
சென்ற நவம்பர் 19, 2025 கார்த்திகை அமாவாசை. திருவிசநல்லூர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. அன்று. அங்கு, எங்கோ தெற்கு கோடியில் இருக்கும் சிறிய கிராமத்தில் கங்கை பிரவாகமாக ஓடுகிறாளே! வருடா வருடம் வரும் கார்த்திகை அமாவாசை அன்று இந்த நிகழ்வு நிச்சயம் உண்டு. இதற்கு சற்றே 300 வருடங்களுக்கு முன்னர் னடந்த வரலாற்று நிகழ்ச்சியை நினைவு கூற வேண்டும்.
திருவிடைமருதூர் என்ற ஊருக்கு அருகில் உள்ள திருவிசநல்லூர் என்ற கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதரய்யாவாள் என பிரபலமாக மக்களால் அழைக்கப் மகான் வாழ்ந்து வந்தார்.
இவர் சிறந்த மகானும் கர்நாடக இசை வல்லுனரும் கூட ஆவார்.
இவர், போதேந்திரர், நெரூர் சதாசிவ பிரமேந்திரர் ஆகிய மூவரும் சம காலத்தவர்.
கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர்.
இவர் தன் பதவி சொத்துக்களைத் துறந்து விட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் வந்து குடியேறி விட்டார்.
இவர் தினமும் அருகேயுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிக்கும் வழக்கம் கொண்டவர்.
இவரது தந்தை மறைந்த திதியான கார்த்திகை மாதத்தில் அமாவாசை நாளில் இவர் சிராத்த சமையலை தயார் செய்ய சொல்லி விட்டு காவிரிக்கு நீராட சென்றிருக்கின்றார்.
நீராடி இல்லம் திரும்பும் போது எதிரே வந்த வயதான ஏழை ஒருவர் ஐயாவாளிடம், சுவாமி எனக்கு வயிறு ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன், என கேட்கிறார்.
அவர் மீது இரக்கம்கொண்ட ஸ்ரீதர ஐயாவாள் அவரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்த போது சிராத்த சமையல் மட்டுமே தயாராக இருந்தது.
பசி மயக்கத்தில் இருந்த அந்த ஏழைக்கு சிராத்த சமையல் உணவை எடுத்துக் கொடுத்து பசியாற்ற் இருக்கிறார்.
சிராத்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத் தான் கொடுக்க வேண்டும். இது நியதி. ஆனால் இவர் அந்த நியதியை மீறிவிட்டார்.
அதனால் கடும் கோபமடைந்த சிராத்தம் செய்ய வந்த அந்தணர்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.
மேலும், நீ காசி சென்று கங்கையில் குளித்து விட்டு பரிகாரம் செய்து வந்தால் தான் நாங்கள் திதி கொடுப்போம், என்றும் கூறிவிட்டனர்.
ஒரே நாளில் எப்படி அவ்வளவு தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் சென்று நீராடிவிட்டு அன்றே திரும்பி வர முடியும்?
இதென்ன நமக்கு வந்த சோதனை? என ஸ்ரீமகாலிங்க சுவாமியை நினைத்தபடி மிகுந்த மன வருத்தத்துடன் படுத்தவர் அப்படியே அசதியில் உறங்கி விடுகிறார்.
அப்போது கனவில் தோன்றிய சிவனார் திருக்காட்சி கொடுத்து உன் வீட்டுக் கேணியில் கங்கையை யாம் பிரவேசிக்கச் செய்வோம். கவலை கொள்ளாதே! என உறுதியளித்து மறைந்து விட்டார்.
அதன்பின் ஐயாவாள் தம் வீட்டு கிணற்றருகே நின்று கங்கை அன்னையை நினைத்து உளம் உருக கங்காஷ்டகம் பாடினார்.
பாடி முடித்தவுடன் கங்கை மாதா அந்தக் கிணற்றில் எழுந்தருள அந்தக் கிணறு பொங்கி வழிந்து திருவிச நல்லூர் முழுவதும் கங்கைத் தாய் வெள்ளமாய் பாய்ந்தோடினாள்.
அதனைக் கண்ட அந்தணர்கள் ஐயாவாளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அந்தக் கிணற்றில் நீராடினார்கள்.
இந்நிகழ்வு நினைவாக இன்றளவும் அதாவது கடந்த 300 ஆண்டுகளாக கார்த்திகை அமாவாசையன்று பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமையில் இருந்தும் வந்து நீராடி செல்கிறார்கள்.
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில 8 கி மீ. தொலைவில் உள்ள திருவிசநல்லூரில் அன்றும் அங்கு ஸ்நானம் செய்ய சென்ற போது அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். சாலையின் மறுபக்கம் காவேரி நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாள். மக்கள் முதலில் காவேரியில் குளித்துவிட்டு காவிரி கரையில் அருள் பாலிக்கும் விநாயகரை தரிசித்து விட்டு ஈரதுணியுடன் ஐயாவாள் மடத்தில் உள்ள கிணற்றில் குளிக்க செல்கின்றனர்.
[கங்காஷ்டகம் பாராயணம் செய்யப்படுகிறது]
மக்கள் குளிக்க ஏதுவாக நல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காவல்துறையினர் வரும் பக்தர்களின் பாதுகாப்பை கவனித்துக்கொண்டனர். மக்கள் வரிசையில் சென்று கிணற்றை அடைந்தவுடன் அங்கு உள்ள தன்னார்வலர்கள் கிணற்று நீரை இரைத்து மக்கள் மீது பணிவாக உடல் முழுவதும் ஊற்றுகிறார்கள்.
பக்தியுடன் மக்கள் அங்குள்ள குருமார்கள் சன்னதியில் பிராத்தனை செய்துவிட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். அங்கு வருகிற அனைவருக்கும் தொடர்ந்து அன்னதானம் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருந்தது.
திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் வீட்டு கிணற்றில் கார்த்திகை அமாவாசையன்று கங்கா தர்சனம். கங்கை ப்ரவாகமாக பொங்கிவரும் அற்புத காட்சி.
இந்த திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. தினமும் புகழ்பெற்ற கலைஞர் களின் இசை நிகழ்ச்சி, மற்றும் நாம சங்கீர்தனம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
குளித்துவிட்டு வெளியே வருகின்ற மக்களின் முகத்திலும் பேச்சு களிலும் கங்கா மாதா சந்தோஷத்தை அள்ளி விட்டிருகிறாள் என்பதைப் பார்க்க முடிந்தது.

Leave a comment
Upload