய கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார் அவனுடைய அம்மா. அவன் தாத்தா ஒரு விவசாயி.
முதன்முதலாக அம்மாவுடன் தாத்தா வீட்டிற்கு வருகிறான். இதுவரை அவன் தாத்தாவை பார்த்ததும் இல்லை. அவரைப் பற்றி அதிகமாகவும் அவனுக்கு தெரியாது.
13 வருடங்களுக்குப் பிறகு அமன்டா தந்தையின் முன் நிற்கிறாள். தன் தாத்தா மிக கண்டிப்பானவர் என்பதை முதல் உரையாடலிலேயே கண்டு கொள்கிறான். இவருடன் இருக்க முடியாது என்று அம்மாவுடன் வாதம் செய்கிறான். அவர் என்னுடைய தந்தை. நான் செய்த தவறுக்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உனக்கு நல்ல அனுபவங்கள் அவர் மூலம் இங்கு கிடைக்கும். ஆனால் ஒரு வார்த்தை கூட அவரை மரியாதை குறைவாக நீ பேசுவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று எச்சரிக்கை செய்கிறாள் அமன்டா. பென் தூங்கி எழுவதற்கு முன்பே அங்B0ிக்கை செய்கிறாள் அமன்டா. பென் தூங்கி எழுவதற்கு முன்பே அங்கிருந்து அவள் கிளம்பி விடுகிறாள்.
அடுத்த நாள் காலை அவன் எழுந்து தயாராகி, உணவு மேஜைக்கு வருகிறான். அவனுடைய தாத்தா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். என்னுடைய உணவு எங்கே? என்று கேட்கிறான். நான் உன்னுடைய சமையல்காரன் அல்ல .உனக்கு வேண்டிய உணவை நீ தான் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று தாத்தா சொல்ல இவன் திகைத்துப் போகிறான். மைக்ரோவேவ் ஓவனில் இவனுக்கு தேவையான உணவை சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது , அதிக சூடாகி ஓவன் வெடித்து விடுகிறது. அதையும் நீ தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். உண்மையிலேயே இவர் தாத்தா தானா? இரக்கமற்றவராக இருக்கிறாரே என்று பென் நினைக்கிறான். தன் நிலையை எண்ணி வருத்தம் அடைந்து அழுகிறான்.
ஒரு கைக்குட்டையை கொடுத்து கண்ணீரைத் துடைத்துக் கொள்ளச் சொல்லி, உனக்கு ஒரு நண்பனை கொண்டு வரலாம் வா என்று அழைக்கிறார்.
அவர் அழைத்துச் சென்றது ஒரு நாய்கள் காப்பகம். நான் உன்னுடைய தாத்தா உனக்கான நண்பனாக இருக்க முடியாது. எப்போதும் உனக்கு துணையாய் இருக்க இங்கு ஒரு நாயைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். இறுதியில் ஒரு கிராமத்து நாயை அவர் தேர்ந்தெடுக்கிறார்.
ஆனால் அவனுக்கு அந்த நாயைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. உடம்பு முழுக்க சேறோடும் அழுக்கோடும் அந்த நாய் இருக்கிறது. கிராமத்தில் இருக்கும் நாய் அப்படித்தான் இருக்கும். ஆனால் இதுதான் உனக்கு சிறந்த துணையாக இருக்கும் உன்னை பாதுகாக்கும் என்று தாத்தா உறுதியாகச் சொல்லி விடுகிறார்.
பென் மற்றும் அந்த நாயை அழைத்துக் கொண்டு ஒரு பழமையான பொருட்கள் விற்கும் கடைக்குச் செல்கிறார். அது தாத்தாவின் நண்பர் ஸ்மித்தின் கடை. அங்கு நாய்க்குத் தேவையான கழுத்துப்பட்டை வாங்க வந்திருக்கிறார்கள்.
அந்த நாய்க்கு ஒரு பெயர் வைக்கும் படி தாத்தா கேட்கிறார். எனக்கு அந்த நாயைச் சுத்தமாகவே பிடிக்கவில்லை. நீங்கள் தானே அந்த நாயைத் தேர்ந்தெடுத்தீர்கள். அதற்குப் பெயர் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாய் சொல்கிறான்.
அது உன்னுடைய நாய். உன்னுடைய நண்பன். நீ அதற்கு பெயர் வைக்கும் வரை அதற்கு நாய் (dog) என்று பெயர் இருக்கட்டும் என்று தாத்தா சொல்லிவிடுகிறார்.
அந்த நாய் எப்போதும் அவனை ஒட்டிக்கொண்டு அவனுடனேயே இருக்கிறது. பகல் நேரத்தில் தாத்தாவிற்கு உதவியாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில் புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்லி விடுவார். அப்போதெல்லாம் இந்த நாய் அவனை கவனித்துக் கொண்டே இருக்கும்.
அந்த நாயை ஒருமுறை ஏமாற்றிவிட்டு இவன் ஸ்மித்தின் கடைக்கு சென்று விடுகிறான். அங்கு இருக்கக்கூடிய கிடார் இவனை மிகவும் ஈர்க்கிறது. அதை வாங்க விலை கேட்கிறான். அதற்குள் தாத்தாவும் நாயும் அங்கு வந்து விடுகிறார்கள்.
அந்த கிடாரின் விலை 700 டாலர். அதை வாங்கித் தரும்படி தாத்தாவிடம் கேட்கிறான். எந்தவித உழைப்புமின்றி, ஒரு பொருளை வேண்டும் என்று அடம் பிடிப்பது தவறு. இந்த கிடார் உனக்கு வேண்டுமென்றால் நீ உழைத்து சம்பாதித்து வாங்கிக் கொள் என்று வாங்கித் தர மறுத்து விடுகிறார்.
உடனே பென்னுக்கு கோபம் வருகிறது. நீங்கள் எல்லாம் ஒரு தாத்தாவா? 13 வருடங்கள் எங்களை சந்திக்காமல் இருந்ததோடு, ஒரு கிடார் வாங்கிக் கொடுக்க இத்தனை பேசுகிறீர்கள். நீங்கள் ஒரு இரக்கமற்ற மனிதர். அதனால் தான் என் அம்மா உங்களை வெறுத்து வெளியே சென்று விட்டார் என்று கோபத்தில் கத்துகிறான். தாத்தா உடைந்து போய் நிற்கிறார்.
அந்த நிலைமையை ச சமாளிக்க அவரின் நண்பர் ஸ்மித் , பென் எனக்கு வேலை செய்து தரட்டும். நான் அவனுக்கு சம்பளம் தருகிறேன் என்று சொல்கிறார்.
அடுத்த நாள் காலையிலிருந்து நாயோடு கிளம்பி அங்கு வேலைக்கு வருகிறான். மின்னல் மற்றும் இடிதாக்கி பட்டுப்போன ஒரு பெரிய மரத்தைச் சுற்றி குழி தோண்டுவதுதான் இவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை. சுற்றிலும் குழி தோண்டிய பிறகு சுலபமாக அந்த மரத்தை வேரோடு சாய்த்து விடலாம் என்கிறார் ஸ்மித். அதற்கு பிறகு அந்த இடத்தில் வேறு ஒரு மரக்கன்றை நட வேண்டும் என்பது ஸ்மித்தின் ஆசை.
வேலைக்குப் போகும் போது சில குறும்புக்கார நண்பர்கள் நட்பாகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஸ்மித்தின் கடைக்குச் செல்லாமல் அவர்களோடு ஆற்றுக்கு மீன்பிடிக்க செல்கிறான். அவன் செல்வதைத் தடுத்த நாயைப் பார்த்து, நான்தான் உன்னுடைய முதலாளி . நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும். நான் வரும்வரை இந்த இடத்தை விட்டு நீ வேறெங்கும் செல்லக்கூடாது என்று சொல்லிச் சென்று விடுகிறான். சில மணி நேரங்கள் தாமதமாக ஸ்மித்தின் கடைக்கு வருகிறான்.
வேலை நேரம் முடிந்ததும் அவனை அழைத்துச் செல்ல தாத்தா வருகிறார். அவன் தாமதமாக வந்ததை தாத்தாவிடம் சொல்லாமல் அவனைக் காப்பாற்றுகிறார் ஸ்மித். ஸ்மித் அவன்மீது மிக அன்பு பாராட்டுகிறார். நான் இங்கு என்று தாத்தா கேட்கிறார். நாயை விட்டு வந்த இடத்தை நோக்கி அவனும் தாத்தாவும் செல்கையில், பெரும் மழையில் நனைந்து கொண்டே அந்த நாய் அங்கேயே நிற்கிறது.
அதைப் பார்த்ததும் அவன் மனம் உடைந்து விடுகிறான். அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அங்கேயே நாய் இருந்ததை உணர்கிறான். எப்பொழுதும் அவன் மனப்பூர்வமாக நன்றி, மன்னிப்பு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டான். தாத்தா பலமுறை அவனுக்கு அறிவுரை சொல்லியும் இருக்கிறார். ஆனால் இப்பொழுதுதான் முதல்முறையாக முழு மனதோடு தாத்தாவிடமும் அந்த நாயிடமும் மன்னிப்புக் கேட்கிறான்.
அந்த நிகழ்வுக்குப் பிறகு அவனுக்கும் நாய்க்குமான பிணைப்பு அதிகரிக்கிறது. ஸ்மித் மற்றும் தாத்தாவுடன் அன்போடு நடந்து கொள்கிறான். அவன் ஆசைப்பட்ட கிடாரை வாங்க இன்னும் சிறிது பணமே தேவையாக இருக்கும் சூழலில், திடீரென்று ஸ்மித் மாரடைப்பால் இறந்து விடுகிறார்.
தாத்தா தன்னுடைய நல்ல நண்பரை இழந்தது அவனுக்கு மிக வேதனையாக இருக்கிறது. அவனும் தாத்தாவும் அந்தப் பட்டுப்போன மரத்தை அகற்றி அங்கே ஸ்மித்தின் ஆசைப்படி வேறொரு மரத்தை நட்டு வைக்கிறார்கள்.
இதற்கிடையில் அவன் அம்மா ஒருமுறை தாத்தாவின் பண்ணைக்கு வருகிறார். கூடவே அவன் அம்மாவை மணந்து கொள்ள விரும்புவதாக ஒரு நல்ல மனிதரும் உடன் வருகிறார். அவர் அங்கு சில நாட்கள் தங்கி இருந்ததில் பென்னுக்கும் தாத்தாவுக்கும் அவரை மிகப் பிடித்து விடுகிறது.
பென்னின் கோடை விடுமுறை முடிந்ததும் அவனை அழைத்துச் செல்ல அம்மாவும் அவரின் நண்பரும் வருகிறார்கள். அந்த நாயை அவனுடன் அழைத்துச் செல்லலாம் என்று தாத்தா அனுமதி தருகிறார். ஆனால் அது கிராமத்து நாய் நகரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அங்கிருக்கும் விதிமுறைகள் அதற்கு தெரியாது. மிக கவனமாக அதைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து அனுப்புகிறார்.
அவனும் அந்த நாயை மிக நேசிக்கிறான். தன்னுடைய பள்ளி, அம்மா வேலை செய்யும் இடம், தான் விளையாட செல்லும் பூங்கா என்று அனைத்து பகுதிகளுக்கும் கூட்டிச் சென்று காட்டுகிறான். அந்த நேரத்தில் இவனை மாட்ட வைத்த சிறுவர்கள் அங்கு வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஜெயிலுக்கு சென்று வந்தாயா ? என்று அவனை கிண்டல் செய்கிறார்கள். பென்னை அடிக்கவும் முயல்கிறார்கள். அவனைக் காப்பாற்றுவதற்காக ச சாலையைக் கடந்து நாய் ஓடிவரும் பொழுது , எதிர்பாராத ஒரு வாகனத்தில் அடிபட்டு விபத்துக்குள்ளாகிறது.
பென் உடைந்து போய் கதறுகிறான். அவன் வாழ்க்கையில் அவனுக்கு முதன் முதலில் கிடைத்த ஒரு நல்ல நண்பன் அந்த நாய் தான். தாத்தாவும் இதைக் கேள்விப்பட்டு அங்கே வருகிறார். அந்த நாய்க்கு சிகிச்சை அளிப்பவர் அம்மாவின் நண்பர். அவர் ஒரு விலங்குகள் நல மருத்துவர். பென் அல்லும் பகலுமாக நாயின் அருகிலேயே இருந்து அந்த நாயைக் கவனித்துக் கொள்கிறான்.
அவனுடைய அன்பும் வேண்டுதலும் அந்த நாயைப் பிழைக்க வைக்கிறது. தன்மீது முதன்முதலாக அன்பும் அக்கறையும் காட்டிய தாத்தாவின் நண்பரான ஸ்மித்தின் நினைவாக அந்த நாய்க்கு ஸ்மிட்டி என்று பெயர் சூட்டுகிறான்.
அப்போது அவன் ஆசைப்பட்ட கிடாரை தாத்தா அவனுக்கு பரிசளித்து கிட்டார் வாசிக்கவும் கற்றுத் தருகிறார்.
ஸ்மிட்டி திரைப்படம் கடின உழைப்பு,ஒழுக்கம், விடாமுயற்சி, குடும்பம் மற்றும் நட்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசும் ஓர் அருமையான படைப்பு. பொறுப்பைக் கற்றுக்கொள்வது, பெரியவர்களை மதிப்பது மற்றும் விலங்குகளை நேசிப்பது போன்ற நேர்மறையான எண்ணங்களை குழந்தைகளுக்கு இந்தப் படம் விதைக்கும்.

Leave a comment
Upload