
உலகமெங்கிலும் இசைத் துறையினரால் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘கிராமி’ விருதுகளின் 68ம் ஆண்டு விழா, 2026-ம் ஆண்டு, பிப்ரவரி 1-ம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. தற்போது இதற்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சிதார் இசைக்கலைஞர் அனுஷ்கா சங்கர், ஜாகிர் உசேன் அங்கம் வகிக்கும் ‘சக்தி’ இணைவு இசைக்குழு, மதுரையை சேர்ந்த பியானோ பெண் இசைக்கலைஞர் சாரு சூரி மற்றும் இசையமைப்பாளர் சித்தாந்த் பாட்டியா உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்திய கலைஞர்கள் பரிந்துரை செய்யப்பட்டு, மீண்டும் உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பிரபல சிதார் இசைக்கலைஞர் அனுஷ்கா சங்கர், தனது ‘சாப்டர் 3: வி ரிட்டர்ன் டு லைட்’ எனும் ஆல்பத்துக்காக ‘சிறந்த உலக இசை ஆல்பம்’ பிரிவிலும், ஆலம்கான் மற்றும் சாரதி கோர்வார் ஆகியோருடன் இணைந்து உருவாக்கிய ‘டே பிரேக்’ என்ற பாடலுக்காக, சிறந்த உலக இசைக்கான பிரிவிலும் என 2 பரிந்துரைகளைப் பெற்றிருக்கிறார். இதன்மூலம் அவர் இதுவரை 13 முறை ‘கிராமி’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கடந்த 2024-ம் ஆண்டு ‘கிராமி’ விருது வென்ற ஜான்மெக்லாலின், ஜாகிர் உசேன், சங்கர் மகாதேவன் ஆகியோரை கொண்ட ‘சக்தி’ குழு, ‘மைண்ட் எக்ஸ்ப்ளோஷன்’ எனும் நேரடி ஆல்பத்துக்காக ‘சிறந்த உலக இசை ஆல்பம்’ பிரிவிலும், மாண்டலின் மேதை யு.ஸ்ரீனிவாஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ‘ஸ்ரீனிஸ் ட்ரீம்’ பாடலுக்காக, சிறந்த உலக இசைக்கான பிரிவிலும் என 2 பரிந்துரைகளைபற் பெற்றுள்ளது.
மேலும், பண்டைய காலம் முதல் தமிழ்நாட்டில் இயல், இசை, நாடகத்துறையை வளர்த்தெடுத்து இன்றளவும் முத்துறைகளில் சிறந்து விளங்கும் மதுரையில் பிறந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் பியானோ மற்றும் ஜாஸ் இசைக்கலைஞரான சாரு சூரி, இந்திய ராகங்களையும் ஜாஸ் இசையையும் கலந்து உருவாக்கிய ‘ஷயான்’ எனும் ஆல்பத்துக்காக, ‘சிறந்த சமகால கருவி இசை ஆல்பம்’ பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதுதவிர இசையமைப்பாளர் சித்தாந்த் பாட்டியாவின் ‘சவுண்ட்ஸ் ஆஃப் கும்பா’ ஆல்பமும், ‘சிறந்த உலக இசை ஆல்பம்’ பிரிவில் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

Leave a comment
Upload