
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்தன் என்பவர் எழுப்பிய பல்வேறு சந்தேக கேள்விகளுக்கு, ஆர்டிஐ மூலம் தென்னக ரயில்வே அலுவலகம் அளித்த அதிகாரப்பூர்வ பதிலே இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, தென்னக ரயில்வேயின் 5,084 கிமீ பாதையின் 90 சதவிகித இடங்களில் மின்னணு இன்டர்லாக்கிங், தானியங்கி தொகுதி சமிக்ஞை (ABS), ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு (TPWS), இந்தியாவின் சொந்த ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பான ‘கவாச்’ போன்ற உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அமைப்புகள், இன்னும் ‘வரைபடங்களில்’தான் உள்ளன எனும் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது.
இதில் மிக முக்கியமான அதிர்ச்சி தகவல்கள்: தென்னக ரயில்வேயின் 492 ரயில் நிலையங்களில், வெறும் 250 இடங்களில் மட்டுமே மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பு உள்ளது. மீதியுள்ள 242 நிலையங்கள் (49.2%) இன்னும் பழைய மெக்கானிக்கல் மற்றும் கைமுறையையே நம்பி இயங்கி வருகின்றன. மேலும், தானியங்கி தொகுதி சமிக்ஞை அமைப்புகள் 5,084 கிமீட்டருக்கு தேவையிருந்தும், 495.37 கிமீ தூரத்துக்கு (9.75%) மட்டுமே நிறைவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது, 90%க்கும் மேற்பட்ட பாதைகள் இன்னும் கையேடு சிக்னல் முறையையே பயன்படுத்தி வருகின்றன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கவாச்’ அமைப்பு 5,084 கிமீட்டருக்கு தேவை இருந்தும், தென்னக ரயில்வேயில் 1,984 கிமீட்டருக்கு மட்டுமே பணிகள் நடக்கின்றன. மீதமுள்ள 3,100 கிமீட்டருக்கு (61%) இன்னும் பணிகள் துவங்கப்படவில்லை. சென்னை-காட்பாடி, சென்னை-அரக்கோணம் ஆகிய 2 பிரிவுகளில் மட்டுமே ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து மற்ற எல்லா முக்கிய பாதைகளும் விலக்கப்பட்டுள்ளன. ‘தென்னக ரயில்வேயில் இதுபோன்ற பின்னடைவால் யாருக்கு, என்ன ஆபத்து?’ எனும் கேள்வி எழுகிறது.
இன்டர்லாக்கிங் இல்லாத ரயில் நிலையத்தில் கேட்மேன் ஒருவர் மட்டுமே கேட்டை மூடுகிறார், சிக்னலை இயக்குகிறார். இதில் ஒரு நொடி தாமதம் அல்லது கவனக்குறைவு ஏற்பட்டால்கூடி, தண்டவாளத்தில் கடக்கும் வாகனங்கள்மீது ரயில் மோதி விபத்து நடைபெறும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர எல்லைகளில் மட்டும் இதுபோன்ற மனித தவறுகளால் சுமார் 120 மனித உயிர்கள் பறிபோயின. தண்டவாளப் பகுதிகளில் ‘கவாச்’ இல்லாததால் ரயில்கள் நேரடி மோதல், தவறான சிக்னல் பாஸ் செய்தல் போன்றவை எளிதில் நிகழலாம். இதுபோன்ற நிகழ்வுகளால் பாலசோர் ரயில் விபத்து (292 உயிர்கள் பலி) போன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழ்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் தென்னக ரயில்வே அமைப்பில் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பலமுறை ‘2025-ம் ஆண்டுக்குள் முழு அளவில் கவாச்’, ‘2030-ம் ஆண்டுக்குள் 100% இன்டர்லாக்கிங்’ என்று அறிவித்துள்ளார். எனினும், தென்னக ரயில்வேயின் தற்போதைய முன்னேற்ற விகிததத்தை (ஆண்டுக்கு 300-400 கிமீ கவாச்) பார்த்தால், இப்பணிகள் வரும் 2035-ம் ஆண்டுக்குள்கூட முடியாது என்றே தோன்றுகிறது. இதில் நிதி ஒதுக்கீடு, பணி ஒப்பந்த பிரச்னை, நிலம் கையகப்படுத்துதலில் தாமதம், தொழில்நுட்ப பற்றாக்குறை போன்றவை தடைகளாக இருந்து வருகின்றன.
தென்னக ரயில்வே என்பது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில மக்களின் உயிர்நாடி. இதில், நாளொன்றுக்கு தென்னக ரயில்வேயின் செயல்பாட்டில் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனினும், இன்றைக்கும் ரயில் பயணிகளின் உயிர் பாதுகாப்பு – ஒரு கேட்மேனின் கவனமும், ஒரு சிக்னல்மேனின் விழிப்புணர்வும் மட்டுமே தீர்மானிக்கின்றன – நவீன ரயில்வே பாதுகாப்பு தொழில்நுட்பம் அல்ல என்று தமிழ்நாட்டு மக்களை ஆர்டிஐ தகவல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Leave a comment
Upload